விலங்குகள் இயற்கையின் மிகப் பெரிய கொடைகளுள் ஒன்று. அவை அன்றாட வாழ்வில் மனிதரோடு மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளன. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிக மேம்பாட்டிற்கும் விலங்குகள் பெரிதும் உதவுகின்றன. உணவு, உடை, தொழில் என பல்வேறு வழிகளில் விலங்குகள் நமக்கு இன்றியமையாத பங்களிப்பை நல்குகின்றன.
5.1 விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்கள்
பால்
பால் என்பது வெண்மையான ஒரு திரவம். இது பாலூட்டிகளின் பால் சுரப்பியிலிருந்து உற்பத்தியாகிறது. நாம் பயன்படுத்தப்படும் பாலானது பசு, எருமை மாடுகள் மற்றும் ஆடுகளிலிருந்து கிடைக்கும். பால் புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாகும். தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்லேட், பன்னீர், பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க பால் உதவுகிறது.
முட்டை
கோழி, வாத்து, வான்கோழி மற்றும் நெருப்புக்கோழிகள் போன்ற பெண் பறவைகள் முட்டையிடுகின்றன. முட்டை நம் உடலுக்குச் சக்தியையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. ஆறு கிராம் எடையுள்ள முட்டை உயர்ந்தரகப் புரதத்தைக் கொண்டுள்ளது. தினமும் முட்டையை உண்பது நல்லது.
தேன்
தேனீக்கள் மலர்களிலிருந்து நெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத் தேனாக மாற்றி தேன் கூட்டில் சேமிக்கின்றன. தேன் சிறந்த மருத்துவ குணம் மிக்கது, அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். மலைப்பகுதியில் அடர்ந்த காடுகளில் உள்ள தேன் கூடுகளிலிருந்து இயற்கையான மலைத் தேன் எடுக்கப்படுகின்றது.
இறைச்சி
விலங்குகளின் உடலின் தசைப்பகுதி இறைச்சி எனப்படும். கோழி, ஆடு, முயல், பன்றி, வெள்ளாடு, ஒட்டகம், எருமை, மீன், நண்டு, இறால் போன்றவற்றை உணவாக உண்கிறோம். இறைச்சியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அது முக்கிய உணவாகப் பயன்படுகிறது.
கோழிப் பண்ணை அமைத்தல்
வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து, வான்கோழி போன்றவற்றை அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்ப்பது பண்ணை அமைத்தல் எனப்படும். கோழிப் பண்ணை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: (i) முட்டையிடுபவை, (ii) பிராய்லர் (இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை).
| நோய் | காரணம் |
|---|---|
| சால்மோனெல்லோசிஸ் (வயிற்றுப்போக்கு) | பாக்டீரியா |
| ரானிக் கெட் நோய் (அம்மை நோய்) | வைரஸ் |
| ஆஸ்பர்ஜில்லஸ் நோய் (பலவீனம், நலிந்துபோதல்) | பூஞ்சை |
5.2 உடையாகப் பயன்படும் விலங்கினப் பொருள்
விலங்கு இழைகள்
பஞ்சு, சணல், கம்பளி, பட்டு போன்ற நார்கள் இயற்கை இழைகளாகும். கம்பளி மற்றும் பட்டு இழைகள், விலங்கு இழைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
கம்பளி
கம்பளி என்ற இழை கேப்ரினே என்ற குடும்பத்தைச் சார்ந்த விலங்குகளின் மென்முடிக் கற்றையிலிருந்து பெறப்படுகிறது. முயல், யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் ஒட்டகத்திலிருந்தும் கம்பளி இழைகள் எடுக்கப்படுகின்றன. கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன:
| படி | செயல்முறை | விளக்கம் |
|---|---|---|
| 1 | கத்தரித்தல் (Shearing) | ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன |
| 2 | தரம் பிரித்தல் (Grading) | வெவ்வேறு பாகங்களிலிருந்து எடுக்கப்பட்ட உரோமங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்படும் |
| 3 | கழுவுதல் (Washing) | தூசி, அழுக்கு மற்றும் எண்ணெய் பிசின் நீக்க சலவைத்தூள் கொண்டு கழுவுதல் |
| 4 | சிக்கெடுத்தல் (Carding) | கம்பளி இழைகளை கவனமாக பிரித்து மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்றுதல் |
| 5 | நூற்றல் (Spinning) | வலையை குறுகிய தனித்த இழையாக மாற்ற நூற்பு இயந்திரங்களில் அனுப்புதல் |
கம்பளியின் சிறப்பம்சங்கள்
கம்பளி வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது; ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது; குளிருக்கு எதிராகச் செயல்படுகின்றது — எனவே கம்பளி சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது; எளிதில் சுருங்காது; கிழிவதில்லை.
பட்டு
பட்டு என்பது, பட்டுப் பூச்சியின் கூடுகளிலிருந்து சுரக்கும் இழையாகும். மல்பெரி இலைகளை உணவாக உண்ணும் பட்டுப்புழுக்களிலிருந்து பட்டு இழைகள் பெறப்படுகின்றன. பட்டுப்பூச்சிகளை வளர்த்து, அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவது பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர் எனப்படும்.
| வளர்ச்சி நிலை | விளக்கம் |
|---|---|
| முட்டை | ஒரு முதிர்ந்த பெண் பட்டுப் பூச்சி சுமார் 500 முட்டைகளை இடும் |
| லார்வா (கம்பளிப்பூச்சி) | முட்டைகள் பொரிந்து லார்வாக்கள் வெளிவரும்; 35 நாட்கள் மல்பெரி இலைகளை உண்டு வாழும் |
| கூட்டுப்புழு (குக்கூன்) | பட்டுப்புழு ஐந்து நாளில் பட்டு இழைகளை உற்பத்தி செய்து கூட்டுப்புழுவாக மாறும் |
| பட்டுப் பூச்சி | கூட்டுப்புழுவிலிருந்து முதிர்ந்த பட்டுப் பூச்சி வெளிவரும் |
5.3 பட்டு மற்றும் கம்பளி ஆலைகளில் ஏற்படும் அபாயங்கள்
பட்டாலைகளில் ஏற்படும் பாதிப்புகள்
பட்டாலைகளில் பணிபுரிவோர் நின்றுகொண்டே பட்டுநூல் நூற்பதால் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். முதுகு வலி, பார்வைக் கோளாறுகள் மற்றும் சுவாச சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் அவதிப்படுகிறார்கள்.
கம்பளி ஆலைகளில் ஏற்படும் பாதிப்புகள்
கம்பளி ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வெவ்வேறு வேதிப்பொருள்கள் மற்றும் சலவைத்தூள்களையும் பயன்படுத்துவதால் ஒவ்வாமை மற்றும் தோல் நோயால் துன்புறுகிறார்கள். இறந்த விலங்குகளைக் கையாளுவதால் கம்பளி ஆலை பணியாளர்கள் ஆந்தராக்ஸ் பாக்டீரியா தொற்றால் அவதிப்படுகிறார்கள். இது "பிரித்தெடுப்போர்கள் நோய்" என்றும் அழைக்கப்படுகிறது.
| நோய் | காரணம் | அறிகுறிகள் | சிகிச்சை |
|---|---|---|---|
| ஆந்தராக்ஸ் | பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் பாக்டீரியா | காய்ச்சல், இருமல், மூச்சு விடுதலில் சிரமம், வாந்தி, வயிற்றுப்போக்கு | பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின் |
அகிம்சைபட்டு (அமைதிபட்டு)
ஆண்டாண்டு காலமாக கொதிக்கும் நீரில் கூட்டுப்புழுக்களைப் போட்டு அழித்து பட்டு இழைகளை எடுத்தனர். இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசும ராஜய்யா என்பவர், 1992 ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல் அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். கூட்டுப்புழுக்கள், கூடை உடைத்துக்கொண்டு வெளியேறும்போது அவற்றைக் கொல்லாமல் அவை உண்டாக்கும் பட்டு இழைகளை எடுக்கலாம் என்றார். இந்தப் பட்டு அகிம்சைபட்டு அல்லது அமைதிபட்டு என்று அழைக்கப்படுகின்றது.
5.4 விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
விலங்குகளைப் பாதுகாத்தல் என்பது நமது குழந்தைகளையும், பெற்றோரையும் பாதுகாப்பதற்கு நிகரானது. அவை மனிதர்கள் போன்ற உயிரிகளாகும். விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவிற்கு விலங்கு வளர்ப்பு (Animal Husbandry) என்று பெயர்.
நமது சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்பவெப்பநிலை மற்றும் மாற்றச் சார்ந்த அமைச்சகம், விலங்குகளைத் துன்புறுத்துதலிலிருந்து பாதுகாக்க 1960 ஆம் ஆண்டு நான்கு புதிய சட்டங்களை கொண்டுவந்தது. நாம் விலங்குகளின் மீது அக்கறை, அன்பு கொண்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும். நம் குடும்பத்திலுள்ள ஓர் உறுப்பினர் போல் விலங்குகளையும் நாம் பேணிக்காக்க வேண்டும்.
சுருக்கம்
- பால், முட்டை, தேன், இறைச்சி ஆகியவை விலங்குகளிலிருந்து பெறப்படும் முக்கியமான உணவுப் பொருள்கள்.
- கம்பளி மற்றும் பட்டு ஆகியவை விலங்குகளிலிருந்து பெறப்படும் இயற்கை இழைகள்.
- கம்பளி உருவாக்கும் ஐந்து படிகள்: கத்தரித்தல், தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல்.
- பட்டுப்பூச்சி வளர்ப்பு செரிகல்சர் எனப்படும்; பட்டுப்பூச்சி 4 வளர்ச்சி நிலைகளைக் கடக்கும்.
- அகிம்சைபட்டு என்பது கூட்டுப்புழுக்களை கொல்லாமல் பெறப்படும் பட்டு; இதை 1992ல் குசும ராஜய்யா கண்டறிந்தார்.
- கம்பளி ஆலைகளில் ஆந்தராக்ஸ் நோய் ஏற்படலாம்; பெனிசிலின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
- விலங்கு வளர்ப்பு (Animal Husbandry) என்பது விலங்குகளின் இனப்பெருக்கம் மற்றும் பராமரிப்பை ஆய்வு செய்யும் பிரிவாகும்.