வகைப்பாட்டியல் என்பது உயிரினங்களை அவற்றின் பண்புகள், ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரித்து வகைப்படுத்தும் அறிவியல் பிரிவாகும். 7ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் இந்த அலகில் வகைப்பாட்டியலின் அடிப்படைகளை விரிவாக அறிந்துகொள்வோம்.
வகைப்படுத்தல் என்றால் என்ன?
வகைப்படுத்தல் என்பது உயிரினங்களைக் கண்டறிந்து குழுக்களாகப் பிரித்தல் ஆகும். நாம் வகைப்படுத்தும் போது அவற்றின் பண்புகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரிக்கின்றோம். வகைப்படுத்துதல் மூன்று படிநிலைகளில் நடைபெறுகிறது: கண்டுபிடித்தல் (Identification), பிரித்தல் (Classification), தொகுத்தல் (Grouping).
நாம் பொருள்களை ஏன் வகைப்படுத்துகிறோம்?
வகைப்படுத்துதல் பின்வரும் காரணங்களால் அவசியமாகிறது:
- பொருள்களுக்கு இடையிலான ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
- வகைப்படுத்துதலின் மூலமாக எளிதாகப் பிரித்தறிய முடிகிறது.
- ஒத்த பண்புடைய பொருள்கள் ஒரே குழுவின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருக்கும்.
- வேறுபட்ட பண்புகளை உடைய பொருள்கள் வேவ்வேறு குழுக்களாக வகைப்படுத்தப்படும்.
- நம்மைச் சுற்றி உள்ள உயிருள்ள மற்றும் உயிற்ற பொருள்களை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றது.
வகைப்பாட்டின் அவசியம்
- உயிரினங்களைச் சரியாக இனம் கண்டறிய வகைப்பாட்டியல் தேவைப்படுகிறது.
- ஓர் உயிரினத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை தெரிந்துகொள்ள உதவுகிறது.
- பல்வேறுபட்ட உயிரினங்களுக்கு இடையிலான தொடர்பினை உறுதிசெய்ய உதவுகிறது.
- பல்வேறு புவியியல் பகுதிகளில் காணப்படும் உயிரினங்களின் தகவல்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.
- எளிமையான உயிரினங்களில் இருந்து சிக்கலான உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி புரிந்துகொள்ள உதவுகிறது.
இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோல் (Dichotomous Key)
இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோல் என்பது உயிரினங்களை அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துதல் ஆகும். இந்த திறவுகோலின் சிறப்பு அம்சங்கள்:
- ஒரு சிறப்பு அம்சம் ஒரு குழுவை எளிதாக வேறுபடுத்திக் காட்டுகிறது.
- குறிப்பிட்ட ஒரு பண்பு உள்ளது அல்லது இல்லை என்பதை வைத்து ஒரு குழுவைப் பிரிக்க முடிகிறது.
- இறுதியில் ஒன்று மட்டும் மீதம் இருக்கும் வரை இரண்டாவது நிலையைத் தொடர்கிறது.
வகைப்பாட்டின் படிநிலைகள் (Linnaean Hierarchy)
வகைப்பாட்டில் ஏழு முக்கியப் படிநிலைகள் உள்ளன. இந்த முறை லின்னேயஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் லின்னேயஸ் படிநிலை என்று அழைக்கப்படுகிறது.
| வ.எண் | படிநிலை (தமிழ்) | ஆங்கிலம் |
|---|---|---|
| 1 | உலகம் | Kingdom |
| 2 | தொகுதி | Phylum |
| 3 | வகுப்பு | Class |
| 4 | வரிசை | Order |
| 5 | குடும்பம் | Family |
| 6 | பேரினம் | Genus |
| 7 | சிற்றினம் | Species |
வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினம் ஆகும். பேருலகம் பெரும் பிரிவாகவும், சிற்றினம் அடிப்படை அலகாகவும் கருதப்படுகிறது.
விலங்குகளின் வகைப்பாடு
விலங்கு உலகம் இரண்டு துணை உலகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முதுகெலும்பற்றவை (Invertebrata) மற்றும் முதுகெலும்புடையவை (Vertebrata).
முதுகெலும்பற்றவை – ஒன்பது தொகுதிகள்
| தொகுதி | சிறப்புப் பண்புகள் | உதாரணம் |
|---|---|---|
| துளையுடலிகள் (Porifera) | உடல் முழுவதும் துளைகள் நிறைந்து காணப்படும் | ஸ்பான்ஜில்லா, சீகன் |
| குழியுடலிகள் (Coelenterata) | இரையிடை குருதிக் குழி | ஹைட்ரா, கடல் சாமந்தி, ஜெல்லி மீன்கள், பவளங்கள் |
| தட்டைப் புழுக்கள் (Platyhelminthes) | உறைக்குழி அற்றவை, ஒட்டுண்ணிகளாக விலங்குகளில் காணப்படும் | பிளானேரியா, கல்லீரல் புழு |
| உருளைப் புழுக்கள் (Nematoda) | உறற்கண்டங்கள் அற்றவை, நோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணிகள் | ஆஸ்காரிஸ் |
| வளைத்தலைப் புழுக்கள் (Annelida) | மூவடுக்கு உயிரிகள், உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன | மண்புழு, நீரிஸ், அட்டை |
| கணுக்காலிகள் (Arthropoda) | உடல் கண்டங்களை உடையது, இணைக்கால்களால் ஆனது | நண்டு, இறால், மரவட்டை, பூச்சிகள் |
| மெல்லுடலிகள் (Mollusca) | மென்மையான கண்டங்கற்ற உடல் அமைப்பு, பொதுகாப்பு ஓடு | கணவாய் மீன்கள், நத்தை, ஆக்டோபஸ் |
| முட்தோலிகள் (Echinodermata) | உடற்சுவற்றில் முட்கள் காணப்படும், கடலில் மட்டும் வாழ்பவை | நட்சத்திர மீன், கடல் சாமந்தி |
முதுகெலும்புடையவை – ஐந்து வகுப்புகள்
| வகுப்பு | சிறப்புப் பண்புகள் | உதாரணம் |
|---|---|---|
| மீன்கள் (Pisces) | நீரில் வாழ்பவை, குளிர் இரத்தப் பிராணி, செதில்களால் மூடப்பட்டவை | சுறா, கட்லா, முல்லட் |
| இருவாழ்விகள் (Amphibia) | நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை, குளிர் இரத்தப் பிராணி | தவளை, தேரை, சாலமாண்டர் |
| ஊர்வன (Reptilia) | குளிர் இரத்தப் பிராணி, நுரையீரல் மூலம் சுவாசிக்கும், செதில்களால் போர்த்தப்பட்டவை | ஆமை, பாம்பு, முதலை, பல்லி |
| பறவைகள் (Aves) | வெப்ப இரத்தப் பிராணி, இறக்கை உடையவை, முட்டை இடுபவை | குருவி, கோழி, மயில், கிளி |
| பாலூட்டிகள் (Mammalia) | வெப்ப இரத்தப் பிராணி, குட்டி போடுபவை, தாய்ப்பால் ஊட்டுபவை | புலி, மனிதன், கங்காரு, திமிங்கலம் |
தாவரங்களின் வகைப்பாடு
தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் மற்றும் பூவாத தாவரங்கள் என இரு பெரும் கூறுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
| பிரிவு | துணைப் பிரிவுகள் | சிறப்புப் பண்புகள் | உதாரணம் |
|---|---|---|---|
| பூவாத தாவரங்கள் | ஆல்காக்கள் | தாலஸ் அமைப்பு, வேர்/தண்டு/இலை வேறுபாடற்றவை, நீரில் வாழ்பவை | சாரா |
| பூவாத தாவரங்கள் | மாஸ்கள் | இரு வாழி தாவரங்கள், ஈரப்பதம் தேவை | ஃபியூனேரியா |
| பூவாத தாவரங்கள் | பெரணிகள் | வேர், தண்டு, இலை வேறுபாடு உண்டு; வாஸ்குலார் திசுக்கள் உண்டு | பெரணி வகைகள் |
| பூக்கும் தாவரங்கள் | ஜிம்னோஸ்பெர்ம்கள் | பல்லாண்டு வாழ தாவரங்கள், திறந்த விதைகளை உடையவை | சைனஸ், சைகஸ் |
| பூக்கும் தாவரங்கள் | ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (ஒரு விதையிலை) | ஒரு விதையிலை கொண்ட தாவரங்கள் | நெல் |
| பூக்கும் தாவரங்கள் | ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (இரு விதையிலை) | இரு விதையிலை கொண்ட தாவரங்கள் | புளி |
ஐந்து உலக வகைப்பாட்டு முறை
ஐந்து உலக வகைப்பாட்டு முறை R.H. விட்டேக்கர் என்பவரால் 1969 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இந்த ஐந்து உலகங்கள் செல் அமைப்பு, உணவு ஊட்ட முறை, உணவு மூலம் மற்றும் உடல் அமைப்பு போன்ற குணாதிசயங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
| உலகம் | சிறப்புப் பண்புகள் | உதாரணம் |
|---|---|---|
| மோனிரா (Monera) | உண்மையான உட்கரு இல்லை (புரோகேரியோட்டிக்), ஒரு செல் உயிரிகள் | பாக்டீரியா, நீலப் பசும் பாசிகள் |
| புரோட்டிஸ்டா (Protista) | ஒரு செல் யூகேரியோட்டு உயிரிகள், தனியாக அல்லது கூட்டமாக | அமீபா, பாரமீசியம், யூக்ளீனா |
| பூஞ்சைகள் (Fungi) | பல செல் யூகேரியோட்டு, பச்சையம் அற்றவை, சாறுண்ணிகள் அல்லது ஒட்டுண்ணிகள் | மோல்டுகள், மில்டியூஸ், ஈஸ்டுகள் |
| தாவர உலகம் (Plantae) | பல செல் யூகேரியோட்டு, ஒளிச்சேர்க்கை நிகழ்த்துபவை | மாஸ்கள், பெரணிகள், பூக்கும் தாவரங்கள் |
| விலங்கு உலகம் (Animalia) | பல செல் யூகேரியோட்டு, வேறுபட்ட ஊட்ட முறை கொண்டவை, செல் சுவர் இல்லை | மீன்கள், இருவாழ்விகள், பறவைகள், மனிதன் |
இரு சொல் பெயரிடும் முறை (Binomial Nomenclature)
காஸ்பர்ட் பாஹின் என்பவர் 1623 ஆம் ஆண்டு உயிரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார். இதை 1753 ஆம் ஆண்டு கரோலஸ் லின்னேயஸ் என்பவர் செயல்படுத்தினார். இவர் "நவீன வகைப்பாட்டியலின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
இரு சொல் பெயரிடும் முறையில் ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப் பெயரும், இரண்டாவதாக சிற்றினப் பெயரும் ஆக இரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும்.
| வ.எண் | பொது பெயர் | அறிவியல் பெயர் |
|---|---|---|
| 1 | மனிதன் | Homo sapiens |
| 2 | வெங்காயம் | Allium cepa |
| 3 | தவளை | Rana tigrina |
| 4 | புறா | Columba livia |
| 5 | புளிய மரம் | Tamarindus indica |
| 6 | எலுமிச்சை | Citrus aurantifolia |
| 7 | வேப்ப மரம் | Azadirachta indica |
| 8 | நெல் | Oryza sativa |
| 9 | மீன் | Satta satta |
| 10 | தேங்காய் | Cocos nucifera |
சுருக்கம்
- வகைப்பாட்டியல் என்பது உயிரினங்களின் பண்புகள், ஒற்றுமை மற்றும் வேற்றுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
- வகைப்பாட்டியலில் பேருலகம் பெரும் பிரிவாகவும், சிற்றினம் அடிப்படை அலகாகவும் கருதப்படுகிறது.
- விலங்கு உலகம் மேலும் இரண்டு துணை உலகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- முதுகெலும்பற்றவை ஒன்பது தொகுதிகளாகவும், முதுகெலும்புடையவை ஐந்து வகுப்புகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
- 1969 ஆம் ஆண்டு R.H. விட்டேக்கர் என்பவரால் ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது.
- ஐந்து உலக வகைப்பாடு ஐந்து பேருலகங்களை உள்ளடக்கியது: மோனிரா, புரோட்டிஸ்டா, பூஞ்சைகள், தாவர உலகம் மற்றும் விலங்கு உலகம்.
- 1623 ஆம் ஆண்டு காஸ்பர்ட் பாஹின் என்பவரால் இரு சொல் பெயரிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- கரோலஸ் லின்னேயஸ் "தற்கால வகைப்பாட்டின் தந்தை" ஆவார்.
- இரு சொல் பெயரில் முதல் பெயர் பேரினத்தையும், இரண்டாவது பெயர் சிற்றினத்தையும் குறிக்கும்.