உடல் நலமும் சுகாதாரமும் என்பது நமது வாழ்வின் அடிப்படை. நல்ல உடல் நலம் என்பது நோய்கள், மன அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகள் இல்லாத நல்ல மனநிலை மற்றும் உடல்நிலையைக் குறிக்கிறது. சிறந்த சுகாதாரத்தைப் பின்பற்றுவதோடு, சத்து நிறைந்த உணவை உண்டு, உடற்பயிற்சி செய்வது, ஓய்வெடுப்பது மற்றும் நன்கு உறங்குவது ஆகியவை அவசியம்.
6.1 சுகாதாரம்
சுகாதாரம் என்பது நோய்களைத் தடுப்பதற்காகவும், நல்ல ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும், தூய்மையைப் பேணுதல், பாதுகாப்பான குடிநீர் பருகுதல் மற்றும் சரியான முறையில் கழிவுகளை அகற்றுதல் போன்ற சிறந்த செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறிப்பதாகும். தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பராமரிப்பதே தூய்மை எனப்படும்.
6.1.1 தனிநபர் சுகாதாரம்
தனிநபர் சுகாதாரம் என்பது ஒருவர் தனது உடல் நலத்தை அடைவதற்காக, தனது உடல் தேவை மற்றும் உள்ளத் தேவைகளை சமநிலையில் வைத்துக்கொள்வதுடன் தொடர்புடையது. சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவான தொற்று நோய்களாகும். இவை பாக்டீரியாவால் மட்டுமல்லாமல் வைரஸ் மூலமாகவும் தோன்றுகின்றன. சளி மற்றும் காய்ச்சல் உடையவர்கள் கைக்குட்டையைப் பயன்படுத்தி நாசியைச் சிந்துவதும், கைகளை அடிக்கடி கழுவுவதும் அவசியமாகும்.
6.1.2 சமூக சுகாதாரம்
ஒரு சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களால் உருவாகிறது. பின்வரும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் அடிப்படையான சமூக சுகாதாரத்தைப் பராமரிக்கலாம்:
- நாம் வாழும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
- வடிகால்கள் (சாக்கடை) சரியான முறையில் மூடப்பட்டிருக்க வேண்டும்.
- கழிவுநீரை திறந்த குழாய்களிலோ அல்லது திறந்தவெளியிலோ வெளியேற்றக்கூடாது.
- வீட்டுக் குப்பைகளை அரசு வழங்கியுள்ள குப்பைத்தொட்டிகளில் (பச்சை மற்றும் நீலம்) தனித்தனியாகப் பிரித்து (மக்கும் மற்றும் மக்கா குப்பை) முறையாகவும் பாதுகாப்பாகவும் அகற்ற வேண்டும்.
6.2 உடல் பராமரிப்பு
மனித உடல் அமைப்பு ஒரு மகத்தான அதிசயம். இது தொடர்ந்து செயல்படக்கூடிய உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்களை உள்ளடக்கியது. சரிவிகித உணவு உண்ணுதல், போதிய தூக்கம், மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை உடல் பராமரிப்பிற்கு இன்றியமையாதவை ஆகும்.
6.2.1 பற்கள் பராமரிப்பு
பல் பராமரிப்பு அல்லது வாய் சுகாதாரம் என்பது தனிநபர் ஆரோக்கியத்தின் முக்கிய அம்சமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதன் மூலம் பற்களிலும், ஈறுகளில் பற்காரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கலாம்.
| நோயின் பெயர் | காரணிகள் | தீர்வுகள் |
|---|---|---|
| ஈறுகளில் இரத்தக் கசிவு | வேண்டுமின் C குறைபாடு | சிட்ரஸ் பழங்கள் சாப்பிடலாம் |
| பற்சிதைவு | பற்களில் காணப்படும் பாக்டீரியாக்கள் அமிலங்களை உற்பத்தி செய்கின்றன | பல் துலக்குதல் மற்றும் பல் தழுவுதல் (Flossing) |
| புறத்திசு நோய் (Periodontitis) | புகையிலை மெல்லுதல் | புகையிலை மெல்லுதலைத் தவிர்த்தல், சரிவிகித உணவு உண்ணுதல் |
6.2.2 கண் பராமரிப்பு
உடல் உறுப்புகளுள் கண் ஒரு முக்கிய உறுப்பாகும். கண்கள் உலகினைக் காணப் பயன்படும் சாளரங்களாகக் கருதப்படுகின்றன. நாம் 80% உணர்வுகளை பார்வை மூலமாகவே பெறுகிறோம்.
| நோயின் பெயர் | காரணிகள் | தாக்கங்கள் | தீர்வுகள் |
|---|---|---|---|
| மாலைக் கண் நோய் (Night Blindness) | வேண்டுமின் A குறைபாடு | இரவில் அல்லது மங்கலான ஒளியில் நன்கு பார்ப்பது கடினம் | ஆன்டி ஆக்ஸிடன்ட், வேண்டுமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் |
| இளம் சிவப்புக் கண் நோய் (Conjunctivitis) | வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகிறது | மிகவும் தொற்றக்கூடியது; இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது | நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கண் சொட்டு மருந்து அல்லது களிம்புகள் |
| வண்ணக் குருட்டுத்தன்மை (Colorblindness) | மரபு நிலை | வண்ணங்களை வேறுபடுத்தி அறிவதில் இடர்பாடு | சிறப்பு வடிகட்டிகளுடன் கூடிய கண்ணாடிகள் மற்றும் கான்டாக்ட் லென்ஸ்கள் |
6.2.3 தலைமுடி பராமரிப்பு
தலைமுடியின் ஆரோக்கியம் உடலின் ஊட்டச்சத்து நிலை மற்றும் பொது உடல்நலத்தை ஓரளவிற்குப் பிரதிபலிக்கிறது. மெல்லிய மற்றும் சிதறிய முடி, முடி உதிர்தல் ஆகியவை முடியின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறிக்கின்றன. தினமும் உச்சந்தலையை நன்றாகத் தேய்த்துக் குளிப்பதன் மூலம், இறந்த சரும செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம்.
6.3 நோய்கள்
சாதாரணமாக செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு நபருக்கு இயலாமை அல்லது அசாதாரண நிலையை ஏற்படுத்தி அதன்மூலம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஒரு உடல் ரீதியான மாற்றமே நோய் ஆகும். நோய்கள் இரண்டு வகைப்படும்: (1) தொற்று நோய்கள் (2) தொற்றா நோய்கள்.
6.3.1 தொற்று நோய்கள்
ஒருவரிடமிருந்து மற்பிறருக்கு எளிதில் பரவும் நோய்கள் தொற்று நோய்கள் எனப்படும். அசுத்தமான காற்று, நீர், உணவு அல்லது வெக்டார்கள் என்று அழைக்கப்படும் நோய்கடத்திகளான பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் மூலமாகவும் தொற்றுநோய்கள் பரவுகின்றன.
| நோயின் பெயர் | காரணி | அறிகுறிகள் | தடுப்பு மற்றும் சிகிச்சை |
|---|---|---|---|
| காசநோய் (T.B) | மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே என்ற பாக்டீரியா | காய்ச்சல், எடை இழப்பு, தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் | BCG தடுப்பூசி நோடுதல்; DOT மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளல் |
| காலரா | விபரியோ காலரே என்ற பாக்டீரியா | வயிற்றுப்போக்கு, தசை வலி மற்றும் வாந்தி | கொதித்து ஆற வைத்த குடிநீர் பருகுதல்; தடுப்பூசி நோடுதல் |
| டைபாயிடு | சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியா | பசியின்மை, தீவிர தலைவலி, தீவிர காய்ச்சல் (104°F வரை) | கொதிக்கவைத்து ஆற வைத்த குடிநீர் பருகுதல்; தடுப்பூசி நோடுதல் |
| மஞ்சள் காமாலை (ஹெபாடிட்டிஸ்) | ஹெபாடிட்டிஸ் வைரஸ் A, B, C, D, E | பசியின்மை, வாந்தி, சிறுநீர் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் | கொதித்து ஆற வைத்த குடிநீர் பருகுதல்; முறையாகக் கைகளைச் சுத்தம் செய்தல் |
| சின்னம்மை (வேரிசெல்லா) | வேரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸ் | உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு | சின்னம்மை (வேரிசெல்லா) தடுப்பூசி நோடுவது சிறந்த வழி |
| நரிஸ் (சிறுநாய்க் கடி) | வைரஸ் (நாய், முயல், குரங்கு, பூனை கடிப்பதன் மூலம்) | ஹைட்ரோபோபியா (நீரைக் கண்டு பயம்), இரண்டு முதல் பன்னிரண்டு வாரங்களாக காய்ச்சல் | அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னர் சரியான நேரத்தில் தடுப்பூசி நோடுவதன் மூலம் இந்நோயைத் தடுக்க முடியும் |
6.3.2 தொற்றா நோய்கள்
தொற்றா நோய்கள் ஒருவரிடமிருந்து மற்பிறருக்குப் பரவுவதில்லை. அவை பிற காரணிகளால் ஏற்படுகின்றன. வாத நோய், மார்பகப்பு, வலிப்பு, சக்கரவாதம், ஒற்றைத்தலைவலி, கண்புரை மற்றும் புற்றுநோய் போன்றவை தொற்றா நோய்களாகும்.
6.4 குழந்தைகளின் தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகள்
இரத்தச் சோகை: இரத்தச் சோகை இரும்புச் சத்து குறைவான உணவுகளை உண்பதால் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு சில உணவுகளைக் கொடுப்பதாலும் இது ஏற்படுகிறது. முருங்கைக் கீரை, தேரீட்சம் பழம், கல்லீரல் (ஆடு, கோழி), கீரைகள், பீன்ஸ், பட்டாணி, பருப்புகள் மற்றும் பச்சை வாழைப்பழம் ஆகியவை இரும்புச் சத்துள்ள உணவுகளாகும்.
6.5 பாதுகாப்பு மற்றும் முதலுதவி
முதலுதவி என்பது விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்கும் முன் வழங்கப்படும் உடனடிச் சிகிச்சையாகும். இது உயிரைப் பாதுகாக்கிறது, இரத்தக் கசிவைத் தடுத்து நோயாளியின் நிலையை உறுதிப்படுத்துகிறது, வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
| தீக்காயத்தின் நிலை | தாக்கம் | முதலுதவி |
|---|---|---|
| முதல் நிலை தீக்காயம் | தோலின் வெளிப்புறம் அடுக்கினைப் (மேல்புறத் தோல்) பாதிக்கிறது | குளிர்ந்த நீரில் கழுவி, கிருமி நாசினிக் களிம்பைத் தடவ வேண்டும் |
| இரண்டாம் நிலை தீக்காயம் | மேல்புறத் தோல் மற்றும் அதற்குக் கீழ் உள்ள உடல்தோலில் (டர்மிஸ்) பாதிப்பு ஏற்படுத்துகின்றன | சுத்தமான ஒட்டக்கூடாத தன்மையற்ற துணி அல்லது கட்டுத்துணியால் சுற்ற வேண்டும் |
| மூன்றாம் நிலை தீக்காயம் | தோலின் முழு ஆழத்திற்குத் தோலினை அழித்து அடிப்படைத் திசுக்களையும் சிதைக்கின்றன | உடனடியாக மருத்துவரின் சிகிச்சையை நாட வேண்டும்; தோல் ஒட்டுதல் (skin grafting) தேவைப்படலாம் |
6.5.2 வெட்டுக்காயங்கள் மற்றும் கீறல்கள்
வெட்டுக்காயம் மற்றும் கீறல்கள் ஆகியவை தோலின் மேற்பரப்பில் ஏற்படும் பாதிப்புகளாகும். சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவிய பின் ஒரு கிருமி நாசினித் திரவத்தால் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர், காயம்பட்ட இடத்தில் கிருமி நாசினிக் களிம்பு இட்டு, தொற்றுநோயைத் தடுக்கும் வண்ணம் காயம்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டுத்துணியால் கட்ட வேண்டும்.
சுருக்கம்
- உடல் நலம் என்பது முழுமையான உடல், மன மற்றும் சமூக நலத்தைக் குறிப்பது மட்டுமின்றி, நோயற்ற நிலை அல்லது பலவீனமின்மையையும் குறிக்கிறது.
- சுகாதாரம் என்பது நோய்களைத் தடுக்க மற்றும் நல்ல ஆரோக்கியத்தை பேண தூய்மையான செயல்பாடுகளைக் குறிக்கும்.
- தனிநபர் சுகாதாரம் - தினமும் குளித்தல், பல் துலக்குதல், கைகளைக் கழுவுதல் ஆகியவை அவசியம்.
- நோய்களை உருவாக்கும் கிருமிகளால் உருவாகி, நோய்தொற்றுடைய நபரிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரோக்கியமான நபருக்குத் தொற்றக்கூடிய நோய்கள் தொற்று நோய்கள் எனப்படும்.
- நோய்க் கிருமிகளின் தொற்றுதல் இல்லாமல் தோன்றக்கூடிய, அதேவேளையில் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பிறருக்குப் பரவாத நோய்கள் தொற்றா நோய்கள் எனப்படும்.
- முதலுதவி என்பது மருத்துவ உதவி கிடைக்கும் முன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உடனடிச் சிகிச்சையாகும்.