கணினி என்பது நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு கருவியாகும். பரந்து விரிந்த இந்த உலகை ஒரு புள்ளியில் இணைப்பது கணினியின் சிறப்பு ஆகும். கணினியின் பாகங்களை அறிந்து கொள்வது, அதை முழுமையாக இயக்குவதற்கு அடிப்படையாகும்.
7.1 கணினியின் மூன்று முக்கியப் பாகங்கள்
கணினியில் மிக முக்கியமான மூன்று பாகங்கள் உள்ளன. அம்மூன்று பாகங்களையும் ஒன்றாக இணைக்கும்போதுதான், கணினியை நம்மால் முழுமையாக இயக்க முடியும்.
| வ.எண் | பாகம் | ஆங்கிலப் பெயர் | பணி |
|---|---|---|---|
| 1 | உள்ளீட்டகம் | Input Unit | தரவுகளையும் கட்டளைகளையும் உள்ளீடு செய்வது |
| 2 | மையச்செயலகம் | CPU (Central Processing Unit) | கணினியின் அனைத்துச் செயல்பாடுகளையும் இயக்குவது |
| 3 | வெளியீட்டகம் | Output Unit | செயலாக்கப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவது |
உள்ளீட்டகம் (Input Unit)
கணினிச் செயலாக்கத்துக்குத் தரவுகளையும் கட்டளைகளையும் உள்ளீடு செய்வதே உள்ளீட்டகம் (Input Unit) ஆகும். அவ்வாறு தரவுகளை உள்ளீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையே உள்ளீட்டுக்கருவிகள் என்னமைக்கிறோம்.
| உள்ளீட்டுக் கருவி | ஆங்கிலப் பெயர் |
|---|---|
| விசைப்பலகை | Keyboard |
| சுட்டி | Mouse |
| வருடி | Scanner |
| பட்டைக் குறியீடு படிப்பான் | Barcode Reader |
| ஒலிவாங்கி | Microphone |
| இணையப் படக்கருவி | Web Camera |
| ஒளி பேனா | Light Pen |
விசைப்பலகை (Keyboard)
எல்லா வகைக் கணினியிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறுவது விசைப்பலகை. விசைப்பலகையில் இரண்டு விதமான விசைகள் (பொத்தான்கள்) உள்ளன: எண்களைக் கொண்ட விசைகளை எண்விசை (Number Key) என்றும், எழுத்துகளைக் கொண்ட விசைகளை எழுத்து விசை (Alphabet Key) என்றும் வழங்குவர்.
சுட்டி (Mouse)
சுட்டியும் நம் கணினிப் பயன்பாட்டுக்கு இன்றியமையாததாகும். சுட்டியில் இரண்டு பொத்தான்களும் அவ்விரண்டிற்கும் நடுவில் நகர்த்தும் உருளையும் காணப்படும். கோப்புகளைத் திறப்பதற்கு வலது பொத்தானையும் (Right Button), கோப்புகளைத் தேர்வு செய்வதற்கு இடது பொத்தானையும் (Left Button) பயன்படுத்த வேண்டும்.
மையச்செயலகம் (CPU – Central Processing Unit)
மனிதனின் உடலை இயக்கும் மூளையைப் போன்று, கணினியின் செயல்பாடுகளை இயக்குவது மையச்செயலகம். இது கணினியின் உள்ளீட்டுக் கருவிகள் கொடுக்கும் உள்ளீடுகளைப் (தரவுகளைப்) பெற்றுத் தகவல்களாக வெளியீட்டுக் கருவிகள்மூலம் வழங்குகின்றது.
மையச்செயலகம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:
| பகுதி | ஆங்கிலப் பெயர் | பணி |
|---|---|---|
| நினைவகம் | Memory Unit | தரவுகள் மற்றும் தகவல்களை சேமித்து வைக்கிறது |
| கணிதத் தருக்கச் செயலகம் | ALU (Arithmetic Logic Unit) | கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எண்கணித, தருக்கச் செயல்பாடுகளை மேற்கொள்கிறது |
| கட்டுப்பாட்டகம் | Control Unit | கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது |
நினைவகம் (Memory Unit)
மனிதன் தனக்குத் தேவைப்படும் செய்திகளை, நிகழ்வுகளைத் தன் நினைவகத்தில் சேமித்து வைப்பதைப் போல் கணினியும் தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை சேமித்து வைக்கிறது. அதையே கணினியின் நினைவகம் என்கிறோம். கணினியில் உள்ள நினைவகத்தை முதன்மை நினைவகம் (Primary Memory), இரண்டாம் நினைவகம் (Secondary Memory) என இரண்டாகப் பிரிக்கலாம். குறுவட்டு (Compact Disk), விரலி (Pen Drive) போன்றவற்றைக் கொண்டு மேலும் விரிவுபடுத்தலாம்.
வெளியீட்டகம் (Output Unit)
மையச் செயலகத்திலிருந்து ஈரடிமான குறிப்புகள் (Binary signals) பெறப்படுகின்றன. இக்குறிப்புகளைக் கணினியானது பயனருக்குக் கொண்டு செல்ல, வெளியீட்டகம் பயன்படுகின்றது. கணினித்திரை (Monitor), அச்சுப்பொறி (Printer), ஒலிபெருக்கி (Speaker), வரைவி (Plotter) போன்றவை வெளியீட்டகத்தின் கருவிகளாகச் செயல்படுகின்றன.
| திரை வகை | சிறப்பியல்பு |
|---|---|
| CRT திரை (Cathode Ray Tube) | பழைய வகை, அதிக இடம் தேவை, அதிக வெப்பம் வெளிப்படுத்தும் |
| TFT திரை (Thin Film Transistor) | குறைந்த அளவில் வெப்பத்தை வெளிப்படுத்துவதோடு, குறைந்த அளவிலான இடமே இதற்குப் போதுமானதாக இருக்கிறது. தற்போதுள்ள கணினிகளில் TFT திரையின் பயன்பாடே அதிகமிருக்கிறது. |
7.2 நினைவகத்தின் அலகுகள்
தரவுகள் பிட் (Bit) என்ற அலகால் அளவிடப்படுகின்றன. ஒரு பிட் என்பது 0 அல்லது 1 என்னும் ஈரடிமான எண்களைக் குறிப்பதாகும்.
கணினியின் வகைகள்
கணினியானது அமைப்பு, வடிவம், வேகம், திறன், நினைவகம், செயல்படும் முறை, பயன்கள், மின்சக்தி தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.
| வகை | ஆங்கிலப் பெயர் |
|---|---|
| மீக்கணினி | Super Computer |
| பெருமுகக்கணினி | Mainframe Computer |
| நுண்கணினி / தனியாள் கணினி | Micro / Personal Computer |
| குறுமுகக்கணினி | Mini Computer |
தனியாள் கணினியின் வகைகள்
நுண்கணினி என்னமைக்கப்பட்ட கணினியையே தற்போது தனியாள் கணினி என்று அமைக்கின்றோம். இக்கணினியைப் பயன்படுத்துவதற்கு எளிதாக (user friendly) இருப்பதால், பயனாளர்கள் மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். தனியாள் கணினிகளின் அளவையும் செயல்திறனையும் பொருத்து, அவை மூவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: மேசைக்கணினி (Desktop), மடிக்கணினி (Laptop), பலகைக் கணினி - வரைப்பட்டிகை (Tablet).
7.3 கணினியை இணைத்தல்
கணினியின் பல்வேறு பாகங்கள், இணைப்புவடம் (Connecting Cable) மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவதாலேயே, கணினியை ஆங்கிலத்தில் சிஸ்டம் (System) என்று அமைக்கிறோம்.
| இணைப்புவடம் | ஆங்கிலப் பெயர் | பயன்பாடு |
|---|---|---|
| காலொளிப் பட வரிசை | VGA (Video Graphics Array) | மையச்செயலகத்தை திரையுடன் இணைக்க |
| பொதுவரிசை இணைப்பு | USB (Universal Serial Bus) | அச்சுப்பொறி, வருடி, விரலி, சுட்டி, விசைப்பலகை, இணையப்படக்கருவி, திறன்பேசி போன்றவற்றைக் கணினியுடன் இணைக்க |
| மிகுதிமன் பல்லூடக இடைமுகப்பு | HDMI (High Definition Multimedia Interface) | வீடியோ, டிஜிட்டல் ஆடியோ - LED தொலைக்காட்சிகள், ஒளிவீழ்த்தி, கணினித்திரை ஆகியவற்றை இணைக்க |
| தரவுக்கம்பி | Data Cable | கைப்பேசி, கைடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க |
| ஒலி வடம் | Audio Cable | கணினியை ஒலிபெருக்கியுடன் இணைக்க |
| மின் இணைப்புவடம் | Power Cord | மையச்செயலகம், கணினித்திரை, ஒலி பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது |
| ஒலிவாங்கி இணைப்புக்கம்பி | Mic Cable | ஒலிவாங்கியை மையச்செயலகத்துடன் இணைப்பதற்கு |
| ஈதர் வலை இணைப்புக்கம்பி | Ethernet Cable | கணினியுடன் இணையவழித் தொடர்பை ஏற்படுத்த |
7.4 கம்பியில்லா இணைப்புகள்
கம்பியில்லா இணைப்புகள் என்பன, ஊடலை (Bluetooth) மற்றும் அருகலை (Wi-Fi) வாயிலாக, இணைப்புவடம் ஏதுமின்றிக் கருவிகளைக் கணினியுடன் இணைப்பதாகும்.
| வகை | ஆங்கிலப் பெயர் | பயன்பாடு |
|---|---|---|
| ஊடலை | Bluetooth | சுட்டி, விசைப்பலகை ஆகியவற்றைக் கணினியுடன் இணைக்கலாம். அருகில் உள்ள தரவுகளைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும். |
| அருகலை | Wi-Fi | இணைய வசதியை இணைப்புவடம் இல்லாமல் பெறவும், தரவுகளைப் பரிமாறிக்கொள்ளவும் அருகலை பயன்படுகிறது. |
4-3-2-1 சூத்திரம்: கணினியை இணைத்தல்
கணினியின் பல்வேறு பாகங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு கணினியானது முழுமையடைகிறது. 4 கருவிகள்: மையச்செயலகம், கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி இவைகளை 3 இணைப்புக்கம்பிகள்: VGA (கணினித்திரை), USB (விசைப்பலகை), USB (சுட்டி) கொண்டு இணைத்து, 2 சாதனங்களுக்கு (மையச்செயலகம் மற்றும் கணினித்திரை) மின்கம்பி இணைப்பு கொடுத்து, 1 முழுமையான கணினியை இயங்கு நிலைக்குக் கொண்டுவர முடியும்.
சுருக்கம்
- கணினியின் மூன்று முக்கியப் பாகங்கள்: உள்ளீட்டகம், மையச்செயலகம், வெளியீட்டகம்
- விசைப்பலகை மற்றும் சுட்டி மிக முக்கியமான உள்ளீட்டுக் கருவிகள்
- மையச்செயலகம் (CPU) மூன்று பகுதிகளைக் கொண்டது: நினைவகம், ALU, கட்டுப்பாட்டகம்
- CRT மற்றும் TFT என இரண்டு வகையான கணினித்திரைகள் உள்ளன
- தரவுகள் பிட் (Bit) என்ற அலகால் அளவிடப்படுகின்றன
- கணினி வகைகள்: மீக்கணினி, பெருமுகக்கணினி, நுண்கணினி, குறுமுகக்கணினி
- தனியாள் கணினி வகைகள்: மேசைக்கணினி, மடிக்கணினி, பலகைக் கணினி
- VGA, USB, HDMI போன்ற இணைப்புவடங்கள் கணினி பாகங்களை இணைக்கப் பயன்படுகின்றன
- ஊடலை (Bluetooth) மற்றும் அருகலை (Wi-Fi) கம்பியில்லா இணைப்பு முறைகள்