நம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி பல மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒரு பொருள் தன்னுடைய நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வே மாற்றம் எனப்படும். பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடே மாற்றம் எனப்படும். மாற்றம் என்பது இயற்கையின் நியதியாகும்.
மாற்றங்களின் வகைகள்
இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் நம்மைச் சுற்றி நிகழ்கின்றன. மாற்றங்கள் வடிவம், நிறம், வெப்பநிலை, நிலை மற்றும் இயைபு போன்ற பண்புகளில் நிகழலாம். இதன் அடிப்படையில் மாற்றங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
- மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள்
- மீள் மற்றும் மீளா மாற்றங்கள்
- இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்
- விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள்
- இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்
3.1.1 மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள்
மெதுவான மாற்றங்கள்
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன (மணிகள் / நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்). இவை மெதுவான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: நகம் மற்றும் முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.
வேகமான மாற்றங்கள்
சில மாற்றங்கள் நிகழ குறைந்த அளவே நேரத்தை எடுத்துக்கொள்கின்றன (நொடிகள் / நிமிடங்கள்). இவை வேகமான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: பலூன் வெடித்தல், கண்ணாடி உடைதல், பட்டாசு வெடித்தல், காகிதம் எரிதல்.
3.1.2 மீள் மற்றும் மீளா மாற்றங்கள்
மீள் மாற்றம்
சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பமுடிகின்றன. அவ்வகை மாற்றம் மீள் மாற்றம் என்றழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு: தொட்டால் சிணுங்கி தாவரம் (தொடுதலுக்குத் துலங்குதல்), ரப்பர் வளையம் நீளுதல், பனிக்கட்டி உருகுதல்.
மீளா மாற்றம்
சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பமுடியாது. அவ்வகை மாற்றம் மீளா மாற்றம் என்றழைக்கப்படும்.
எடுத்துக்காட்டு: பால் தயிராக மாறுதல், உணவு செரித்தல், மாவிலிருந்து இட்லி தயாரித்தல்.
3.1.3 இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்
இயற்பியல் மாற்றங்கள்
இயற்பியல் மாற்றம் என்பது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும். ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது இயற்பியல் மாற்றங்கள் ஆகும். இங்கு புதிய பொருள் எதுவும் உருவாவது இல்லை.
எடுத்துக்காட்டு: பனிக்கட்டி உருகுதல், சர்க்கரையினை கரைசலாக்குதல், இரப்பர் வளையத்தினை இழுத்தல்.
நீரில் நிகழும் இயற்பியல் மாற்றங்கள்
நீரானது, திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் உள்ளது. வெப்பப்படுத்தல் மூலமோ அல்லது குளிர்வித்தல் மூலமோ இந்நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
| மாற்றம் | முறை |
|---|---|
| பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் | உருகுதல் |
| நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல் | ஆவியாதல் |
| நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல் | ஆவி சுருங்குதல் |
| நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் | உறைதல் |
வேதியியல் மாற்றங்கள்
பொருள்களின் வேதிப்பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது வேதியியல் மாற்றங்கள் எனப்படும். வேதியியல் மாற்றங்கள் புதிய பொருள்களை உண்டாக்குகின்றன.
எடுத்துக்காட்டு: மரம் எரிதல், சோளம் பொரிதல், வெள்ளி ஆபரணங்கள் கருமையாதல், இரும்பு துருப்பிடித்தல்.
| இயற்பியல் மாற்றம் | வேதியியல் மாற்றம் |
|---|---|
| இதில் புதிய பொருள்கள் உருவாவதில்லை | இதில் புதிய பொருள்கள் உருவாகின்றன |
| வேதி இயைபில் மாற்றம் ஏற்படாது | வேதி இயைபில் மாற்றம் ஏற்படும் |
| இது ஒரு தற்காலிக மாற்றம் | இது ஒரு நிரந்தர மாற்றம் |
| இது ஒரு மீள் வினை | இது ஒரு மீளா வினை |
3.1.4 விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள்
விரும்பத்தக்க மாற்றங்கள்
சுற்றுச்சூழலுக்குப் பயன்தரும் அல்லது சுற்றுச்சூழலைப் பாதிக்காத, நம்மால் விரும்பப்படும் மாற்றங்கள் விரும்பத்தக்க மாற்றங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: காய் கனியாதல், பருவ நிலை மாற்றம், தாவரங்கள் வளருதல், உணவு சமைத்தல், பால் தயிராதல்.
விரும்பத்தகாத மாற்றங்கள்
சுற்றுச்சூழலுக்குப் பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய, நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் விரும்பத்தகாத மாற்றங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: காடுகள் அழிதல், பழம் அழுகுதல், இரும்பு துருப்பிடித்தல்.
3.1.5 இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்
இயற்கையான மாற்றங்கள்
இயற்கையில் தானாகவே நிகழும் மனித கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றங்கள் இயற்கையான மாற்றங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: புவியின் சுழற்சி, மழை பெய்தல், அமாவாசை முதல் பௌர்ணமி வரை நிலவின் வெவ்வேறு நிலைகள்.
மனிதனால் ஏற்படுத்தப்படும் (செயற்கையான) மாற்றங்கள்
மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள் எனப்படும். இத்தகைய மாற்றங்கள் தன்னிச்சையாக நிகழாது.
எடுத்துக்காட்டு: சமைத்தல், காடுகளை அழித்தல், பயிரிடுதல், கட்டிடங்கள் கட்டுதல்.
கரைதல் (Dissolution)
திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை நாம் கரைதல் என்கிறோம்.
- கரைப்பான் என்பது கரைபொருளைக் கரைக்கக்கூடிய பொருளாகும். (எ.கா: நீர்)
- கரைபொருள் என்பது கரைப்பானில் கரையக்கூடிய பொருளாகும். (எ.கா: சர்க்கரை, உப்பு)
கரைபொருள் + கரைப்பான் → கரைசல்
நீர் ஒரு பொதுக் கரைப்பான். அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.
சுருக்கம்
- உலகிலுள்ள அனைத்துமே ஏதோ ஒரு மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது — இடம், வடிவம், உருவம், நிலை, வண்ணம், வெப்பநிலை மற்றும் இயைபில் நிகழலாம்.
- வேகமான மாற்றம் — குறுகிய கால அளவில் நடைபெறும்; மெதுவான மாற்றம் — அதிக காலம் எடுத்துக்கொள்ளும்.
- மீள் மாற்றம் — மீண்டும் தன் ஆரம்ப நிலையை அடையும்.
- மீளா மாற்றம் — மீண்டும் தன் ஆரம்ப நிலையை அடையாது.
- இயற்பியல் மாற்றம் — புதிய பொருள் உருவாகாத தற்காலிக மாற்றம்.
- வேதியியல் மாற்றம் — புதிய பொருள்கள் உருவாகும் நிரந்தர மாற்றம்.
- விரும்பத்தக்க மாற்றம் — சுற்றுச் சூழலுக்குப் பயன் தரக்கூடியது மற்றும் ஆபத்து அற்றது.
- விரும்பத்தகாத மாற்றம் — சுற்றுச் சூழலுக்குப் பயன்தராதது மற்றும் ஆபத்தானது.
- இயற்கையான மாற்றம் — இயற்கையில் தன்னிச்சையாக நடைபெறக்கூடியது.
- மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் — மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தியது.
- கரைசல் = கரைபொருள் + கரைப்பான். நீர் ஒரு பொதுக் கரைப்பான்.