நாம் வாழும் உலகில் பல்வகையான விலங்குகள் காணப்படுகின்றன. பாலைவனம், காடுகள், மலைகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கடல் என பல்வேறு சூழ்நிலை மண்டலங்களில் விலங்குகள் வாழ்கின்றன. ஒவ்வொரு விலங்கும் தனது வாழிடத்திற்கு ஏற்றவாறு சிறப்பு அமைப்புகளைப் பெற்றுள்ளது. இந்த அத்தியாயத்தில் விலங்குகள் வாழும் உலகம் பற்றி விரிவாக அறிந்துகொள்வோம்.
5.1 உயிரினங்களின் பல்லுயிர்த் தன்மை
நாம் வாழும் உலகில் தாவரங்களிலும், விலங்குகளிலும் அதிகமான வேறுபட்ட தன்மை காணப்படுகிறது. ஒவ்வொரு தாவரமும், விலங்கும் தனித் தன்மை வாய்ந்தவை. அவை வாழும் வாழிடங்களில் காணப்படும் வகைகள் மற்றும் வேறுபாடுகளை பல்லுயிர்த் தன்மை என வரையறுக்கப்படுகிறது.
உயிரினங்களின் பல்லுயிர்த் தன்மை என்பது பாலைவனங்கள், காடுகள், மலைகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வயல்வெளிகள் ஆகிய பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்திலும் மனிதன் உட்பட வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு சமூகத்தை அமைத்துக்கொண்டு தங்களுக்குள்ளும் தங்களைச் சுற்றியுள்ள பிற விலங்குகள், தாவரங்கள், காற்று, நீர் மற்றும் மண் ஆகியவற்றோடும் தொடர்பு கொள்கின்றன.
வாழிடம் (Habitat)
மீன் மற்றும் நண்டு ஆகியவை நீரிலும், யானை, புலி மற்றும் ஒட்டகம் போன்ற பல விலங்குகள் நிலத்திலும் வாழ்கின்றன. பூமியில் காணப்படும் புவியியல் தன்மைகளும், சூழ்நிலை அமைப்பின் தன்மைகளும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.
ஒட்டகம் வேறுபட்ட சூழ்நிலையில் வாழும் தன்மையைப் பெற்றிருந்தாலும் பாலைவனங்கள்தான் அவற்றிற்கு வசதியான இடமாகும். துருவக் கரடிகளும், பெங்குயின்களும் குளிர் பிரதேசங்களில் வாழ்கின்றன. விலங்குகள் வாழும் இடம், அதன் வாழிடம் ஆகக் கருதப்படுகிறது.
5.2 ஒரு செல் மற்றும் பல செல் உயிரினங்கள்
உயிரினங்கள் செல் என்னும் மிகச் சிறிய செயல்படும் அலகுகளால் ஆனவை. உயிரினங்களின் உடலில் நடைபெறும் அனைத்துப் பணிகள் மற்றும் செயல்பாடுகளும் இந்த நுண்ணிய செல்களின் மூலமாகவே செயல்படுத்தப்படுகின்றன.
- சில உயிரினங்கள் ஒரே செல்லால் ஆனவை — இவை ஒரு செல் உயிரிகள் எனப்படுகின்றன. எ.கா: அமீபா, பாரமீசியம், யூகளினா
- சில உயிரினங்கள் பல செல்களால் ஆனவை — இவை பல செல் உயிரினங்கள் எனப்படுகின்றன. எ.கா: மண்புழு, மீன், தவளை, பல்லி, மனிதன்
ஒரு செல் உயிரிகள்
ஒரு செல் உயிரினங்கள் மிகச்சிறியவை. அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியாது; நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். அவை நீரில் வாழும் தன்மை கொண்ட, எளிய மற்றும் அனைத்து விலங்குகளிலும் முதன்மையானவை ஆகும்.
அமீபா
அமீபா ஓர் ஒரு செல் உயிரி. உணவு செரித்தல், இடப்பெயர்ச்சி, சுவாசித்தல் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய அனைத்து செயல்பாடுகளும் ஒரே செல்லிற்குள் நடைபெறுகின்றன. இவை நீரில் உள்ள உணவுத்துகள்களை விழுங்குகின்றன. போலிகால்கள் (Pseudopodia) என்னும் விரல் போன்ற நீட்சிகளால் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
பாரமீசியம்
பாரமீசியம் என்பதும் நீரில் வாழும் ஒரு செல் உயிரினம் ஆகும். இது தன்னுடைய குறு இகைகள் (Cilia) மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
யூகளினா
ஒரு செல் உயிரியான யூகளினா, கசையிகை (Flagellum) மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
| ஒரு செல் உயிரிகள் | பல செல் உயிரிகள் |
|---|---|
| ஒரு செல்லால் ஆனவை | பல செல்களால் ஆனவை |
| ஒரு செல்லே வாழ்க்கைச் செயல்கள் அனைத்தையும் மேற்கொள்கிறது | செல்களுக்கிடையே பணிகள் பிரிக்கப்படுகின்றன |
| பொதுவாக இவை அளவில் மிகச் சிறியவை; நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க இயலும் | பொதுவாக இவை அளவில் பெரியவை; கண்களால் பார்க்க இயலும் |
| இவற்றில் திசுகள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் கிடையாது | இவற்றில் திசுகள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் உள்ளன |
| செல்களின் அளவு அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி நடைபெறுகிறது | செல்பிரிவு மூலம் செல்களின் எண்ணிக்கை அதிகரித்து வளர்ச்சி நடைபெறுகிறது |
| எ.கா: அமீபா, பாரமீசியம், யூகளினா | எ.கா: மண்புழு, மீன், தவளை, பல்லி, மனிதன் |
5.3 விலங்கினங்களின் தகவமைப்பு
ஓர் உயிரினம் தன் உடலை ஒரு குறிப்பிட்ட வாழிடத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொண்டால்தான், அது அங்கு உயிர்வாழ முடியும். தாவரங்களும், விலங்குகளும் ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்கேற்ப சிறப்புத் தன்மைகளையும், பண்புகளையும் பெற்றுள்ளன. இந்த சிறப்பு அமைப்புகளே தகவமைப்புகள் எனப்படுகின்றன.
மீனின் தகவமைப்பு
மீன்கள் நன்னீர் அல்லது கடல்நீரில் வாழ்கின்றன. மீன்களின் நீர்வாழ் தகவமைப்புகள்:
- மீனின் தலை, உடல் மற்றும் வால் ஆகியவை இணைந்து படகு போன்ற வடிவத்தை உருவாக்குகின்றன. இது நீரில் எளிதாகவும், வேகமாகவும் நீந்த உதவுகிறது.
- மீன்கள் செவுள்கள் என்னும் சிறப்பு உறுப்புகளைப் பெற்றுள்ளன. இது நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனை உறிஞ்ச உதவுகிறது.
- பெரும்பாலான மீன்களின் உடல் முழுவதும் வழவழப்பான செதில்கள் காணப்படுகின்றன. இவை மீனின் உடலைப் பாதுகாக்கின்றன.
- மீன் நீரில் நீந்துவதற்காக துடுப்புகள் பெற்றுள்ளது.
- உறுதியான வால் துடுப்பு திசைதிருப்பும் துடுப்பாக செயல்படுவதோடு, உடல் சமநிலை பெறவும் உதவுகிறது.
தவளை (இருவாழ்விகள்)
இருவாழ்விகள் என்னும் உயிரினங்கள் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய இரட்டை வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளன. இவை மாறும் வெப்ப நிலையுள்ள விலங்குகளாகும். இவற்றில் தலை மற்றும் இரண்டு ஜோடி கால்களைப் பெற்ற பெரிய உடற்பகுதி காணப்படுகின்றன. இவை இளம் உயிரி நிலையில் செவுள்கள் மூலமும், முதிர் உயிரி நிலையில் தோல், வாய்க்குழி மற்றும் நுரையீரல்கள் மூலமும் சுவாசிக்கின்றன.
பல்லியின் தகவமைப்பு
- பல்லிகள் செதில்களாலான தோல் அமைப்பைக் கொண்ட ஊர்வன வகையைச் சார்ந்தவை.
- இவை பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழக்கூடியவை.
- பெரும்பாலான பல்லிகள் நான்கு கால்களால் நடக்கக் கூடியவை; இவற்றின் கால்கள் வலிமை வாய்ந்தவை.
- சில பல்லிகள் இரு கால்களில் ஓடக் கூடியவை.
- பல்லிகள் நுரையீரல்கள் மூலம் சுவாசிக்கின்றன.
- பெரும்பாலான பல்லிகள் கொசு மற்றும் கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகளை உண்கின்றன. நாக்கில் காணப்படும் நீட்சிப் பகுதிகள் இரையை இழுத்துப் பிடிக்க பயன்படுகின்றன.
பறவைகளின் தகவமைப்பு
- பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட, படகு போன்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. இந்த அமைப்பின் மூலம் காற்றில் பறக்கும்போது அவற்றிற்கு குறைந்த அளவு தடை ஏற்படுகிறது.
- பறவைகளுக்கு வாய்க்குப் பதிலாக அலகுகள் உள்ளன.
- அவை நுரையீரல்கள் மூலம் சுவாசிக்கின்றன.
- பறவையின் முன்னங்கால்கள் இரண்டும் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன.
- இவை காற்றரைகளுடன் கூடிய எடை குறைவான எலும்புகள் பெற்றுள்ளன.
- பறவையின் வால் அது பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- ஒரே சமயத்தில் இரண்டு கண்கள் மூலம் இரு வேறுவேறு பொருட்களைப் பறவைகளால் காண முடியும். இதற்கு இருவிழிப் பார்வை என்று பெயர்.
- பருவ மாறுபாட்டின் காரணமாக விலங்குகள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்வது வலசை போதல் எனப்படும். தமிழ் நாட்டில் வேடந்தாங்கல், கோடியக்கரை மற்றும் கூடன்குளம் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் காணப்படுகின்றன.
ஒட்டகத்தின் தகவமைப்பு
ஒட்டகம் நீர் குறைந்த, வெப்பநிலை அதிகமான பாலைவனத்தில் வாழ்கிறது. அங்கு வாழ்வதற்கேற்ப அதன் உடல் பல சிறப்பு அமைப்புகளைப் பெற்றுள்ளது:
- ஒட்டகத்திற்கு நீண்ட கால்கள் இருப்பதால் பாலைவனத்தில் உள்ள சூடான மணலிற்கு மேல் அதன் உடல் சற்று உயரத்தில் இருக்கிறது.
- இவை கிடைக்கும்போதெல்லாம் அதிக அளவு நீரை அருந்தி, தன் உடலில் சேமித்து வைத்துக்கொள்கின்றன.
- ஒட்டகம் குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது; அதன் சாணம் வறண்டு காணப்படும்; அதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை.
- ஒட்டகம் தனது திமில் பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கிறது. ஆற்றல் தேவைப்படும் காலங்களில் அது திமிலில் சேமித்து வைத்துள்ள கொழுப்பைச் சிதைத்து ஊட்டம் பெறுகிறது.
- ஒட்டகம் பெரிய மற்றும் தட்டையான கால்கள் மூலம் மிருதுவான மணலின் மீது நன்றாக நடக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனால் ஒட்டகம் பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுகிறது.
- ஒட்டகத்தின் நீண்ட கண் இமைகள் மற்றும் ரோமங்கள் அதன் கண் மற்றும் காதுகளை புழதிப் புயலிலிருந்து பாதுகாக்கின்றன.
- பாலைவனத்தில் ஏற்படும் புழதிப் புயலின் மூலம் ஏற்படும் தூசிகள் உள்ளே செல்வதைத் தடுக்க அவை நாசித் துவாரங்களை மூடிக்கொள்கின்றன.
சிறப்பு தகவமைப்புகள்
| வரிசை எண் | விலங்கின் பெயர் | வாழிடம் | தகவமைப்புகள் |
|---|---|---|---|
| 1 | துருவக் கரடி | துருவப் பகுதி | பாதுகாப்பிற்கேற்ற தடிமனான தோல், வெண்மையான உரோமங்கள் |
| 2 | பெங்குயின் | துருவப் பகுதி | நீந்துவதற்கேற்ற துடுப்புகள், நடப்பதற்கேற்ற இரண்டு கால்கள் |
| 3 | வரையாடு | மலைப் பகுதி | ஓடுவதற்கேற்ற வலுவான குளம்புகள், குளிரில் இருந்து பாதுகாக்க நீளமான உரோமங்கள் |
| 4 | சிங்கம் | காடு | வலுவான மற்றும் வேகமாக ஓடக் கூடிய தன்மை, இரையைப் பிடிப்பதற்கான கூர்மையான நகங்கள் |
குளிர்கால உறக்கம் மற்றும் நோக்கால உறக்கம்
- சில விலங்குகள் அதிகப்படியான குளிரைத் தவிர்க்க, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்த நிலைக்கு குளிர்கால உறக்கம் (Hibernation) என்று பெயர். எ.கா: நத்தை.
- சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தைத் தவிர்க்க, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்த நிலைக்கு நோக்கால உறக்கம் (Aestivation) என்று பெயர். எ.கா: ஆமை.
சுருக்கம்
- வாழிடம் என்பது ஒரு உயிரினம் வாழக்கூடிய இடமாகும் — நீர், நிலம், காடு, பாலைவனம், மலை போன்றவை வாழிடங்களாகும்.
- ஒரு செல் உயிரிகள்: அமீபா, பாரமீசியம், யூகளினா — இவை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும்.
- பல செல் உயிரிகள்: மீன், தவளை, பல்லி, பறவை, மனிதன் போன்றவை.
- அமீபா — போலிகால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
- பாரமீசியம் — குறு இகைகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
- யூகளினா — கசையிகை மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
- மீன் — செவுள்கள் மூலம் சுவாசிக்கிறது; படகு வடிவ உடல், செதில்கள், துடுப்புகள் கொண்டது.
- தவளை — இளமையில் செவுள்கள் மூலமும், முதிர்ச்சியில் நுரையீரல் மற்றும் தோல் மூலமும் சுவாசிக்கிறது.
- பல்லி — நுரையீரல்கள் மூலம் சுவாசிக்கிறது; செதில்களாலான தோல் கொண்டது.
- பறவை — இறக்கைகள், அலகு, காற்றரை எலும்புகள், வலசை போதல் இவை பறவையின் சிறப்புத் தன்மைகள்.
- ஒட்டகம் — திமிலில் கொழுப்பு சேமிப்பு; பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுகிறது.
- குளிர்கால உறக்கம் (Hibernation) — நத்தை; நோக்கால உறக்கம் (Aestivation) — ஆமை.