தாவர உலகம் என்பது நம்மைச் சூழ்ந்துள்ள பச்சை உலகமாகும். உயிரினங்களின் வாழ்க்கைமுறை, அமைப்பு மற்றும் செயல்களைப் பற்றி பயிலும் இயற்கை அறிவியல் உயிரியல் ஆகும். தாவரங்கள் தங்களுக்குரிய உணவைத் தாங்களே தயாரிக்கின்றன; உடல் வளர்ச்சியடைகின்றன; மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றன. தாவரங்களின் பல்வேறு பகுதிகள் உணவாக, மருந்தாக, மரக்கட்டைகளாக, மற்றும் வாழிடமாக பயன்படுகின்றன.
4.1. தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்
நமது உடல் பல்வேறு உறுப்புகளைக் கொண்டது. அதுபோல, தாவரங்களும் இலை, தண்டு, வேர் மற்றும் மலர்கள் ஆகிய பாகங்களைக் கொண்டுள்ளன. தாவரங்கள் அமைப்பிலும், நிறங்களிலும் வேறுபட்டாலும், அவை ஒருசில பண்புகளில் ஒத்துள்ளன. பெரும்பாலான தாவரங்களின் தண்டு மற்றும் இலைகள் நிலத்திற்கு மேலேயும், அவற்றின் வேரானது நிலத்திற்குக் கீழேயும் உள்ளது.
பூக்கும் தாவரங்கள் இரண்டு முக்கியத் தொகுப்புகளைக் கொண்டுள்ளன:
- 1. வேர்த் தொகுப்பு
- 2. தண்டுத் தொகுப்பு
1. வேர்த் தொகுப்பு
வேர் என்பது ஒரு தாவரத்தின் முக்கிய அச்சின் கீழ்ப் பகுதியாகும். இது நிலத்திற்குக் கீழே காணப்படுகிறது. வேர்களில் கணுக்களும், கணுவிடைப் பகுதிகளும் இல்லை. அதன் நுனிப் பகுதியில் வேர்மூடி உள்ளது. வேர் நுனிக்குச் சற்று மேற்பகுதியில் வேர்த்தூவிகள் ஒரு கற்றையாகக் காணப்படுகின்றன. வேர்கள் நேர் புவிநாட்டம் உடையவை.
தாவரங்களின் வேர்த் தொகுப்புகள் இரண்டு வகைப்படும்:
| வேர்த் தொகுப்பு வகை | அமைப்பு | காணப்படும் தாவரங்கள் | எடுத்துக்காட்டு |
|---|---|---|---|
| அ. ஆணிவேர்த் தொகுப்பு | விதையிலிருந்து முளைவேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகிறது. இதிலிருந்து துணை வேர்களான இரண்டாம்நிலை வேர்கள் தோன்றுகின்றன. | பொதுவாக இரு வித்திலைத் தாவரங்களில் காணப்படுகிறது | அவரை, மா, வேம்பு |
| ஆ. சல்லிவேர்த் தொகுப்பு | முதல்நிலை வேர் சிறிது காலத்தில் அழிந்து, தண்டின் அடிப்பகுதியில் சம பருமனுள்ள வேர்கள் கொத்தாகத் தோன்றி வளர்கின்றன. | பெரும்பாலும் ஒரு வித்திலைத் தாவரங்களில் காணப்படுகிறது | நெல், புல், மக்காச் சோளம் |
வேரின் பணிகள்
- வேர்கள் தாவரத்தைப் பூமியில் நிலை நிறுத்துகின்றன.
- மண்ணிலிருந்து நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சுகின்றன.
- கேரட், பீட்ரூட் போன்ற தாவரங்கள் தாங்கள் தயாரித்த உணவைத் தங்களின் வேர்களில் சேமிக்கின்றன.
2. தண்டுத் தொகுப்பு
நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற தாவரப் பகுதிக்கு தண்டுத் தொகுப்பு என்று பெயர். இதன் மைய அச்சு தண்டு என அழைக்கப்படும். தண்டுத்தொகுப்பானது இலைகள், மலர்கள் மற்றும் கனிகளைக் கொண்டுள்ளது.
தண்டு பூமியின் மேற்பரப்பில் சூரியனை நோக்கி வளர்கிறது. தண்டில் கணுக்களும், கணுவிடைப் பகுதிகளும் உள்ளன. தண்டில் இலைகள் தோன்றும் பகுதி கணு எனப்படும். இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள பகுதி கணுவிடைப் பகுதி எனப்படும். தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு நுனி மொட்டு எனப்படும். இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு கோண மொட்டு எனப்படும்.
தண்டின் பணிகள்
- தண்டானது கிளைகள், இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றைத் தாங்குகின்றது.
- வேரினால் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்குக் கடத்தப்படுகின்றன.
- இலையினால் தயாரிக்கப்பட்ட உணவு தண்டின் வழியாக தாவரத்தின் பிற பாகங்களுக்குக் கடத்தப்படுகின்றது.
- சில தாவரங்கள் உணவைத் தண்டில் சேமித்து வைக்கின்றன. எ.கா. கரும்பு.
இலை
தண்டின் கணுவின் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும் புறஅமைப்பு இலை ஆகும். தண்டு மற்றும் இலையை இணைக்கும் காம்புப் பகுதியே இலைக் காம்பு எனப்படும். பசுமையான தட்டையான பகுதிக்கு இலைத் தாள் அல்லது இலைப் பரப்பு என்று பெயர். இலையின் மையத்தில் உள்ள நரம்பிற்கு மைய நரம்பு என்று பெயர். மைய நரம்பிலிருந்து கிளை நரம்புகள் தோன்றுகின்றன.
இலைகள் பசுமை நிறத்தில் உள்ளன. அதற்குக் காரணம் அவற்றிலுள்ள பச்சை நிறமிகளான பச்சையம் (Chlorophyll) ஆகும். இலையின் அடிப்பகுதியில் நுண்ணிய துளைகள் காணப்படுகின்றன. இவை இலைத் துளைகள் எனப்படுகின்றன.
இலையின் பணிகள்
- ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவைத் தயாரிக்கிறது.
- சுவாசித்தல்லுக்கு உதவுகிறது.
- இலைத்துளை வழியே நீராவிப் போக்கு நடைபெறுகிறது.
4.2. வாழிடம்
ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் அதற்கு ஒரு இடம் தேவை. அந்த இடமே அதன் வாழிடம் ஆகும். கடலின் அடி மட்டத்தில் இருந்து, மலையின் உச்சி வரை தாவரங்கள் மற்றும் விலங்குகள் காணப்படும் இடம் அவற்றின் வாழிடங்களாக உள்ளன.
| வாழிடம் | வகைகள் | உட்பிரிவுகள் | எடுத்துக்காட்டு தாவரங்கள் |
|---|---|---|---|
| நீர் வாழிடம் | நன்னீர் வாழிடம் | ஆறு, ஏரி, குட்டை, குளம் | ஆகாயத் தாமரை, அல்லி, தாமரை |
| கடல் நீர் வாழிடம் | கடல் | கடல் பாசிகள், கடல் புற்கள், சதுப்பு நிலப் புற்கள் | |
| நில வாழிடம் | காடுகள் | வெப்ப மண்டலக் காடுகள், குளிர் பிரதேசக் காடுகள், மலைக் காடுகள் | பசுமைமாறாக் காடுகள், முட்புதர் காடுகள் |
| புல்வெளிகள் | சவானா | புற்கள் (மிகச்சிறியன முதல் மிக உயரமான வரை) | |
| பாலைவனங்கள் | வெப்பமான, மித வெப்பமான, கடல் சார்ந்த, குளிர் பாலைவனங்கள் | சப்பாத்திக் கள்ளி, அகேவ், கற்றாழை, பிரையோஃபில்லம் |
நீர் வாழிடம்
நீர்வாழிடம் என்பது நிரந்தரமாக நீரால் சூழ்ந்த பகுதியையும், அவ்வப்போது நீர் சூழ்ந்த பகுதியையும் உள்ளடக்கியது. வாழிடங்கள் இருவகைப்படும்: நன்னீர் வாழிடம் மற்றும் கடல் நீர் வாழிடம். நீர்த்தாவரங்களின் வேர்கள் வளர்ச்சி குன்றியவை. தண்டிலும், இலைப் பகுதிகளிலும் காற்றறைகள் அதிகமாக இருப்பதால் இவை நீரில் எளிதில் மிதக்கின்றன. பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் 40% கடல்வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது.
நில வாழிடம்
காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் ஆகிய நிலப்பரப்புகளில் காணப்படும் வாழிடங்கள் நில வாழிடங்கள் எனப்படும். உலகில் 28% நில வாழிடங்கள் உள்ளன. பாலைவனங்களில் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 25 செ.மீக்கும் குறைவாக இருக்கும். பூமியின் நிலப்பரப்பில் சுமார் 20 சதவீதம் பாலைவனங்கள் உள்ளன.
4.3. தாவரங்களின் தகவமைப்புகளும் மாற்றுருக்களும்
தாவரங்கள் பல ஆண்டுகளாக அவை வாழும் வாழிடங்களில் தொடர்ந்து வாழ்வதற்கேற்ற வகையில் அவற்றில் காணப்படும் சிறப்பம்சங்களே தகவமைப்புகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது வாழிடங்களில் வாழும் தாவரங்கள், அங்கு வாழ்வதற்கேற்ற குறிப்பிட்ட தகவமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.
| தகவமைப்பு வகை | விளக்கம் | எடுத்துக்காட்டு |
|---|---|---|
| பற்றுக் கம்பி (ஏறு கொடிகள்) | மெலிந்த தண்டுடைய தாவரங்களில் காணப்படும் பற்றி ஏறும் உறுப்பு. ஒரு ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு தாவரங்கள் மேல் ஏறுவதற்கேதுவாக பற்றுக்கம்பி உள்ளது. | இனிப்புப் பட்டாணி (சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன), பாகற்காய் (கோணமொட்டு பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன) |
| பின்னு கொடி | சில தாவரங்கள் நீண்ட, மெலிந்த தண்டுகளைக் கொண்டுள்ளன. அவை தானாகவே நேராக நிலைத்து நிற்கும் தன்மையற்றவை. அவை ஆதாரத்தைப் பற்றிக்கொண்டு வளர்கின்றன. | சங்குப் பூ, மல்லிகை |
| முட்கள் | சில தாவரங்களின் இலைகள் பாதுகாப்பு உதவும் வகையில் முழுமையாகவோ அல்லது ஓரளவிற்கோ கூரிய முட்களாக மாறுகின்றன. | அகேவ் (இலையின் நுனிப்பகுதி முட்களாக மாறியுள்ளன), சப்பாத்திக் கள்ளி (இலைகள் சிறு முட்களாக மாறியுள்ளன), காகிதப் பூ/போகெய்ன்வில்லா (தண்டுப் பகுதியில் கூர்மையான முட்கள் காணப்படுகின்றன) |
தாவர வகைப்பாடு
எதன் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்துகிறோம் என்பதை அறிவோம்:
| வகைப்பாட்டு அடிப்படை | வகை 1 | வகை 2 | எடுத்துக்காட்டு |
|---|---|---|---|
| பூவின் அடிப்படையில் | பூக்கும் தாவரங்கள் | பூவாத் தாவரங்கள் | சூரியகாந்தி (பூக்கும்), ரிக்ஸியா (பூவாத) |
| விதை அமைந்திருக்கும் அடிப்படையில் | ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதைத் தாவரங்கள் - விதைகள் கனிகளில் புதைந்திருக்கும்) | ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைத் தாவரங்கள் - விதைகள் கனிகளில் புதைந்திருக்காது) | மா (மூடிய விதை), சைகஸ் (திறந்த விதை) |
சுருக்கம்
- பூக்கும் தாவரங்களில் இரு முக்கியத் தொகுப்புகள் உள்ளன: வேர்த் தொகுப்பு மற்றும் தண்டுத் தொகுப்பு.
- வேர், தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்தச் செய்கிறது; மண்ணிலிருந்து நீரையும், கனிம உப்புகளையும் உறிஞ்சுகிறது.
- தண்டு, மைய அச்சாக இருந்து நீரையும் உணவையும் கடத்துகிறது.
- இலைகளின் மூன்று முக்கியப் பணிகள்: ஒளிச்சேர்க்கை, சுவாசம், நீராவிப் போக்கு.
- தாவரங்கள் வாழும் சுற்றுப்புறமே அவற்றின் வாழிடம் எனப்படும்.
- இரண்டு வகையான வாழிடங்கள்: நீர் வாழிடம் மற்றும் நில வாழிடம்.
- தகவமைவுகள் - ஒரு தாவரம் அதன் வாழிடத்தில் வாழ்வதற்கேற்ப, அவற்றில் காணப்படக்கூடிய சிறப்பு அம்சங்கள்.
- பற்றுக் கம்பி, பின்னு கொடி, முட்கள் ஆகியவை முக்கியமான தகவமைப்புகள்.