சமய இலக்கியங்கள்
பக்தி இலக்கியங்களின் தோற்றம்
- பக்தி இலக்கிய காலத்தில் இயற்றமிழ்ப் பாடல்கள் பண்ணோடு இயைந்து இசைத்தமிழ் பாடல்களாக மாறியுள்ளன
- வடமொழிச் சொற்களும் தமிழுடன் இணைந்து புதிய மரபு தோன்றியது
- இந்த எழுச்சிக்கு ஆதரவளித்த பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனப்படுகிறது
- நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றி "உலக இன்பங்களைத் துய்த்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம். இறைவன் அன்பின் வடிவானவன். அன்பு ஒன்றே அவனை அடையும் வழி" என்று இல்லறத்திற்கு முதன்மை கொடுத்தனர்
- இறைவனை ஆண்டான், தந்தை, தோழன், நாயகன் என பல பரிமாணங்களில் கண்டு போற்றினர்
- இவற்றையே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றனர்
பக்தி நெறிகள் மற்றும் பின்பற்றியவர்கள்
|
நெறி |
பின்பற்றியவர்கள் |
|
அடிமை நெறி (தாச மார்க்கம்) |
திருநாவுக்கரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் |
|
பிள்ளைமை நெறி (சற்புத்திர மார்க்கம்) |
திருஞானசம்பந்தர் |
|
தோழமை நெறி (சக மார்க்கம்) |
சுந்தரர், திருமழிமிசையாழ்வார் |
|
நாயகன்-நாயகி நெறி (ஞான மார்க்கம்) |
மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் |
- பெரியாழ்வார் - இறைவனை குழந்தையாகக் கருதி தாலாட்டு பாடல்கள் பல பாடியுள்ளார்
- ஆண்டாள் - பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள், இறைவனையே தன் தலைவனாக பாவித்து வாழ்ந்தாள்
- சிவனைத் தலைவனாக கொண்ட 27 அடியார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள்
- திருமாலைத் தலைவனாக கொண்ட 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
- முகலாயப் படையெடுப்பின் காரணமாக தமிழகத்தில் இசுலாம் பரவியது
- இசுலாமியக் கவிஞர்கள் தமிழ்மரபினைப் பின்பற்றி இறைவனையும், இறைவனின் திருத்தூதரான நபிகள் நாயகத்தையும் போற்றிப் பரவினர்
பன்னிரு திருமுறைகள்
|
திருமுறை |
நூல்கள் |
ஆசிரியர்கள் |
|
முதல், இரண்டாம், மூன்றாம் |
தேவாரம் |
திருஞானசம்பந்தர் |
|
நான்காம், ஐந்தாம், ஆறாம் |
தேவாரம் |
திருநாவுக்கரசர் |
|
ஏழாம் |
தேவாரம் |
சுந்தரர் |
|
எட்டாம் |
திருவாசகம், திருக்கோவையார் |
மாணிக்கவாசகர் |
|
ஒன்பதாம் |
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு |
திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட 9 பேர் |
|
பத்தாம் |
திருமந்திரம் |
திருமூலர் |
|
பதினோராம் |
40 நூல்களின் தொகுப்பு |
காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 12 பேர் |
|
பன்னிரண்டாம் |
திருத்தொண்டர்புராணம் (பெரியபுராணம்) |
சேக்கிழார் |
சைவம்
திருநாவுக்கரசர் சிவபெருமானிடம் இப்பிறப்பு மட்டுமல்லாமல் எப்பிறப்பிலும் உனக்கு நான் அடிமை. நின் திருநாமமே எனது படைக்கலம் எனக் குறிப்பிடுகிறார்:
படைக்கல மாகவுன் நாமத் தெழுத்தஞ்சுஎன் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன்; எழுபிறப்பும் உனக்காட் செய்கின்றேன்
துடைக்கினும் போகேன்; தொழுது வணங்கித் தூநீறணிந்துன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே!
வைணவம்
நாராயணனாகிய திருமாலின் பெயரை அன்போடு உச்சரிப்பதால் அடியவர்கள் எய்தும் நன்மையை பூதத்தாழ்வார் பாடலால் உணர்த்துகிறார்:
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் - வானத்
தணியமர ராக்குவிக்கு மஃதன்றே நாங்கள்
பணியமரர் கோமான் பரிசு
பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் அவர்களின் நூல்கள்
|
ஆழ்வார் |
நூல்கள் |
|
பொய்கையாழ்வார் |
முதல் திருவந்தாதி |
|
பூதத்தாழ்வார் |
இரண்டாம் திருவந்தாதி |
|
பேயாழ்வார் |
மூன்றாம் திருவந்தாதி |
|
திருமழிமிசையாழ்வார் |
நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் |
|
நம்மாழ்வார் |
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி |
|
குலசேகராழ்வார் |
பெருமாள் திருமொழி |
|
தொண்டரடிப் பொடியாழ்வார் |
திருமலை, திருப்பள்ளியெழுச்சி |
|
பெரியாழ்வார் |
திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி |
|
ஆண்டாள் நாச்சியார் |
திருமொழி, திருப்பாவை |
|
திருப்பாணாழ்வார் |
திருப்பதிகம் |
|
திருமங்கையாழ்வார் |
பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் |
|
மதுரகவியாழ்வார் |
திருப்பதிகம் |
சமணம்
அனைத்து விதமான சிறந்த குணங்களையும் தெய்வமென கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று சமண சமயக் காப்பியமான சீவக சிந்தாமணியில் திருத்தக்கதேவர் குறிப்பிடுகின்றார்:
மூவா முதலா உலகம்ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை யாயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே!
பெளத்தம்
- மணிமேகலை பெளத்த சமயக் கருத்துகளை பரப்பும் சிறந்ததோர் நூலாக விளங்குகிறது
- இது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கும் தூய அறிவுமிக்க நூலை அருளிய புத்தரைப் போற்றுகிறது
இசுலாம்
சீறாப்புராணத்தில் உமறுப்புலவர் முகம்மது நபிகளின் அருளில் ஆட்பட்டு பக்திமை தோன்ற வியந்து போற்றுகின்றார்.
கிறித்துவம்
- இயேசு பெருமான் மனிதகுலத்தின் உயர்வுக்காக உயிர் நீத்த திருச்சிலுவை, கிறித்துவ நம்பிக்கைக்கு அடிப்படையாக விளங்குகிறது
- சிலுவையில் அறையப்பட்ட போதும் பகைவர்க்கு அருளிய இயேசுவே உலக இரட்சகர்
- இதற்கு வேறு சான்றுகள் வேண்டுமோ? என அன்பு மேலிடும் இரட்சணிய யாத்திரிகப் பாடல் வழியே எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை வினவுகிறார்