சங்க இலக்கியத்தில் அறம்
தமிழர் பொருள் ஈட்டி அறம்செய்து இன்புற்றனர். இல்வாழ்க்கையை அறவாழ்க்கையாகக் கொண்டனர். உலகப் பரிசாகக் கிடைத்தாலும் பழிதரும் செயல்களைச் செய்ய மறுத்தனர்.
சங்ககாலத்தில் அறத்தை மனித உறவின் வடிவமாகக் கொண்டிருந்தனர். சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் சங்ககாலம்.
மனிதன் தனியானவன் அல்லன். அவன் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் சமூகக் கடலின் ஒருதுளி. அவனுக்குள்ளே சமூகம் – சமூகத்துக்குள்ளே அவன்.
சங்க இலக்கியம் அகம் மற்றும் புறம் என இரு பிரிவுகளில் அமைந்துள்ளது. அகம் என்பது காதல் வாழ்க்கையையும், புறம் என்பது வீரம், கொடை, அறம் ஆகியவற்றையும் பற்றிய பாடல்களைக் கொண்டது.
புறநானூற்றில் பல பாடல்கள் அறத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றன. கொடுத்தல், வீரம், நட்பு, விருந்தோம்பல் ஆகியவை சங்க கால அறத்தின் முக்கிய அம்சங்களாகும்.