மொழிக் குறிகள்
மொழியாட்சியில் மொழிக் குறிகளும் எழுத்து, சொற்களைப் போன்றே பொருட்பொதிவுக்கும் வெளிப்பாட்டுக்கும் துணையாகின்றன. மொழித்திறனில் நிறுத்தற்குறிகள் பற்றி அறிவது இன்றியமையாதது.
விட்டிசைப்புக் குறிகள்
முறையான பொருள் வெளிப்பாட்டிற்காக வாக்கியப் பகுதிகளைப் பிரித்துக் காட்டவும் அவற்றை விட்டிசைந்து ஒலிக்கவும் எடுத்தாளப்படுகின்ற அடையாளங்கள் விட்டிசைப்புக் குறிகளாகும்.
முற்றுப்புள்ளி (.)
வாக்கிய முடிவைக் காட்டுவது முற்றுப்புள்ளி ஆகும். வாக்கியம் முடிவற்றது எனக்காட்ட அதன் இறுதி எழுத்தின் வலது கீழ் மூலையில் இடப்படும் புள்ளி இது. புள்ளியினை இடும் சூழல் நோக்கி 'முற்றுப்புள்ளி' சுருக்கக் குறியீடு என்றும் கொள்ளப்படும்.
முக்காற்புள்ளி (:)
':' என்பது முக்காற்புள்ளி. முக்காற்புள்ளி வரும் இடங்கள்:
- வாக்கியத்தில் கூறியதொன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இட வேண்டும்.
- முக்காற்புள்ளியுடன் ':-' என இடைக்கோடிட்டு எழுதலுமுண்டு — இக்குறியும் முக்காற்புள்ளியென்றே கொள்ளப்படும்.
அரைப்புள்ளி (;)
';' என்பது அரைப்புள்ளி. வாக்கியத்தில் ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொள்ளுமாயின் ஒவ்வொரு சொற்றொடர் நிறைவிலும் அரைப்புள்ளி இடப்படும். 'ஏனென்றால்', 'ஏனெனில்' போன்ற இணைப்புச் சொற்களுக்கு முன் அரைப்புள்ளி இடல் வேண்டும். அரைப்புள்ளியின் நிறுத்தல் கால அளவு அரை மாத்திரையாகக் கொள்ளலாம்.
காற்புள்ளி (,)
',' என்பது காற்புள்ளி. அரைப்புள்ளியைக் காட்டிலும் மிகுதியான மொழிப்பயன்பாடுடையது காற்புள்ளி. சொற்களைத் தனித்தனியாகவோ அடுக்கு அடுக்காகவோ பிரிக்கும்போது காற்புள்ளி இட வேண்டும். 'ஆதனால்', 'ஆகவே', 'எனவே' போன்ற சொற்களை அடுத்து 'காற்புள்ளி' இட வேண்டும்.
கால்புள்ளி (.)
கால்புள்ளியின் நிறுத்தல் கால அளவினைக் கால் மாத்திரையாகக் கொள்ளலாம்.
பொருட் தன்மைக் குறிகள்
வாக்கியங்கள் உணர்த்தும் பொருளுக்கேற்ப எடுத்தாளப்படும் அடையாளங்களும் நிறுத்தற் குறிகளாக உள்ளன.
வினாக்குறி (?)
'?' என்பது வினாக்குறியாகும். ஒரு வாக்கியம் வினா வாக்கியமாக அமையின் அதற்கு இறுதியில் 'வினாக்குறி' இட வேண்டும்.
- உழைப்பால் பெற முடியாதன உளவோ?
- ஏன் நீ வரவில்லை?
உணர்ச்சி வாக்கியக்குறி (!)
'!' என்பது உணர்ச்சி வாக்கியக் குறியாகும். மனிதன் தன்னுணர்ச்சியை வெளிப்படுத்த வாக்கிய இறுதியிலோ, வாக்கியத்துள் அமையும் சொற்கள் இறுதியிலோ உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
- அய்யோ! பாவம்!
- அவர் பெருமைதான் என்னே!
- தலைவா, வருக! வருக!
சொற்சுருக்கக்குறி ('')
சொற்சருக்கம் '' எனப் புள்ளியிட்டுக் காட்டப்படும். எழுதும்போது சில மேற்கோள் நூல்களைக் குறிக்க நேரிடும். 'தொல்காப்பியம்' என்பது 'தொல்.' எனச் சொற்சுருக்கத்தோடு எழுதப்படும். '.' என்பது 'தொல்' என்பதோடு சில எழுத்துகள் தொடருவதை உணர்த்துகிறது.
விடுகுறி (....)
சொற்சுருக்கக்குறியைப் போன்றே விடுகுறியும் மறைத்தெழுதப் பட்டிருப்பதை உணர்த்துவதாகும். முன்னது எழுத்துகளின் மறைவினை உணர்த்தும் பின்னது சொற்றொடர் மறைவினை உணர்த்தும்.
பிரிப்பிணைப்புக்குறி (-)
'-' என்பது பிரிப்பிணைப்புக் குறியாகும். பொதுவாகச் சொற்களைப் பிரித்தெடுத்தல் கூடாது. 'பிரிப்பிணைப்புக்குறி' அதனைத் தொடர்ந்து சொல்லின் பகுதி இருப்பதை உணர்த்துவதால் இது 'பொருட்-தன்மைக்குறி' எனப்படுகிறது. 'பிரிப்புக்குறி' பிரிந்திருக்கும் வாக்கியங்களைப் பொருளுத்ததோடு இணைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள் குறிகள்
மொழியாட்சியில், பிறிதொருவரின் கருத்தையோ மொழியையோ எடுத்தாளும் போது அது பிறிதொருவரின் கருத்து அல்லது மொழியென தெரிவிக்கவோ, கூறப்படுவனவற்றிற்கு மிகை விளக்கம் தருவதற்காகவோ இடப்படும் அடையாளங்கள் 'மேற்கோட் குறிகள்' எனப்படும்.
இரட்டை மேற்கோள்குறி (" ")
ஒருவர் கூறிய சொற்களை, அவர் கூறியவாறே எடுத்தாளும் போது, அவர் கூறிய மொழிகளின் தொடக்கம், முடிவு ஆகிய இருபுறத்திலும் இரட்டை மேற்கோள் குறி இட வேண்டும்.
ஒற்றை மேற்கோள்குறி (' ')
நேர்க்கூற்றுக்குள் இருக்கும் நேர்க்கூற்றினைக் குறிக்க ஒற்றை மேற்கோள் குறி இட வேண்டும். ஏதேனும் ஒன்றைச் சிறப்பாக எடுத்துக்காட்ட 'ஒற்றை மேற்கோள்' பயன்படுத்தப்படும். எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொகுதியையோ வாக்கியப் பகுதியாகக் குறிக்க 'ஒற்றை மேற்கோள் குறி' இடப்படுகிறது.
அடைப்புக்குறிகள்
( ) என்பது அடைப்புக்குறி. இது பிறையடைப்பு எனப்படும். அடைப்புகள் எழுத்துப் பகுதியின் இடையே மேற்கோள் அல்லது விளக்கத்தினை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
கணிதக் குறியீடுகள்
மொழியில் பயன்படுத்தப்படும் கணிதக் குறியீடுகள்: '+' (கூட்டல்), '-' (கழித்தல்), 'x' (பெருக்கல்), '/' (சரிவுக்கோடு = 'அல்லது'), '=' (நிகர்மைக்குறி). இவை முறையே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், நிகர்மைக் குறிகளாகும்.
கூட்டல் குறி (+)
'+' எனும் கூட்டல் குறி, 'சோப்புக் குறி' என மொழிப்பயன்பாட்டில் அழைக்கப்படுகிறது. 'புணர்ச்சி'களைக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.
கழித்தல் குறி (-)
இக்குறி இடைக்கோடாவும், சொல் விளக்கக் குறியாகவும், இணைச்சொல் குறியீடாகவும் மொழியில் பயன்படுகிறது.
பெருக்கற் குறி (x)
'x' எனும் பெருக்கற் குறி எதிர்ச்சொல் குறியீடாக மொழியில் பயன்படுகிறது. எ.கா: மேலே × கீழே, வந்தான் × போனான்.
சரிவுக்கோடு குறி (/)
இக்காலத்தில் '/' எனும் சாய்வு கோடே 'அல்லது' என்னும் பொருளைத் தரும் பொருட்-தன்மைக் குறியாகப் பயன்படுத்தப்படுகிறது. எ.கா: அவன் / அவள் வந்த போது.
நிகர்மைக் குறி (=)
'=' எனும் நிகர்மைக் குறி புணர்ச்சி நிலைகளைக் காட்டவும், இணைச் சொல்லைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எ.கா: பூனை + குட்டி = பூனைக்குட்டி.
தருகுறி (→)
'→' போன்ற அம்புக்குறி 'தருகுறி' எனப்படும். இதுவும் புணர்ச்சி நிலையில் நிகர்மைக் குறிக்கு மாற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. எ.கா: அவன் + கு → அவற்கு.