வினைச்சொல்
தமிழில் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காகப் பிரிப்பர். இவற்றுள் வினைச்சொல் என்பது செயலையும் காலத்தையும் காட்டும்; வேற்றுமை உருபு ஏற்காது (வேற்றுமை உருபுகள் எவை என அறிக).
வினைச் சொற்களின் வகைகள்
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- சிறப்பு வினை
- பொது வினை
என ஆறுவகைப்படும்.
தெரிநிலை வினைமுற்று
ஒரு தெரிநிலை வினைமுற்று அது குறிக்கும் வினை தொடர்பான ஆறு அறிவினையும் தெரிவிப்பதற்கு உரியதாக விளங்கும். அவை யாவன:
- வினையைச் செய்பவன்
- வினை செய்வதற்கு உரிய கருவி
- வினை செய்வதற்குரிய இடம்
- வினைக்குரிய செயல்
- வினை நிகழும் காலம்
- வினையால் செய்யப்படும் பொருள்
எடுத்துக்காட்டாக 'வரைந்தான்' என்னும் தெரிநிலை வினைமுற்றை நோக்குக:
| உறுப்பு | விளக்கம் |
|---|---|
| வரைதல் | நிகழ்வு / செயல் |
| வரைந்தான் | காலம் |
| அவன் வரைந்தான் | செய்பவன் |
| அவன் தூரிகையால் வரைந்தான் | கருவி |
| அவன் தூரிகையால் சுவரில் வரைந்தான் | இடம் |
| அவன் தூரிகையால் சுவரில் படம் வரைந்தான் | செய்யப்படும் பொருள் |
தெரிநிலை வினைமுற்றில் பகுதி செயலையும், விகுதி செய்பவனையும், இடைநிலை காலத்தையும் காட்டும் என அறிக.
குறிப்பு வினைமுற்று
குறிப்பு வினை முற்று பெயர்ச்சொல் அடியாகத் தோன்றும்; காலத்தைக் குறிப்பாகக் காட்டும்; தெரிநிலை வினை காட்டும் மேற்கூரிய ஆறினுள் வினைசெய்பவனை மட்டும் உணர்த்தும்.
பெயர்ச்சொல் அடியாகத் தோன்றும் என்பதால் பெயர்ச் சொற்களின் வகைகளான 1. பொருள் 2. இடம் 3. காலம் 4. சினை 5. குணம் 6. தொழில் என்னும் ஆறு பெயர்களின் அடியாகவும் குறிப்பு வினை முற்றுப் பிறக்கும் எனப்படும்.
| பெயர்ச்சொல் அடி | வகை |
|---|---|
| குழையன், பொன்னன் | பொருள் |
| நாடன், ஊரன் | இடம் |
| தையினள், சித்திரையள் | காலம் |
| கண்ணன், மூக்கன் | சினை |
| கரியன், நல்லன் | குணம் |
| நடிகன், நடையன் | தொழில் |
எச்சம்
ஒரு வினை, பால் உணர்த்தும் விகுதி பெற்றிருக்குமானால் அத்தகு வினையை 'வினைமுற்று' என்பர். பால் உணர்த்தும் விகுதி பெறாமலும் முற்றுப் பெறாமலும் இருக்குமானால் எச்சம் என்பர்.
| வகை | எடுத்துக்காட்டு | விளக்கம் |
|---|---|---|
| எச்சம் (முற்று) | (எ-டு) சிரித்தான் | பால் விகுதி பெற்றுக் கருத்து முடிந்தது – முற்று |
| எச்சம் (எச்சம்) | சிரிதது | பால் விகுதி பெறாமல் உள்ளது – கருத்து முடிவதற்கு மற்றொரு சொல் தேவை |
பெயரெச்சம்
பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இரண்டு வகைப்படும்.
- தெரிநிலைப் பெயரெச்சம்: செய்த, செய்கிற, செய்யும் என்னும் வாய்பாட்டில் அமையும். செய்த – இறந்த காலம், செய்கிற – நிகழ்காலம், செய்யும் – எதிர்காலம்.
- குறிப்புப் பெயரெச்சம்: தனக்கு அடியாளமாக அகர விகுதி பெற்று முடியும். இது பெயர்ச்சொல்லின் அடியாகப் பிறக்கும் என்பதனிக்கு (எ-டு) நல்ல மாணவன், பெரிய வீடு, அழகிய தோட்டம்.
வினையெச்சம்
பெயரெச்சத்தைப் போலவே வினையெச்சமும் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.
- தெரிநிலை வினையெச்சம்: செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தேன, செய, செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்பனவற்றைக் கூறுவர். இவற்றுள் முதல் ஐந்தும் இறந்த காலத்திற்கும் செய என்பது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உரியவையாகும்.
- குறிப்பு வினையெச்ச விகுதியாக 'அ' இடம் பெறுகிறது. (எ-டு) மெல்லப் பேசினான்.
சிறப்பு வினைகள்
வினைகளைத் தன் வினை, பிறவினை, உடன்பாட்டு வினை, எதிர்மறை வினை, செய்வினை, செயப்பாட்டுவினை என இணைகளாக வகைப்படுத்துவர்.
| வினை | எடுத்துக்காட்டு | வகை |
|---|---|---|
| நடந்தான் | தன்வினை | தன் வினை |
| நடத்தினான் | பிறவினை | பிற வினை |
| கற்றான் | உடன்பாட்டுவினை | உடன்பாட்டு வினை |
| கல்லான் | எதிர்மறை வினை | எதிர்மறை வினை |
| அடித்தான் | செய்வினை | செய் வினை |
| அடிக்கப்பட்டான் | செயப்பாட்டுவினை | செயப்பாட்டு வினை |
பொது வினைகள்
சில வினைகள் தன் வினை, பிறவினை இரண்டிற்கும் பொதுவானது. அதனால் இது பொதுவினையாகும்.
- வெளுத்தான் – இவ்வினை, தன் வினை பிறவினை இரண்டிற்கும் பொதுவானது.
- சாவான் – இவ்வினை, செத்துப் போவான், சாகமாட்டான் என இருவகைப் பொருளையும் தருவதால் உடன்பாடு எதிர்மறை இரண்டிற்கும் பொது வினையாகும்.
- புலிகொல்யானை – இதில் கொல் என்னும் வினைப் பகுதி மட்டும் இடம் பெற்றுள்ளதால் 'புலியால் கொல்லப்படும் யானை' என்றும் 'புலியைக் கொல்லும் யானை' என்றும் பொருள் தருகிறது. இதனால் இவ்வினை செய்வினை செயப்பாட்டுவினை இரண்டிற்கும் பொது வினையாகும்.
முற்றுவினை
பலவகை வினைகளுக்கும் பொது இலக்கணமாகிய செய்பவன் முதலிய ஆறையும் தோன்றச் செய்து பெயர்ச் சொல்லின் ஆறுவகைகளையும் பயனிலையாகக் கொண்டு முடிவதும், வேறு எதனையும் தனக்குப் பயனிலையாய் ஏற்காததும் முற்றுவினை எனப்படும். இது தெரிநிலை முற்றுவினை, குறிப்பு முற்று வினை என இருவகைப்படும்.
தெரிநிலை முற்றுவினை
| வினை | பயனிலை வகை |
|---|---|
| செய்தான் அவன் | பொருட்பெயர் கொண்டது |
| குளிர்ந்தது நிலம் | இடப்பெயர் கொண்டது |
| வந்தது கார் | காலப்பெயர் கொண்டது |
| குவிந்தது கை | சினைப்பெயர் கொண்டது |
| அழிந்தது தீமை | குணப்பெயர் கொண்டது |
| அற்றது பிறப்பு | தொழிற்பெயர் கொண்டது |
குறிப்பு முற்றுவினை
| வினை | பயனிலை வகை |
|---|---|
| நல்லவன் அவன் | பொருட்பெயர் கொண்டது |
| நல்லது நிலம் | இடப்பெயர் கொண்டது |
| நல்லது கார் | காலப்பெயர் கொண்டது |
| நல்லது கை | சினைப்பெயர் கொண்டது |
| நல்லது பசுமை | குணப்பெயர் கொண்டது |
| நல்லது பிறப்பு | தொழிற்பெயர் கொண்டது |