ஆகுபெயர் — இலக்கணம்
தொடக்கம்
ஒரு பெயர்ச்சொல் தனிச்சொல்லாக வரும் பொழுது சொற்பொருளைக் குறிக்கும். ஆனால் அதே பெயர்ச்சொல் ஒரு வாக்கியத்தில் அல்லது தொடரில் தனக்குரிய சொற்பொருளோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிக்கலாம். இவ்வாறு அச்சொல்லின் தொடர்ப்பொருள் வாக்கியத்தின் பொருள் குழலுக்கு ஏற்ப உணர்த்தும் நிலையை ஆகுபெயர் என்று தமிழ் இலக்கணம் கூறுகிறது.
ஆகுபெயர் தோன்றுவதற்கான நிபந்தனைகள்
- ஒரு பெயர்ச்சொல்தான் ஆகுபெயராய் வரும்.
- அப்பெயர்ச்சொல் தன் சொற்பொருளை உணர்த்தாது.
- அச்சொல் தன்னோடு தொடர்புடைய தொடர்ப்பொருளை இடம் பெறும் வாக்கியத்தின் பொருள் குழலுக்கு ஏற்ப உணர்த்தும்.
- இவ்வாறு தொடர்ப்பொருள் குறித்து வருவது மொழி வழக்கில் நெடுங்காலமாகக் காணப்படும்.
ஆகுபெயர்களின் அடிப்படை வகைகள்
பெயர்ச்சொற்களின் ஆறு வகைகளான பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் — இவற்றின் அடியாகவும் ஆகுபெயர் தோன்றும்.
| பெயர்ச்சொல் (எடுத்துக்காட்டு) | பெயர்வகை | ஆகுபெயர் வகை |
|---|---|---|
| மல்லிகை | பொருள் பெயர் | பொருளாகு பெயர் |
| வகுப்பு | இடப்பெயர் | இடவாகு பெயர் |
| பொழுது | காலப்பெயர் | காலவாகு பெயர் |
| கொழுந்து | சினைப் பெயர் | சினையாகு பெயர் |
| கார் (கருமை) | பண்புப் பெயர் | பண்பாகு பெயர் |
| ஆட்டம் | தொழில் பெயர் | தொழிலாகு பெயர் |
பொருளாகு பெயர்
ஒரு பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது பொருளாகு பெயர் எனப்படும். இதனை முதலாகு பெயர் என்றும் கூறுவர்.
எடுத்துக்காட்டு: "மல்லிகை சூடினாள்" — இங்கு 'மல்லிகை' என்பது வேர், தண்டு, இலை, பூ ஆகியவற்றைக் கொண்ட ஒரு கொடியின் பெயர். ஆனால் இவ்வாக்கியத்தில் அக்கொடியின் ஒரு பகுதியான பூவை மட்டுமே குறிக்கிறது. எனவே இது பொருளாகுபெயர்.
இடவாகு பெயர்
ஒரு இடத்தின் பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது இடவாகு பெயர்.
எடுத்துக்காட்டு: "வகுப்புக் கலைந்தது" — இங்கு 'வகுப்பு' என்பது இடப்பெயர். ஆனால் அந்த இடத்தில் கல்வி கற்கும் மாணவரைக் குறிப்பதால் இது இடவாகு பெயர்.
காலவாகு பெயர்
ஒரு காலத்தின் பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய பொருளைக் குறிப்பது காலவாகு பெயர்.
எடுத்துக்காட்டு: "பொழுது சாய்ந்தது" — 'பொழுது' என்பது காலப்பெயர். ஆனால் இத்தொடரில் காலத்தைக் குறிக்காமல் சூரியனைக் குறிக்கிறது. எனவே காலவாகுபெயர்.
சினையாகு பெயர்
இலையின் தளிர்ப்பருவத்தைக் குறிக்கும் 'கொழுந்து' என்னும் சினைப்பெயர் தளிரின் பெயரை மட்டும் குறிக்காமல் தாவரத்தின் ஒரு பகுதி ஆகையால் அது சினையாகு பெயர்.
எடுத்துக்காட்டு: "கொழுந்து நட்டனர்" — 'கொழுந்து' என்பது இலைப்பெயர்; 'மருக்கொழுந்து' என்னும் செடியைக் குறிப்பிடுகிறது. எனவே சினையாகுபெயர்.
பண்பாகு பெயர்
வண்ணம், வடிவம், அளவு, சுவை, தன்மை போன்றவற்றைக் குறிக்கும் சொல் பண்பாகு பெயர்.
எடுத்துக்காட்டு: "கார் பெய்தது" — 'கார்' என்பது கருமை என்னும் பண்பின் பெயர். அது 'கரிய வண்ணம் உடைய மேகம்' எனக் கார் என்னும் சொல் பொருள்படுகிறது. எனவே பண்பாகுபெயர்.
தொழிலாகு பெயர்
ஆடும் செயலை அல்லது தொழிலைக் குறிப்பிடும் 'ஆட்டம்' என்பது தொழிலாகு பெயர்.
எடுத்துக்காட்டு: "ஆட்டம் முடிந்தது" — ஆட்டம் என்பது தொழில்பெயர்; ஆடும் செயலோடு தொடர்புடைய நிகழ்ச்சியைக் குறிக்கிறது. எனவே தொழிலாகுபெயர்.
அளவு வகை ஆகுபெயர்கள்
பண்புப் பெயரின் வகையில் அளவுப்பெயரும் அடங்கும். அளவுப் பெயர்கள் நான்கு வகைப்படும்:
- எண்ணலவை ஆகுபெயர்: "பழங்கள் வாங்கி வந்த அம்மா தன்பிள்ளைகளுக்கு ஆளுக்கு இரண்டு கொடுத்தாள்" — 'இரண்டு' என்பது எண் அளவுப்பெயர்; இங்கு அந்த எண்ணிக்கையில் அமைந்த பழங்களைக் குறிக்கிறது.
- எடுத்தலவை ஆகுபெயர்: "கிலோ பதினைந்து ரூபாய்க்குக் கிடைக்கும்" — 'கிலோ' என்பது எடை அளவுப்பெயர்; அந்த எடை அளவு உள்ள அரிசியைக் குறிக்கிறது.
- முகத்தலவை ஆகுபெயர்: "ஒரு லிட்டர் ஊற்று" — 'லிட்டர்' என்பது முகத்தல் அளவுப்பெயர்; கொள்ளளவு உள்ள பொருளைக் குறிக்கிறது.
- நீட்டலவை ஆகுபெயர்: "சட்டைக்கு இரண்டே கால் மீட்டர் எடு" — 'மீட்டர்' என்பது நீட்டல் அளவுப்பெயர்; அந்த அளவு நீளம் உள்ள துணியைக் குறிக்கிறது.
சொல்லாகு பெயர்
"பேராசிரியரின் உரையைப் படி" — இங்கு 'உரை' என்னும் சொல்லின் பெயர் அதன் பொருளுக்கு ஆகி வருகிறது. அதனால் இது சொல்லாகு பெயர்.
தானியாகு பெயர்
"அடுப்பிலிருந்து பாலை இறக்கு" — 'பால்' என்பது ஒரு நீர்மப் பொருள். நீர்மப் பொருள்கள் தனியே இருக்கும் தன்மை அற்றவை; அவற்றை ஏதேனும் ஒரு பாத்திரத்தில் வைத்திருப்பர். இவ்வாக்கியத்தில் பாலை உள்ளடக்கிய பாத்திரத்தை (தானம்) குறிப்பிடுகிறது. எனவே தானியாகு பெயர்.
கருவியாகு பெயர்
குழல் என்பது ஓர் இசைக்கருவியின் பெயர். "குழல் கேட்டு மகிழ்ந்தாள்" என்னும் வாக்கியத்தில் கருவியின் பெயர் அதன் காரியமாகிய பொருளுக்கு ஆகி வருகிறது. இது கருவியாகு பெயர்.
காரியவாகு பெயர்
"என் பிழைப்புக் கெட்டது" — 'பிழைப்பு' என்பது வாழ்க்கைக்கு காரணமாகிய வேலையைக் குறிக்கிறது; வேலை — காரணம், பிழைப்பு — காரியம் (வாழ்க்கை). இது காரியவாகு பெயர்.
கருத்தாவாகு பெயர்
"வள்ளுவரைப் படித்தால் வாழலாம்" — வள்ளுவர் திருக்குறளை எழுதியவர். இத்தொடரில் வள்ளுவர் என்னும் சொல் கருத்தாவாகிய திருவள்ளுவரைக் குறிக்கவில்லை; அவர் இயற்றிய நூலைக் குறிக்கிறது. எனவே கருத்தாவாகு பெயர்.
உவமையாகு பெயர்
"மலைகள் மோதின" — 'மலைகள்' என்னும் சொல் இடப்பெயர். ஆனால் இத்தொடரில் மலை போன்ற வலிமை உடைய வீரர்களை உவமையாக வந்துள்ளது. எனவே உவமையாகு பெயர்.
இருமடியாகு பெயர்
"புளி காய்த்தது" — புளி என்பது ஒரு சுவையின் பெயர். இச்சுவையையுடைய பழத்தை முதலில் குறிக்கிறது. பின்பு அப்பழத்தை உடைய மரத்திற்கும் ஆகி வந்துள்ளது. இவ்வாறு இரண்டு நிலையில் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது இருமடியாகு பெயர்.
அடையெடுத்தவாகு பெயர்
"வெற்றிலை நட்டான்" — 'வெற்றிலை' என்பது வெறுமை + இலை என்னும் இரண்டு சொற்களின் கூட்டம். வெறுமை என்பது இலைக்கு அடையாகும். இலை என்பது அடைக்குரிய பொருளாகும். இத்தொடரில் வெற்றிலை என்பது அடையும் (வெறுமை), சினையும் (இலை) சேர்ந்து முழுப்பொருளுக்கு ஆகி வருவது அடையெடுத்தவாகு பெயர்.
இருபெயரொட்டு ஆகுபெயர்
இரண்டு பெயர்ச்சொற்கள் சேர்ந்து ஒரு பொருளைக் குறிப்பதுண்டு. அவற்றில் ஒன்று சிறப்புப் பெயராகவும் மற்றொன்று பொதுப் பெயராகவும் அமைந்து ஒரே பொருளைக் குறிப்பது இருபெயரொட்டு ஆகுபெயர்.
எடுத்துக்காட்டு: "வாழ மரம்" — வாழை என்பது மரவகையில் ஒன்றின் சிறப்புப் பெயர்; மரம் என்பது பொதுப்பெயர். இவ்விரண்டும் சேர்ந்து ஒரே பொருளைக் குறிக்கின்றன.
விட்டவாகு பெயர் மற்றும் விடாத ஆகுபெயர்
- விட்டவாகு பெயர்: "சென்னை வளர்கிறது" — சென்னை என்னும் இடப்பெயர் தனக்குரிய இடத்தை விட்டுவிட்டு தன்னிடத்தில் வாழும் மக்களைக் குறிக்கிறது. எனவே விட்டவாகுபெயர்.
- விடாத ஆகுபெயர்: "இனிப்புத் தின்றான்" — இனிப்பு என்னும் சுவையைக் குறிக்கும் சொல் தனக்குரிய இனிமைப் பொருளை விடாமல் அச்சுவையை உடைய தின்பண்டத்தைக் குறிக்கிறது. எனவே விடாத ஆகுபெயர்.
சுருக்கம்
ஆகுபெயர் என்பது தமிழ் இலக்கணத்தில் பெயர்ச்சொல் தன் சொற்பொருளை விட்டு வேறு ஒரு தொடர்ப்பொருளை உணர்த்தும் மொழி நலம். இவை பொருளாகு, இடவாகு, காலவாகு, சினையாகு, பண்பாகு, தொழிலாகு என்னும் ஆறு அடிப்படை வகையும், அளவு, சொல், தான, கருவி, காரிய, கருத்தா, உவமை, இருமடி, அடையெடுத்த, இருபெயரொட்டு, விட்ட, விடாத என பல விரிவான வகைகளும் கொண்டது.