தாழாது உழைத்தல்
ஆசிரியர்: பெருஞ்சித்திரனார் | வகுப்பு: 12 – முன்னிலை தமிழ் (உரைநடை)
ஆசிரியர் குறிப்பு
| விவரம் | குறிப்பு |
|---|---|
| பாடத்தின் பெயர் | தாழாது உழைத்தல் |
| ஆசிரியர் | பெருஞ்சித்திரனார் |
| வகை | உரைநடை – கட்டுரை |
| இடம் | 12ஆம் வகுப்பு முன்னிலை தமிழ் பாடநூல், பாடம் 3 |
உழைப்பின் பெருமை
உழைப்பு, செயல், தொழில், தொண்டு, பணி ஆகியன யாவும் உழவுத் தொழிலையே அடிப்படையாகக் கொண்டு தோன்றிய சொற்களாகும். இவை முதலில் மாந்தன் உழவையே முதல் தொழிலாகச் செய்தான் என்பதையும், அதைச் செய்தவன் தமிழனே என்பதையும் வரலாற்றுப்படி உணர்த்தும். எனவே மாந்தனின் முதல் உழைப்பு உழவையே அடிப்படையாகக் கொண்டது எனலாம்.
குறிப்பிட்ட அளவு உழைக்கவில்லையானால், குறிப்பிட்ட அளவு பயனை எய்த முடியாது. எனவே, இவ்வுலகில் பிறந்த அனைவருக்குமே உழைப்பு தேவை.
இனி, உழைப்பில்லா விட்டால், உடல் நலிவடைந்து விடும்; உடல்கெடும்; நோயுறும். உடல் நோயுற்றால், உள்ள உறுதியும் தளரும். உள்ளம் தளர்வுற்றால் அறிவால் பயனிராது; அறிவுணர்வும் கெடும். ஆகவே, உடலுழைப்பால்தான் உள்ளமும், அறிவும் உறுதிப்படும். அதே போல் உள்ள உறுதியாலும், அறிவுறுதியாலும் உடலும் ஊக்கமுறும்.
இருவகை உழைப்பு
உழைப்பு இருவகைப்படும் – அறிவுழைப்பு, உடலுழைப்பு என்பன அவை.
- அறிவுழைப்பு: ஒன்றைப் பற்றிய நன்மை, தீமை, பயன், இழப்பு, பெருமை, சிறுமை ஆகியன பற்றி அறிந்து கொள்ளும் முயற்சி.
- உடலுழைப்பு: அறிந்து கொண்ட அறிவைச் செயல்படுத்துவதற்கான முயற்சி.
ஒரு செயலைச் செய்வதற்கு இவ்விரண்டு வகையான உழைப்பும் தேவை. இரண்டு முயற்சிகளையும் ஒருவரே செய்யலாம்; அல்லது தனித்தனியாக இருவரும் செய்யலாம்.
அறிவு பெறும் ஐந்து வழிகள்
பொதுவாகவே ஒருவர் ஒன்றைப் பற்றிய அறிவு பெறுவதற்கு ஐந்து வழிகள் உண்டு. அவை காட்சி, கேள்வி, உசாவல், கல்வி, பாடு என்பன.
| வழி | விளக்கம் |
|---|---|
| காட்சி | ஒருவர் ஒன்றைக் கண்ணால் கண்டு அறிதல் |
| கேள்வி | ஒன்றைப் பிறர் சொல்லக் கேட்டு அறிதல் |
| உசாவல் | ஒன்றைப் பற்றி ஒருவரிடம் உசாவி (விசாரித்து) அறிதல் |
| கல்வி | ஒன்றைப் பற்றி அதன் தொடர்பான நூலைப் படித்து அறிதல் |
| பாடு | ஒருவர் ஒரு செயலில் நேரடியாக ஈடுபட்டு அறிந்து கொள்ளுதல் |
ஒரு செயலைப் பற்றிய முயற்சியை ஒருவர், இந்த ஐந்து வகைகளில் ஒன்றின் வழியாகத்தான் தொடங்க வேண்டும். இவற்றுள் எதன் வழியாகவும் ஒருவர் ஒன்றைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளலாம்.
மன விருப்பம் தேவை
அடுத்து, ஒருவர் பெற்ற அறிவுத்திறனை ஒட்டிச் செயல்திறன் அமையும் என்றாலும், செயலில் இறங்கியபின் அவரின் உடல் திறனும், உள்ள உறுதியும், அவரின் செயல்திறனுக்கு உந்து விசைகளாக அமைய வேண்டும். செயலறிவு செயலில் ஊன்றுவதற்கு மனஊணர்வு முதன்மையானது. மனவிருப்பமின்றி எந்தச் செயலிலும் ஈடுபட முடியாது. மன விருப்பமே மன ஊக்கமாகவும் மன உறுதியாகவும் செயல்படும்.
உழைப்பும் உயர்வும்
பெரும்பாலும் செயல்கள் அனைத்துமே உடல் இயக்க அடிப்படையிலேயே அமைகினறன. அறிவு உழைப்பானாலும், உடல் உழைப்பானாலும், அனைத்து முயற்சிகளுக்கும் உடலே சுளமாக அமைவதால், உடல் நலத்தின் அடிப்படையிலேயே செயல்கள் சிறந்து விளங்குகின்றன. உடல் நலிவுற்றார் அல்லது நோயுற்றவர் எவ்வளவு அறிவுத் திறன் கொண்டிருந்தாலும் அவ்வறிவு செயலாக மலர்வதில்லை.
முயற்சி, முயற்சி, முயற்சி
ஒரு செயலைச் செய்கின்ற முயற்சி பலவகையிலும் தாழ்வுபட்டு விடலாம். அதற்குக் காரணம் எடுத்தவடனே வெற்றி கிட்டாமை, எதிர்ப்புகள் சூழ்தல், பொருள் இழப்பு, உடல் நலிவு, வரவேற்பின்மை, அருமையுடைமை, துன்பம் சூழ்தல் முதலியனவாகும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
– திருக்குறள் (குறட்பாக்களில் திருவள்ளுவர் சான்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்)
இழப்பால் சோர்வுறுதல் கூடாது
இனி, ஏதோ ஒரு காரணத்தால் நாம் தொடங்கிய வினையில் நாம் ஊக்கத்தையும் உழைப்பையும் தாழ்த்திக் கொள்ளுதல், தளர்ந்தி விடுதல் கூடாது. ஆக்கம் வராமைக்கும் அல்லது இழப்புக்கும் உரிய காரணத்தை நன்கு ஆராய்ந்து கண்டுபிடித்து, மேலும் அத்துறையில் அல்லது செயலில் தாழ்ச்சியுறாது உழைத்தால், கட்டாயம் நாம் விரும்பிய ஆக்கம் வரவே செய்யும்.
பின்னர் வருந்தும்படி செய்யற்க
சில நேரங்களில் வேறு வழியில்லாமல் நாம் முன் பின் எண்ணிப் பாராமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டிய கட்டாயச் சூழல் ஒன்று வரும். எனவே அச்செயலில் இறங்கி விடுவோம். அதன் பிறகு, எதற்கடா இச்செயலில் இறங்கினோம் என்று வருந்தும்படி ஆகிவிடும். எனவே, அதை விட்டுவிட்டு வேறொரு செயலில் ஈடுபட முற்படுவோம்.
ஆனால், அவ்வாறு இரண்டாம் முறை ஈடுபடும் பொழுதாவது முதல் செயலில் எண்ணிப் பாராமல் இறங்கியது போல, ஒரு செயலில் முன்பின் ஆராயாமல் இறங்குவது எத்துணையளவு தவறானது என்று அறிந்து கொள்ளல் வேண்டும்.
குறிப்பு விளக்கம்
- முதல் உழைப்பு: திருவள்ளுவர் உழவின் சிறப்பினைப் பத்துக் குறட்பாக்களில் கூறுகிறார். திருக்குறள் அதிகாரம் 104 – உழவு அதனைக் கற்று உழவுத் தொழிலின் சிறப்பினை அறிக.
- வினைத் தூய்மை, வினைத்திட்பம்: வினை செயல்வகை ஆகியன செயல்திறம் பற்றிக் கூறுகின்றன. அக்கருத்துகளையும் ஒப்பு நோக்குக.
- இரண்டு குறட்பாக்களும்: திருக்குறள் ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் உள்ளவை. 62ஆம் அதிகாரம் குறள் 9, 10.
- எற்றென்று ...நன்று: திருக்குறள், அதிகாரம் 66 – வினைத்தூய்மை, குறள் பொருள்: ஏன் செய்தோம் என வருத்தப்படத்தக்க செயலை ஒரு போதும் செய்யக் கூடாது. ஒரு முறை செய்தாலும் மறுபடியும் அதுபோன்ற செயலை மீண்டும் செய்யக் கூடாது.
- முகாமை – முதன்மை: செயல்களுக்கு முதன்மை என்பது மன விருப்பம்.
மொழிநடை சிறப்பியல்புகள்
| சொல் | பொருள் / விளக்கம் |
|---|---|
| உழைப்பு | உழவு அடிப்படையில் தோன்றிய சொல் |
| அறிவுழைப்பு | ஒன்றை அறிந்துகொள்ளும் முயற்சி |
| உடலுழைப்பு | அறிவைச் செயல்படுத்தும் முயற்சி |
| உசாவல் | விசாரித்து அறிதல் |
| பாடு | நேரடி அனுபவத்தால் அறிதல் |
| முகாமை | முதன்மை |
| ஆக்கம் | வெற்றி / பலன் |
| தாழ்வுபட்டு விடுதல் | மனத்தளர்வு அடைதல் |
திரண்ட பொழிப்பு
உழைப்பு என்பது உழவு தொழிலை அடிப்படையாகக் கொண்ட சொல். அறிவுழைப்பு, உடலுழைப்பு என இரண்டு வகை உழைப்புகள் உள்ளன. ஒரு செயலை ஆற்றுவதற்கு அறிவுத் திறனோடு மன விருப்பமும் உடல் ஊக்கமும் இன்றியமையாதவை. எத்தகைய தடைகள் வந்தாலும் தளராது முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். இழப்பால் சோர்வடையாது ஊக்கத்துடன் உழைத்தல் வேண்டும் என்பதே இக்கட்டுரையின் மைய நோக்கம்.