அணியிலக்கணம்
அணி என்றால் என்ன?
அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள் தாங்கள் எழுதும் பாடல்களை சொல்லாலும் பொருளாலும் அழகுபடுத்துவதை அணி என்று வழங்கினர். நாம் புத்தாடை புனைந்து, அணிகலன்களால் அழகு செய்துகொள்வதைப் போல, புலவர்களும் தங்கள் செய்யுளை அழகுபடுத்துவர்.
அணிகள் பல வகைப்படும். அவற்றுள் முக்கியமானவை:
- இயல்பு நவிற்சி அணி
- உயர்வு நவிற்சி அணி
இயல்பு நவிற்சி அணி
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறு கூறுவது இயல்பு நவிற்சி அணி எனப்படும். அதாவது, ஒரு பொருளின் இயல்பான தன்மையை மிகைப்படுத்தாமல் அல்லது குறைத்துக் கூறாமல், உள்ளபடியே கூறுவது இவ்வணி ஆகும்.
"தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்
ஆய வெள்வளை வாய்விட் டரற்றவும்
தேயும் நுண்திடை சென்று வணங்கவும்
ஆய மங்கையர் அங்கை வருந்துவார்."இப்பாடலில் தயிர் கடையும் ஆய மங்கையரின் தன்மை உள்ளவாறே அழகுபட சொல்லப்படுவதை காணலாம். இது இயல்பு நவிற்சி அணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
உயர்வு நவிற்சி அணி
ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது உயர்வு நவிற்சி அணி எனப்படும். உயர்வான மலையை 'விண்ணைத் தொடும் மலை' என வருணித்தல்; உயர்வான வைக்கோல் போரை 'வானை முட்டும் வைக்கோல்போர்' என உயர்த்திக் கூறுதல் இவ்வணிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
- உயரமான மலையை → 'விண்ணைத் தொடும் மலை' என்று கூறுதல் — உயர்வு நவிற்சி அணி
- உயரமான வைக்கோல் போரை → 'வானை முட்டும் வைக்கோல்போர்' என்று கூறுதல் — உயர்வு நவிற்சி அணி
இயல்பு நவிற்சி அணி vs உயர்வு நவிற்சி அணி — வேறுபாடு
- இயல்பு நவிற்சி அணி: பொருளின் தன்மையை உள்ளது உள்ளவாறு கூறுவது
- உயர்வு நவிற்சி அணி: பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது
எடுத்துக்காட்டுகள்
- தமிழ்மொழி இனிமையானது — இயல்பு நவிற்சி அணி
- வான்புகழ்கொண்ட தமிழ்நாடு — இயல்பு நவிற்சி அணி
- தென்னை மரம் உயர்மானது — இயல்பு நவிற்சி அணி
- விண்ணைத் தொடும் மலை — உயர்வு நவிற்சி அணி
- வானை முட்டும் வைக்கோல்போர் — உயர்வு நவிற்சி அணி
நிறுத்தக்குறிகள்
செய்யுளையோ உரைநடையையோ படிக்கும்போது, பொருளைத் தெளிவாகப் புரிந்து படிக்கவும், உரிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் பயன்படுத்துவது நிறுத்தக்குறிகள் ஆகும்.
- முற்றுப்புள்ளி ( . ) — ஒரு தொடர் முற்றுப்பெற்றதை குறிக்க (எ.கா. கண்ணன் பள்ளிக்கு சென்றான்.)
- காற்புள்ளி ( , ) — பல பொருள்களை தொடர்ந்து சொல்லும்போது (எ.கா. மா, பலா, வாழை முக்கனிகள்.)
- அரைப்புள்ளி ( ; ) — ஓர் எழுவாய் பல பயனிலைகளை கொண்டு முடியும்போது
- வினாக்குறி ( ? ) — வினாத்தொடரின் இறுதியில் (எ.கா. பொற்கொடி படம் படித்துவிட்டாயா?)
- உணர்ச்சிக்குறி ( ! ) — உணர்ச்சியாகக் கூறும்போது (எ.கா. என்னே, இப்பூவின் மணம்!)
- ஒற்றை மேற்கோள் குறி ( '...' ) — ஓர் எழுத்தையோ சொல்லையோ தனியே குறிக்க ('எழில்' என்றால் 'அழகு' என்பது பொருள்.)
- இரட்டை மேற்கோள் குறி ( "..." ) — ஒருவர் கூறியதை நேர்கூற்றாக கூறும்போது ("அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்றார் ஔவையார்.)