பொங்கல் வழிபாடு
கவிதை
நீ தந்த கனி இது; நீ தந்த கரும்பு இது
நீ தந்த நெற்கதிர் இது;
நீ தந்த நீர் இது; நீ தந்த சீர் இது;
நீ தந்த ஒளியும் இதே!
நீ தந்த சீரும் நீ தந்த திருவும்
நினக்கே நிவேதனம் கதிரவா!
கனகப் புரவிமேல் கடுகியே வந்திடு
கதிரவா எங்கள் கோவே!
நீ தந்த செல்வத்தை நிவேதனம்
செய்பிழை யாம் அறிந்தும்
வழிவேறு வணங்க யாம்
அறியாது கூவுகின்றோம்.
கதிரவா கடுகி வருவாய்!
நியன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ,
ஒளியுண்டோ, நிலவுமுண்டோ,
நீருண்டோ, என்னிடம் வாழ்த்துப் பொருளுமுண்டோ?
கதிரவா கனிந்து வருவாய்!
கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும்
நின்னடி படைத்து விட்டோம்
கதிரவா! ஏற்று மகிழ்வாய்
உயர்ந்தவா, உயிரின் முதலே!
- ந. பிச்சமூர்த்தி
கவிதையின் பொருள்
உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்துக்கும் முதல்வனாக விளங்கும் ஞாயிறே! இவ்வுலகில் காணும் கனிவகையும் கரும்பும் நெற்கதிர்களும் உன்னால் விளைந்தவை. இவை அனைத்தும் உன்னில் தோன்றிய நீராலும் கதிரொளியாலும் உருவான சிறப்பினைப் பெற்றவை. கதிரவனே! நீ தந்த அழகிய செல்வப்பொருள்கள் அனைத்தையும் உனக்கே படையலாக்கி வணங்குகிறோம். கதிரவா! எங்கள் தலைவனே! உனக்கு எதனைப் படையலாக வைத்து வணங்குவது என்பதனை அறியாது, எமக்கு நீ வழங்கிய பொருள்களையே படையலாக்கித் தவறைச் செய்துவிட்டோம். ஆயினும், எம் பிழை பொறுத்துப் பொன்னொளி வீசும் குதிரைகள் மீதேறி விரைந்து வருக. நீயின்றாமல் மண்ணும் விண்ணும் ஒளியும் நிலவும் நீரும் இல்லை. எல்லாமே உன்னிடமிருந்து பிறந்தவை. எனவே, உன்னைப் புகழ்ந்து போற்ற எம்மிடம் எப்பொருளும் இல்லை. கரும்போலும் இனிய மனத்துடனும் இனிதான உயிர்ப்புடனும் உதவிய திருவடிகளைப் பணிந்து படைத்துவிட்டோம். அனைத்திலும் உயர்ந்த நீ, இவற்றை ஏற்று மகிழ்ந்து அருள் புரிவாயாக!
ஆசிரியர் குறிப்பு
- இயற்பெயர்: ந. வேங்கட மகாலிங்கம்
- புனைபெயர்: ந. பிச்சமூர்த்தி
- ஊர்: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்
- தொழில்: 1924–1938 வரை வழக்குரைஞர்; 1938–1954 வரை கோவில் நிர்வாக அலுவலர்
- எழுத்துப்பணி: கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஒரங்க நாடகங்கள்
- காலம்: 15.08.1900 – 04.12.1976
- நூல்குறிப்பு: ந. பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் இக்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவருடைய படைப்புகள். "ந. பிச்சமூர்த்தி கவிதைகள்" என்னும் நூலில் இடம்பெற்றுள்ள எண்பத்துமூன்று கவிதைகளில் ஒன்று இப்பொங்கல் வழிபாடு என்னும் கவிதை.
சொற்பொருள்
- திரு – செல்வம்
- நிவேதனம் – படையலமுது (கடவுளுக்கு படையல் வைப்பது)
- கனகம் – பொன்
- புரவி – குதிரை
- கோ – அரசன்
- கடுகி – விரைந்து
பொங்கல் திருநாள்
பொங்கல் திருநாள் தமிழர்களின் முக்கியமான திருநாள்களில் ஒன்று. இது சூரியனை வணங்கும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இத்திருனாளை கொண்டாடுகின்றனர். நெல், கரும்பு, பழங்கள் ஆகியவை சூரியனுக்கு படையல் வைக்கப்படுகின்றன.