உயிர்மெய், ஆய்தம்
சார்பெழுத்துகள் – அறிமுகம்
தமிழ் எழுத்துகளில் உயிர் (12), மெய் (18), உயிர்மெய் (216), ஆய்தம் (1) என மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. இவற்றுள் உயிர்மெய் மற்றும் ஆய்தம் ஆகியவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை உயிர் அல்லது மெய்யை சார்ந்தே இயங்குகின்றன.
சார்பெழுத்துகள் மொத்தம் பத்து வகை ஆகும்:
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஒளகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய் எழுத்துகள்
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்தால் உயிர்மெய் எழுத்து தோன்றும். உயிர்மெய் எழுத்து உயிரையும் மெய்யையும் சார்ந்திருப்பதால் இதனை சார்பெழுத்து என்கிறோம்.
எடுத்துக்காட்டு:
- க் + அ = க
- க் + ஆ = கா
- க் + இ = கி
இவ்வாறு மெய்யெழுத்துகள் பதினெட்டையும் உயிரெழுத்துகள் பன்னிரண்டுடன் சேர்த்து எழுத இருநூற்றுப்பதினாறு (216) உயிர்மெய் எழுத்துகள் தோன்றும்.
ஆய்தம் (ஃ)
ஆய்தம் என்பது ஃ என்ற எழுத்தாகும். இது மூன்று புள்ளிகளை உடையது. ஆகவே இதனை முப்புள்ளி அல்லது முப்பாற்புள்ளி என்றும் கூறுவர்.
ஆய்தம் உயிரோடும் மெய்யோடும் சேராமல் தனித்தே இருப்பதால் இதனை தனிநிலை என்றும் கூறுவர்.
போர் வீரர்கள் பயன்படுத்தும் தற்காப்பு ஆயுதத்தில் (கேடயம்) காணப்படும் மூன்று குமிழ்ப்புள்ளிகள் போன்று இருப்பதால் இதனை ஆய்தம் என்றும் கூறுவர்.
ஆய்தம் இடம்பெறும் விதிகள்
ஆய்தம் ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும். அதாவது:
- ஆய்தத்தின் முன் குறிலெழுத்து வரும்.
- ஆய்தத்தின் பின் வல்லின உயிர்மெய் எழுத்து வரும்.
எடுத்துக்காட்டு: எஃகு, அஃதிலார்
ஆய்தத்தின் வேறு பெயர்கள்: அஃகேனம், முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, ஆய்தம்.
வல்லினம் மிகும் இடங்கள்
அகர ஏற்று வினைச்சொற்களுக்கு முன் க், ச், த், ப் மெய்யெழுத்துகளின் வருக்க எழுத்துச் சொற்கள் வருமாயின், வல்லெழுத்துகள் தோன்றும்.
எடுத்துக்காட்டுகள்:
- ஓட + காத்திருக்கிறான் = ஓடக் காத்திருக்கிறான்
- பாட + கேட்டேன் = பாடக் கேட்டேன்
- காண + கொடுத்தான் = காணக் கொடுத்தான்
- செய்ய + சொன்னான் = செய்யச் சொன்னான்
- எழுத + தொடங்கினார் = எழுதத் தொடங்கினார்
இகர ஏற்று வினையெச்சச் சொற்களின் பின் வல்லின உயிர்மெய் எழுத்துச் சொற்கள் வந்தால் வல்லொற்று மிகும்.
எடுத்துக்காட்டுகள்:
- நாடி + சென்றான் = நாடிச் சென்றான்
- பேசி + பழகினான் = பேசிப் பழகினான்
- தேடி + திரிந்தான் = தேடித் திரிந்தான்
அகரவரிசையில் அமைத்தல்
மெய்யெழுத்துகள், உயிரெழுத்துகளோடு சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகிறது என்பதை அறிந்தோம். சொற்களில் உயிர்மெய் எழுத்துகளாக வரும் சொற்களை அகரவரிசையில் அமைக்கலாம்.
எடுத்துக்காட்டு: கண், காண், கிளி, கீரி, குடுவை, கூகை, கெண்டை, கேள்வி, கை, கொல், கோடு, கௌவை