முதுமொழிக்காஞ்சி – சிறந்த பத்து
முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது. இந்நூல் அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது. இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன; ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன. இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.
ஆசிரியர் குறிப்பு
- பெயர்: மதுரைக் கூடலூர்கிழார்
- பிறந்த ஊர்: கூடலூர்
- சிறப்பு: இவர்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்கள்.
- காலம்: சங்க காலத்துக்குப் பின் வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு
முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல் உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது. இந்நூல் அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது. இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன. இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.
நூல் பயன்
முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.
சிறந்த பத்து – பாடல் மற்றும் பொருள்
(சிறந்தெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து.)
-
பாடல்: ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை.
பொருள்: கடல் சூழ்ந்த இவ்வுலக மக்கள் அனைவர்க்கும் கற்றலை விட ஒழுக்கமுடைமையே சிறந்தது. -
பாடல்: காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.
பொருள்: பிறர்க்கு அன்புகாட்டுவதிலும் செயல்களால் அவர் போற்றும்படி நடத்தலே மேலானது. -
பாடல்: மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை.
பொருள்: அறிவுநுட்பத்தினும் கற்றபொருளை மறவாமை மேன்மையானது. -
பாடல்: வண்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை.
பொருள்: வளமான வாழ்க்கையைக்காட்டிலும் வாய்மை உடையவராக வாழ்வது உயர்ந்தது. -
பாடல்: இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை.
பொருள்: இளமையைக் காட்டிலும் நோயற்ற வாழ்வே சிறந்தது. -
பாடல்: நலனுடைமையின் நாணுச் சிறந்தன்று.
பொருள்: அழகுடையவராக இருப்பதினும் நாணமுடையவராக இருப்பதே மேலானது. -
பாடல்: குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று.
பொருள்: குலப்பெருமையைவிட ஒழுக்கமுடைமையே சிறந்தது. -
பாடல்: கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
பொருள்: சிறந்த நூல்களைக் கற்றலைவிடவும் கற்றறிந்த பெரியாரைப் பின்பற்றி ஒழுகுதல் சிறப்பானது. -
பாடல்: செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று.
பொருள்: பகைவரைத் தண்டிப்பதனைவிட, அவருக்கு நன்மைசெய்தல் சிறந்தது. -
பாடல்: முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று.
பொருள்: முற்காலத்துப் பெருகிய செல்வத்தைப் பின்னர்க் குறைவுபடாமல் காத்தலே சிறந்தது.
சொற்பொருள்
- ஆர்கலி – நிறைந்த ஒசையுடைய கடல்
- காதல் – அன்பு, விருப்பம்
- மேதை – அறிவு நுட்பம்
- வண்மை – ஈகை, கொடை
- பிணி – நோய்
- மெய் – உடம்பு
- நாணம் – செய்யக் கூடாததனைச் செய்ய அச்சப்படுதல்
- சிறந்தன்று – சிறந்தது
- வழிபடுதல் – போற்றி வணங்குதல்