புறநானூறு
செய்யுள்
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
பொருள்
இவ்வுலகத்தார்க்கு நெல்லும் நீரும் உயிராகா. முறைசெய்து காத்தலினால் மன்னவனே உயிராவான். வேற்படை உடைய வேந்தனின் கடமை நாட்டைப் பேணிக் காப்பதே ஆகும்.
சொற்பொருள்
- அறிகை – அறிதல் வேண்டும்
- தானை – படை
- கடனே – கடமை
ஆசிரியர் குறிப்பு – மோசிகீரனார்
- இப்பாடலைப் பாடியவர் மோசிகீரனார்.
- தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் வாழ்ந்தவர்.
- கீரன் என்பது குடிப்பெயராகக் குறிப்பிடப்படுகிறது.
- உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர்.
- இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.
நூல் குறிப்பு – புறநானூறு
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு
- இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இது புறம்பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு.
- புறம் என்பது மறம் செய்தலும் அறம் செய்தலும் ஆகும்.
- இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த புலவர்களாலும் மன்னர்களாலும் பாடப்பெற்றவை.
புறநானூற்றின் வழி அறியலாம்:
- பண்டைய தமிழக மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப் பெருமை
- புலவர்களின் பெருமிதம்
- மக்களுடைய நாகரிகம், பண்பாடு
நூல் பயன்
புறநானூற்றைக் கற்பதனால், தமிழர்தம் பழங்கால புறவாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிந்து பெருமிதம் கொள்ளலாம்.
அரசனைக் குறிக்கும் வேறு பெயர்கள்
கோ, மன்னன், வேந்தன்