ஊரும் பேரும்
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ் மக்கள், தம் குடியிருப்புப் பகுதிகளை ஊர் என்னும் பெயராள் குறித்தனர். ஊர் என்னும் இத்தமிழ்ச்சொல் உலகின் பல நாடுகளில் வழங்குவது வியப்பளிக்கிறது. பாபிலோன் அருகே ஊர் என்னும் பெயரில் ஒரு நகரும், ஊர்நம்மு என்னும் ஊரும் உள்ளதாம். நாளடைவில் பல்வேறு ஊர்கள் உருவாக, நிலவகைக்கேற்பப் பெயரிட்டு மலையூர், காட்டூர், மருதூர், கடலூர் என வழங்க, மக்கள் தலைப்பட்டனர். இவ்வாறு தமிழகத்தில் ஊரும் பேரும் தோன்றின.
குறிஞ்சி நில ஊர்கள்
தமிழகத்தில் வளமார்ந்த மலைகள் பலவுண்டு. மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு ஆணைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, நாகமலை, வள்ளிமலை, விராலிமலை எனப் பெயர்கள் வழங்குவதனைக் காணலாம்.
ஓங்கியுயர்ந்த நிலப்பகுதி மலை எனவும், மலையின் உயரத்தில் குறைந்ததனைக் குன்று எனவும், குன்றிலும் உயரத்தில் குறைந்ததனைக் கரடு எனவும், பாறை எனவும் பெயரிட்டு அழைத்தனர். இவற்றையொட்டி வாழ்ந்த மக்கள், தம் வாழ்விடங்களுடன் ஊர் என்னும் பெயரையும் சேர்த்து ஊர்ப்பெயர்களாக்கினர்.
- குன்றை அடுத்துள்ள ஊர்கள்: குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி
- பாறை சார்ந்த ஊர்கள்: குட்டப்பாறை, சிப்பிப்பாறை, பூம்பாறை, மட்டப்பாறை, மணப்பாறை, வால்பாறை
- மலையைக் குறிக்கும் வடசொல் கிரி: கிருஷ்ணகிரி, கோத்தகிரி, சிவகிரி, நீலகிரி
குறிஞ்சி நிலமக்கள் மலையிலிருந்து பிற இடங்களுக்குச் சென்று தங்கிய போதும் தங்கள் நிலப்பெயரை மறவாது ஆழ்வார்க்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, குறிச்சி, கள்ளக்குறிச்சி, மொடக்குறிச்சி எனப் பெயர் வைத்துக்கொண்டனர்போலும். குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குறிச்சியாயிற்று எனலாம்.
முல்லை நில ஊர்கள்
தமிழகத்தில் மரஞ்செறிந்த காடுகள் பழங்காலத்தில் மலிந்திருந்தன. மரங்கள் சூழ்ந்த பகுதிக்குக் குடிபெயர்ந்த மக்கள், மரங்களுக்குப் பெயர்சூட்டி, அம்மரப் பெயர்களோடு ஊர்ப்பெயர்களையும் வழங்கினர்.
- அத்தி (ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர்: ஆர்க்காடு
- ஆல மரங்கள் நிறைந்த ஊர்: ஆலங்காடு
- களாச்செடிகள் நிறைந்த பகுதி: களாக்காடு
- மாமரங்கள் செழித்திருந்த இடம்: மாங்காடு
- பனைமரங்கள் நிறைந்திருந்த ஊர்: பனையபுரம்
காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும் தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் பட்டி, பாடி என்றழைக்கப்பெற்றன. ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி, சின்னகொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி முதலிய நூற்றுக்கணக்கான பட்டிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
மருத நில ஊர்கள்
நிலவளமும் நீர்வளமும் பயிர்வளமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் ஊர் என வழங்கப்பட்டது. பொங்கிப் பெருகி வழிந்தோடி வளங்கூட்டிய ஆறும், அதன் கரையில் இருந்த உயர்ந்த மரங்களும் ஊர்ப்பெயர்களில் கலந்து நிலைத்தன.
- ஆறுகள் பாயும் இடங்களில்: ஆற்றூர் என வழங்கும் ஊர்கள்; காலப்போக்கில் ஆத்தூர் என மருவி வழங்குகிறது
- கடம்பமரம் சூழ்ந்த பகுதி: கடம்பூர், கடம்பத்தூர்
- தெண்ணை சூழ்ந்த பகுதி: தெங்கூர்
- புளியமரங்கள் அடர்ந்த பகுதி: புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி
நம் முன்னோர் குளம், ஏரி, ஊருணி முதலிய நீர்நிலைகளை உருவாக்கி, அவற்றோடு ஊர்ப்பெயர்களையும் இணைத்தனர். சீவலப்பேரி, புளியங்குளம், பேராவூரணி, மாங்குளம், வேப்பேரி என்பன இவ்வாறு தோன்றிய ஊர்ப்பெயர்களே.
நெய்தல் நில ஊர்கள்
பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் பட்டினம் எனவும், சிற்றூர்கள் பாக்கம் எனவும் பெயர் பெற்றிருந்தன. நெடிய கடற்கரையை உடைய தமிழகத்தில் பரதவர் வாழ்ந்த ஊர்கள் கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை எனப் பெயர் பெற்றிருக்கின்றன. இக்காலத்தில் மீனவர் வாழுமிடங்களின் பெயர்கள், குப்பம் என்னும் பெயரைச் சேர்த்துப் பல்கிப் பெருகி வருகின்றன.
அரசும் ஊர்களும்
பெருவேந்தரும் குறுநில மன்னரும் அரண்கள் அமைத்து மக்களைக் காத்தனர். அரண்களுள் கோட்டையும் ஒன்று. கோட்டை சூழவிருந்த ஊர்களே கந்தர்வக்கோட்டை, கோட்டை, தேவக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, நிலக்கோட்டை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை என வழங்கலாயின.
திசையும் ஊர்களும்
நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. தம் ஊருக்குக் கிழக்கே எழுந்த ஊர்ப்பகுதியைக் கீழூர் எனவும், மேற்கே அமைந்த ஊர்ப்பகுதியை மேலூர் எனவும் பெயரிட்டு வழங்கினர். தெற்கே உள்ளது தென்பழஞ்சியாகவும் வடக்கே உள்ளது வடபழஞ்சியாகவும் பெயர் பெற்றன.
நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்துத் தம் ஆளுகைக்குட்படுத்தினார்கள். அவர்கள் ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கினார்கள். அவ்வாறு பெயர்பெற்ற ஊர்கள் ஆரப்பாளையம், இராசபாளையம், கணக்கம்பாளையம், குமாரபாளையம், கோபிச்செட்டிப்பாளையம், கோரிப்பாளையம், மேட்டுப்பாளையம் எனப் பலவாகும்.
ஊர்ப்பெயர் மாற்றங்கள்
காலச்சுழற்சி, ஆட்சிமாற்றம், வேற்றினக்கலப்பு முதலிய காரணங்களால் முதனிலை ஊர்ப்பெயர்களும் தனித்தன்மையிக்க ஊர்ப்பெயர்களும் சிதைந்து, திரிந்து, மருவி, மாறி வழங்கலாயின.
- கல்வெட்டுகளில் காணப்படும் மதிரை மருதையாகி இன்று மதுரையாக மாறியுள்ளது.
- கோவன்புத்தூர் என்னும் பெயர் கோயமுத்தூர் ஆகி, இன்று கோவையாக மருவியுள்ளது.