செம்மொழித் தமிழ்
உலக மொழிகள்
உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சுமொழிகளே. எழுத்துமொழிகளாக உள்ளவற்றுள் இலக்கிய வளம் நிறைந்தவை மிகச் சிலவே. எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியான தமிழ் ஒன்றே என்று வள்ளலார் அருள்கிறார். உலக மொழிகளில் சிறந்தது தமிழ்மொழியே என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
செம்மொழிகள்
திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும். கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்று ஆகியவற்றை செம்மொழிகள் என பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.
இவற்றுள் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் இன்று பேச்சுவழக்கில் இல்லை. ஆனால் தமிழ் மொழியோ இன்றும் வாழும் செம்மொழியாக விளங்குகிறது.
செம்மொழித் தமிழின் சிறப்பு
உலகில் இன்று வழங்கும் மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே எண்ணற்ற இலக்கண இலக்கிய வளங்களைக் கொண்டதாக விளங்கியது தமிழ்மொழி. தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் ஆகிய செவ்வியல் இலக்கியங்கள், தமிழை செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாகத் திகழ்கின்றன.
பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றான திருக்குறளுக்கு இணையான வேறு நூல் உலகில் இல்லை. அதனால்தான் டாக்டர் கிரெஸ்ல், "தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் படிமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது" என்று மொழிந்து இன்புற்றார்.
தமிழின் தனிப்பெருந்தன்மைகள்
இயல்பாகத் தோன்றிய தமிழ்மொழியின் உயரிய பண்புகள், தன்மைகள் பற்றி ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.
1. தொன்மை
உலகின் மிகப்பழைமையான நிலப்பகுதி குமரிக்கண்டம். அந்நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கிவிட்டது. அத்தொன்னிலத்தில்தான் தமிழ் தோன்றியதென தண்டியலங்கார மேற்கோள் செய்யுள் கூறுகிறது:
"ஓங்கிடைவந்த உயர்ந்தோர் தொழிவிளங்கி
ஏங்கொலிநீர் சூழத் திருளகற்றும் —
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஓரையது
தன்னேரிலாத தமிழ்."
2. மென்மை
தமிழ் மெல்லோசை மொழியாயிருப்பதனாலேயே, அது உலக முதன் மொழியாகத் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகின்றது. தமிழை தாய்மொழியாகக் கொள்ளாதவரும் முயற்சி வருத்தமின்றி எளிதாக அதனைக் கற்கவும் பேசவும் இயலுகின்றது.
3. தாய்மை
பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் நாஞ்சில்நாட்டுத் தமிழ்ச் சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன. தமிழ்ச்சொல் இல்லாத உலகப் பெருமொழி யாதொன்றும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
4. தூய்மை
தமிழில் வழங்கிய ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குச் சொற்களும், நூல்வழக்குச் சொற்களும் காலவெள்ளத்தில் மறைந்து போயின. எஞ்சியுள்ள பழஞ்சொற்களைக் கொண்டும் தேவைக்கேற்ப புதுச் சொற்களைப் புனைந்தும் பிறமொழித் துணையின்றித் தமிழால் தனித்து இயங்க இயலும். இவ்வுண்மையை அறிந்தே, "தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறினார் கால்டுவெல்.
5. செம்மை
மக்களுக்கு ஒழுக்க வரம்பு தேவையானது போலவே மொழிக்கு இலக்கண வரம்பும் சொற்களுக்குத் திருந்திய வடிவும் இன்றியமையாதன. இவற்றை தமிழில் உள்ளதுபோல், வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், செந்தமிழ் எனப்பட்டது.
6. மும்மை
முதற்சங்கத்திலிருந்தே இசையும் நாடகமும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழெனத் வழங்கி வரலாயிற்று. முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நூல்கள் முத்தமிழ் பற்றியனவாகவே இருந்தன. தமிழில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று வடிவங்களும் சிறந்து விளங்குகின்றன.
7. இயற்கை வளர்ச்சி
"எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது தொல்காப்பிய நூற்பா. தமிழில் இடுகுறிப் பெயர்கள் மிகவும் குறைவு. ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு. ஆனால், வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையெனத் மூவகை எண் உள்ளன. தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு; பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை.
8. இலக்கண நிறைவு
எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால், தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருளிலக்கணத்தையும் கூறுகிறது. அதனையும் அகம், புறம் என இருவகையாகப் பகுத்துள்ளது.
9. செய்யுள் சிறப்பு
பண்டைத் தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. களிப்பா முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.
10. அணிச்சிறப்பு
புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க உவமை, உருவகம் முதலிய அணிகளைப் பயன்படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார்கள்.
11. நூல் சிறப்பு
ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் இயற்கைச் சீற்றங்களால் அழிந்துபோயின. கிடைத்தவற்றுள் சங்ககால நூல்கள் தமிழரது மொழியையும் பண்பாட்டையும் விளக்குவனவாகத் திகழ்கின்றன. இத்தகைய விழுமிய வியத்தகு பண்பாடுகளையும் நூல்களையும் கொண்டது தமிழ்மொழி. அத்தகைய உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழியை உணர்ந்து கற்றுப் போற்றிக் காப்போம்.