திருக்குறள் – வாய்மை
7ஆம் வகுப்பு தமிழ் பாடநூல் (தொகுதி I) – திருக்குறள் பாடம்
ஆசிரியர் குறிப்பு
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். இவரைப்பற்றித் தெளிவான வரலாறு இதுவரையில் கிடைக்க வில்லை. இவருக்கு நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் முதலிய பெயர்கள் உண்டு. இவரின் காலம் கி.மு. 31 என்பர்.
நூல் குறிப்பு
- குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் திருக்குறள்.
- இது, திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப்பெறுகிறது.
- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
- இதில், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.
- ஒவ்வோர் அதிகாரத்துக்கும் பத்துக் குறட்பாக்களென ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- திருக்குறள், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டுள்ளதனால் 'உலகப் பொதுமறை' என வழங்கப்பெறுகிறது.
- இது, தமிழ்மொழியிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது.
- இந்நூல் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.
வாய்மை அதிகாரம் – குறட்பாக்கள் மற்றும் பொருள்
குறள் 1
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல்.
பொருள்: வாய்மை எனப் போற்றப்படும் பண்பு எதுவெனில், அது மற்றவருக்கு எவ்வகையிலும் தீங்கு தாராத சொற்களைப் பேசுதல்.
குறள் 2
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.
பொருள்: பிறர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமாயின், பொய்யும் உண்மையாகக் கருதப்படும்.
சொற்பொருள்: புரை – குற்றம்; பயக்கும் – தரும்.
குறள் 3
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
பொருள்: தன் நெஞ்சம் அறிந்து பொய் கூறக்கூடாது. கூறின், தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
சொற்பொருள்: சுடும் – வருத்தும்.
குறள் 4
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
பொருள்: ஒருவன் தன் உள்ளம் அறிய பொய்யில்லாமல் நடப்பானானால், அத்தகையவன் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் ஆவான்.
குறள் 5
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.
பொருள்: மனத்தொடு பொருந்திய வாய்மை பேசுபவன், தானம் தவம் செய்கிறவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாகக் கருதப்படுவான்.
குறள் 6
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
பொருள்: பொய் பேசாமை ஒருவனுக்கு எல்லாப் புகழையும் தரும்; அது அவன் வருந்தாமலேயே அவனுக்கு எல்லா நலன்களையும் தரும்.
சொற்பொருள்: அன்ன – அவை போல்வன; எய்யாமை – வருந்தாமை.
குறள் 7
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
பொருள்: பொய் சொல்லாமை என்னும் அறத்தை இடைவிடாமல் கடைப்பிடித்தால் வேறு எந்த அறங்களையும் செய்யவேண்டியது இல்லை.
குறள் 8
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
பொருள்: உடல் தூய்மை நீரால் உண்டாகும்; உள்ளத்தூய்மை வாய்மையால் வெளிப்படும்.
சொற்பொருள்: அகம் – உள்ளம்; அமையும் – உண்டாகும்.
குறள் 9
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
பொருள்: சான்றோர்க்குப் புறவிருளை நீக்கும் விளக்குகளைவிட, அகத்தின் இருளை நீக்கும் பொய்பேசாமையே உண்மையான விளக்காகும்.
குறள் 10
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
பொருள்: யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள், எவ்வகையிலும் உண்மையைவிடச் சிறந்தவையாகச் சொல்லத்தக்கவை வேறில்லை.
நூல் பயன்
திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; உலகெலாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்; எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.