திரு. வி. க. (திருவாரூர் விருத்தாசலனார் கல்யாணசுந்தரனார்)
வாழ்த்து
இப்பாடம் திரு. வி. க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள போற்றி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள வாழ்த்துப் பகுதியாகும்.
பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி
வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி
உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி.
பொருள் விளக்கம்
இசையை இயற்கையோடு இணைத்த பண்பாளனே! பெண்களுக்குத் தாய்மையால் பெருமை சேர்த்த பெருமைக்குரியவனே! கொடைத்தன்மையை உயிரினங்களுக்குத் தந்த வள்ளல் தன்மை உடையவனே! உள்ளத்தில் உண்மையை வைத்த உறவுடையோனே! உன்னை வாழ்த்துகின்றேன்.
சொற்பொருள்
- பண் – இசை
- வண்மை – கொடைத்தன்மை
- போற்றி – வாழ்த்துகிறேன்
ஆசிரியர் குறிப்பு
- பெயர்: திரு. வி. கல்யாணசுந்தரனார் (திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு. வி. க.)
- பெற்றோர்: விருத்தாசலனார் – சின்னம்மையார்
- பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம். இவ்வூர் தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது. இவ்வூர், சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.
- காலம்: 26.08.1883 – 17.09.1953
- பணி: சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகவும், நவசக்தி முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
- படைப்புகள்: மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு முதலியன.
- சிறப்பு: இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டார்; மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ் நடையைப் போற்றி தமிழ்த்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.
நூல் குறிப்பு
வாழ்த்துப் பகுதியில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரு. வி. க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் போற்றி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுவதே பொதுமை வேட்டல். தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக உள்ள நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.
நூல் பயன்
இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும்; மனித நேயம் மலரும்; உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.