குற்றாலக் குறவஞ்சி
நூல்குறிப்பு: இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி. ஆசிரியர் திரிகூட ராசப்பக் கவிராயர் ஆவார். குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல். ஓசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன.
பாடல் 1 – குற்றால மலையின் வளம்
வளைந்த இளம்பிறையைத் தன் சடையில் அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் மலை குற்றாலமலை. அதுதான் எங்கள் மலை. இந்த மலையில் ஆண் குரங்குகள் பெண் குரங்குகளுக்குப் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து தரும். உண்ணும்போது பெண் குரங்குகள் பழங்களைத் தவறவிட்டு விடும். அவை சிந்தும் பழங்களைக் கேட்டுத் தேவர்கள் கெஞ்சி நிற்பார்கள். உயர்ந்த எங்கள் மலையில் உள்ள கானவர்கள் வானத்தில் இருக்கும் தேவர்களைக் கண்சிமிட்டி அழைப்பார்கள்.
சித்தர்கள், இறப்பை நீக்கும் மூலிகைகளை எங்கள் மலையில் வளர்த்து வருவார்கள். அருவியின் அலை உயர்ந்து எழும்பி வானத்தையே தொடும். அந்த அலைநீரில் கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளின் கால்களும் தேரின் சக்கரங்களும் வழுக்கிவிழும்.
பாடல் 2 – குற்றால நாட்டின் சிறப்பு
குற்றாலநாதராகிய சிவபெருமான் வாழும் நாடு எங்கள் நாடு. எங்கள் நாட்டில் மக்கள் அஞ்சி ஓடிப்போவது இல்லை; வெள்ளம்தான் ஓடும். மக்கள் இங்கு ஒடுங்கி இருப்பதில்லை; தவம் செய்வோரின் உள்ளம்தான் ஒடுங்கி இருக்கும். மக்கள் இங்கு நோய், வறுமையால் வாடுவது இல்லை; பெண்களின் மெல்லிடை மட்டுமே வாடும். மக்கள் இங்கு வருந்துவது இல்லை; முத்துகளை ஈனும் சங்குகள் மட்டுமே வருந்துகின்றன.
இங்குப் பயன் அற்றவை என எவையும் தூக்கிப் போடப்படுவது இல்லை; விதைகள் மட்டுமே மண்ணில் போடப்படுகின்றன. மக்கள் இங்கே துன்பத்தில் புலம்புவது இல்லை; குழந்தைகள் காலில் அணியும் கிண்கிணிகளே புலம்பல் ஓலி எழுப்புகின்றன. மக்கள் இங்கே செல்வங்களைத் தேடி அலைவதில்லை; அறம், பெருமை இரண்டை மட்டுமே மக்கள் இங்குத் தேடுவார்கள். இவ்வாறு குறத்தி, தன் மலைவளமும் நாட்டுவளமும் குறித்துக் கூறுகிறாள்.
சொல்பொருள்
- வானரங்கள் – இச்சொல் பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும்; இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது.
- மந்தி – பெண் குரங்கு
- வான்கவிகள் – தேவர்கள்
- கமனசித்தர் – வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்
- காயசித்தி – மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை
- பரிக்கால் – குதிரைக்கால்
- கூனல் – வளைந்த
- வேணி – சடை
- மின்னார் – பெண்கள்
- மருங்கு – இடை
- சூல்உளை – கருவைத்தாங்கும் துன்பம்
இலக்கிய வகை
குறவஞ்சி என்பது தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று. இதில் ஒரு குறத்தி (மலை வாழ் பெண்) கதாநாயகிக்கு ஜோசியம் சொல்வதாக அமைந்திருக்கும். பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கோயிலின் தலவரலாற்றையும் அப்பகுதியின் இயற்கை வளத்தையும் இந்நூல்கள் சிறப்பித்துப் பாடும்.