நாடும் நகரமும் – இலக்கணமும் மொழித்திறனும்
ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் – தமிழ் பாடம்
1. மாத்திரை
இலக்கணத்தில் மாத்திரை என்பது எழுத்துகளின் ஒலியின் அளவைக் குறிக்கும் சொல். மாத்திரை என்பது சிறிய ஒலியளவு ஆகும்.
கண் சிமிட்டும் நேரம் அல்லது விரல் சொடுக்கும் நேரம் மாத்திரையின் கால அளவாகும்.
- மெய்யெழுத்து – அரை மாத்திரை
- உயிரெழுத்து (குறில்) – ஒரு மாத்திரை
- உயிரெழுத்து (நெடில்) – இரு மாத்திரை
- உயிர்மெய் (குறில்) – ஒரு மாத்திரை
- உயிர்மெய் (நெடில்) – இரு மாத்திரை
இந்த அளவைத் தாண்டும் ஒலியளவை அளபெடை என்கிறோம்.
2. எண் (ஒருமை – பன்மை)
ஒருமை, பன்மை என எண் இருவகைப்படும்.
- ஒன்றைக் குறிப்பது ஒருமை; ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.
- பூ – ஒருமை; பூக்கள் – பன்மை
- மாணவன் – ஒருமை; மாணவர் – பன்மை
விதி: பெயர் ஒருமையில் இருந்தால், வினைமுடிபும் ஒருமையிலேயே இருத்தல் வேண்டும்.
(எ.கா.) திருடன் பிடிபட்டான்.
பெயர் பன்மையில் இருந்தால், வினைமுடிபும் பன்மையிலேயே இருத்தல் வேண்டும்.
(எ.கா.) திருடர் பிடிபட்டனர்.
3. இடம்
தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்றாகும்.
- தன்மை – நான், நாங்கள் (தன்னைக் குறிப்பது)
- முன்னிலை – நீ, நீங்கள் (முன்னால் இருப்பவரைக் குறிப்பது)
- படர்க்கை – அவன், அவள், அது, அவர்கள், அவை (தன்மை, முன்னிலை அல்லாத மற்றவரைக் குறிப்பது)
ஒவ்வோர் இடமும் அதற்கேற்ப வினைமுடிபை பெறுதல் வேண்டும்.
எடுத்துக்காட்டு:
நான் சென்றேன். (தன்மை)
நீ சென்றாய். (முன்னிலை)
அவன் சென்றான். (படர்க்கை)
4. அகரவரிசை
உயிர்மெய் எழுத்துகளை அகரவரிசையில் அமைக்கும்போது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உயிர்மெய் வரிசையாக வரும்.
எடுத்துக்காட்டு: க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ என உயிர்மெய்யெழுத்து வரிசை வரும்.
சொற்களை அகரவரிசையில் அமைக்கும்போது முதல் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு: சிறுவன், சாப்பாடு, செய்தி, சலிப்பு, சோளம் என்னும் சொற்களை அகரவரிசையில் அமைத்தால் –
சலிப்பு, சாப்பாடு, சிறுவன், செய்தி, சோளம் என்று வரும்.
5. கடிதம் எழுதுதல் (உறவுமுறைக் கடிதம்)
கடிதத்தில் இடம்பெற வேண்டியவை:
- கடிதம் எழுதுவோரின் முழு முகவரி
- கடிதம் எழுதும் நாள்
- தெரிவிக்க வேண்டிய செய்தி
- கடித உறையில் கடிதம் பெறுபவரின் முழு முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
மாதிரிக் கடிதம்: வெளியூரில் உள்ள நண்பனுக்கு / தோழிக்கு எழுதும் கடிதம் – முகவரி, நாள், வாழ்த்து, செய்தி, அன்புடன் கைவரி ஆகியவை இடம்பெற வேண்டும்.
6. வாழ்க்கைத்திறன்கள்
முன்முயற்சி மிக முக்கியம். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களிடம் முன்முயற்சி இருக்காது. கருத்தை வெளிப்படுத்தவும் முறையான செயலைச் செய்யவும் நீங்கள் ஒருபோதும் தயங்குதல் கூடாது.
7. வளரறி செயல்பாடுகள்
கேட்டல் திறன் – இனியனின் கதை: மலையூரில் வாழ்ந்த இனியன் வேலையின்றி வீணாகப் பொழுது போக்கினான். தாயின் அறிவுரையால் பக்கத்து ஊருக்கு வேலை தேடி சென்றான். பூவரசு மரத்தை வெட்டி விறகு விற்று வாழ்க்கை நடத்த முயன்றான். ஆனால், அந்த மரத்தையே வெட்டி அழித்துவிட்டதால் நிழல் இழந்து வருந்தினான். கதையின் மையக்கருத்து: சுயநலத்தால் இயற்கையை அழித்துக்கொள்ளலாகாது.
படித்தல் திறன்: நாம் சிற்பம் ஆகப் போகிறோமா? சிதறி விழும் கற்களாகப் போகிறோமா? சிற்பமாகத்தான் ஆதல் வேண்டும். அதற்கு முயற்சி செய்தல் வேண்டும்; முட்டுக்கட்டைகளை உடைத்தெறிதல் வேண்டும். வரலாற்றைப் படிப்பது மட்டுமல்ல; வரலாற்றைப் படைக்கவும் வேண்டும்.