தனிப்பாடல்
பாடியவர்: இராமச்சந்திரக் கவிராயர்
பாடப்பிரிவு: 6ஆம் வகுப்பு, மூன்றாம் பருவம், இயல் இரண்டு
பாடல் 1 – மூலம்
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான் ஐயோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான் பண்ணி னானே. 1
பாடல் 1 – பொருள்
கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்க இறைவன் சொல்லித் தரவில்லையே! பொன்பொருள் கொடுத்து என்னைக் காக்கவும் இல்லையே! இதற்காக யாரைக் குற்றம் சொல்லி என்ன பயன்? எங்கும், எல்லாரிடமும் பல்லைக்காட்டிப் பிழைக்குமாறு இறைவன் என்னைப் படைத்துவிட்டானே!
பாடல் 2 – மூலம்
வணக்கம்வரும் சிலநேரம் குமர கண்ட
வலிப்புவரும் சிலநேரம் வலியச் செய்யக்
கணக்குவரும் சிலநேரம் வேட்டை நாய்போல்
கடிக்கவரும் சிலநேரம் கயவர்க் கெல்லாம்
இணக்கவரும் படிதமிழைப் பாடிப் பாடி
எத்தனைநாள் திரிந்துதிரிந்து உழல்வேன் ஐயா!
குணக்கடலே அருட்கடலே அசுர ரான
குரைகடலை வென்றபரங் குன்று ளானே! 2
பாடல் 2 – பொருள்
பாட்டுப் பாடிப் பரிசு வாங்கப் பணம் படைத்தவர்களைப் பார்க்கப் போகும்போது, சில நேரம் அவர்கள் வணக்கம் சொல்லி வரவேற்கிறார்கள். சில நேரம் என்னைக் கண்டதும் அவர்களுக்குக் குமரகண்ட வலிப்பு வருகிறது. முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். சில நேரம், என்னை ஏறிட்டும் பார்க்காமல் வேண்டுமென்றே கணக்குப் புத்தகத்தைப் புரட்டுகிறார்கள். சில நேரம் நாய்களைப்போலக் கடிக்க வருகிறார்கள். இப்படிப்பட்ட கயவர்களிடம் தமிழைப் பாடிப்பாடிப் பரிசு வாங்க இன்னும் எத்தனை நாள், நான் திரிந்து அலைவேன்? ஒலிக்கும் கடலாக இருந்த அரக்கர்களை வென்றவனே! திருப்பரங்குன்றத்தில் விளங்கும் முருகா! கூறு.
சொல்பொருள்
- இரட்சித்தானா? – காப்பாற்றினானா?
- அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
- ஆரைத்தான் – யாரைத்தான்
- பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன்
- புவி – உலகம்
- குமரகண்ட வலிப்பு – ஒருவகை வலிப்புநோய்
- இணக்கவரும்படி – அவர்கள் மனம் கனியும்படி
- குணக்கடலே! அருட்கடலே! – முருகனை இவ்வாறு அழைக்கிறார்
- குரைகடல் – ஒலிக்கும் கடல்; அசுரர்கள் கடல் வடிவில் வந்தார்கள் என்பது கதை
- பரங்குன்றுளான் – திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன்
நூல்குறிப்பு
புலவர் பலர், அவ்வப்போது பாடிய பல பாடல்கள் தொகுக்கப்படாமல் இருந்தன. அவற்றை 'தனிப்பாடல் திரட்டு' என்னும் பெயரில் தொகுத்துள்ளனர். பெரும்பாலான பாடல்கள் இருநூறுமுதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர் இராமச்சந்திரக்கவிராயர்; துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் இவர்.