சாதனைப் பெண்மணி மேரி கியூரி
பிறப்பும் குடும்பமும்
கியூரி அம்மையார் போலந்து நாட்டில் 1867ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர்; இவரே அவர்களுள் இளையவர். இவரது தந்தை ஓர் அறிவியல் ஆசிரியர். ஆனாலும் குடும்பத்தில் வறுமை நிலவியது.
கல்விப் பயணம்
மேரியின் தமக்கை மருத்துவக் கல்வி பயில விரும்பினார். போதிய வசதி இல்லாத நிலையில், இளையவள் மேரி குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்தார்; வேலைவிடைகளும் செய்தார். அதன்மூலம் பொருள் ஈட்டி தம் தமக்கையின் கல்விக்கு உதவினார்.
கல்லூரி நிர்வாகம் "பெண்ணுக்கு அறிவியல் கல்வி தேவையில்லை; சமையல் கலையே போதும்" என்று கூறியது. அதை ஏற்க மேரி மறுத்தார். அவர் பிரான்சு நாடு சென்று கல்லூரியில் சேர்ந்து தம் வாழ்வின் இலக்கான அறிவியல் கல்வியைப் பயின்றார்.
தம்முடைய வறுமையை யாரும் அறியாவண்ணம் கல்லூரி நாட்களைக் கழித்தார். ஒருமுறை மூன்று நாள் உணவு உட்கொள்ளாததனால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். மருத்துவர் நல்ல உணவும் ஓய்வும் வேண்டும் என்றபோது உடன்படிலும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து பலவகையிலும் உதவினர்.
திருமணமும் ஆராய்ச்சியும்
அறிவியல் மேதை பியரி கியூரியை மேரி திருமணம் செய்துகொண்டார். அவருடன் சேர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மணவாழ்க்கையில் மனநிறைவுடன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், ஒரு வாரம் மட்டுமே ஓய்வெடுத்துக்கொண்டு தம்முடைய அறிவியல் ஆராய்ச்சிப் பணிக்குத் திரும்பினார்.
தம்முடைய வருவாயில் பெரும்பகுதியை ஆராய்ச்சிக்குச் செலவிட்டதனால் வீட்டுவேலைகளை கணவன்–மனைவி இருவருமே சேர்ந்து செய்தனர்; எளிமையாகவே வாழ்ந்தனர்.
கண்டுபிடிப்புகள்
அறிவியல் மேதை ஏ.எச்.பெக்காரல் என்பவருடன், பியரி கியூரியும் மேரி கியூரியும் இயற்பியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இடைவிடாது செய்த ஆராய்ச்சியின் பயனாகக் கணவன்–மனைவி இருவரும் முதலில் போலோனியம் என்னும் தனிமப்பொருளைக் கண்டுபிடித்தனர்; அதன்பிறகு, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, ரேடியம் என்னும் தனிமப்பொருளைக் கண்டுபிடித்தனர்.
ரேடியத்தின் உதவியால் மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் புற்றுநோய் மற்றும் பல வகைத் தோல்நோய்களைக் குணமாக்கலாம் என்று கண்டறிந்தனர்.
நோபல் பரிசுகள்
இவ்விரண்டு அரிய கண்டுபிடிப்புக்காக ஏ.எச்.பெக்காரலுக்கும் பியரி கியூரி, மேரி கியூரி இணையருக்கும் 1903ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதற்பெண்மணி மேரி கியூரி ஆவார்.
மேரி கியூரி தம்முடைய கண்டுபிடித்த ரேடியத்தைத் தனியார் நிறுவனம் ஒன்று 50 இலட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்க முன்வந்தது. ஆனால், தம்முடைய கண்டுபிடிப்பை அறிவியல் உலகுக்குக் கொடையாக வழங்கினார் கியூரி.
அவருடைய கணவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்தபிறகு, பிரெஞ்சு அரசு அம்மையாருக்கும் அவருடைய பெண் குழந்தைகள் இருவருக்கும் பொருளுதவி அளிக்க முன்வந்தது. ஆனாலும் மேரி, அதனை ஏற்க மறுத்தார்.
அதன்பிறகு, அவருடைய கணவர் ஆற்றிய பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு அளிக்கப்பட்டது. அவர் மேன்மேலும் வேதியியலில் ஆராய்ச்சிகள் பல செய்து, ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு இரண்டாவது முறையாக 1911ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மரியாதையும் மறைவும்
அதன்பிறகு, அவர் பல நாட்டினராலும் அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்; பல பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றார். செயற்கரிய செய்த கியூரி அம்மையார் 1934ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
மரபு தொடர்கிறது
கியூரி அம்மையாருக்குப்பின், அவர் மகள் ஐரினும் மருமகன் ஜோலியட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கைக் கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக 1935ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று நோபல் பரிசு பெற்ற இச்சாதனை இன்றுவரை எந்தக் குடும்பத்தினராலும் முறியடிக்கப்படவில்லை.