கல்லிலே கலைவண்ணம்
தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
காவிரி பாயும் சோழவள நாடு கலைகளின் விளைநிலம். வியக்கவைக்கும் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் கும்பகோணம். இவ்வூரின் தென்புறம் அரிசிலாறு (இக்காலத்தில் அரசலாறு என வழங்கப்படுகிறது) பாய்கிறது. இதன் தென்கரையில் தாராசுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கேதான் ஐராவதீசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவில் ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்டது. நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை இந்த ஒரே கோவில் நமக்குத் தருகிறது. இவ்வளாகத்தில் எங்கும் சிற்பமயம். இக்கோவில் சிற்பங்கள் நம்மைச் சுண்டியிழுக்கும்.
சிற்பங்களில் கதைகள்
ஒவ்வொரு சிற்பத்திலும் ஒரு கதையோ காவியமோ பொதிந்திருக்கிறது:
- திரிபுராந்தகன் (முப்புரம் எரித்தவன்) கதை – ஒரு சிற்பம்
- கஜசம்ஹார மூர்த்தி – யானையைக் கொன்று அதன் தோலை உடுத்திக்கொண்ட சிற்பம்
- லிங்கோத்பவர் (அண்ணாமலையார்) – அடிமுடி தேடவைக்கும் கதையை உள்ளடக்கிய சிற்பம்
- இராமாயண, மகாபாரதக் கதைகள், இரதி மன்மதன் கதைகள், சிவபுராணக் கதைகள் என எண்ணில் அடங்காத கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன
- பரதநாட்டிய அடவுகளும் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன
அற்புத சிற்பங்கள்
இக்கோவிலில் குறிப்பிடத்தக்க சிற்பங்கள்:
- அன்னபூரணி – அன்னம் பாலிக்கும் அற்புத சிற்பம்
- கண்ணப்பர் – இன்றைய கண்தானத்துக்கு அன்றே எடுத்துக்காட்டாக அமைந்த சிற்பம்
- ஒருடல் சிற்பங்கள் – பறவை, விலங்கு, மனிதன் என கலவையாய் அமைந்த சிற்பங்கள்
- 63 நாயன்மார்களின் கதைகளைக் கூறும் கல்வெட்டு எழுத்துத் தலைப்புகளுடன் கூடிய புடைப்புச் சிற்பங்கள்
சங்கீதக் கருங்கற்படிகள்
கோவிலின் நுழைவாயிலில் அமைந்த ஏழு கருங்கற் படிகள் 'சரிகமபதநி' என்னும் ஏழு நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன. சோழ மண்டலத்துக்குள் நுழைந்தாலே, எங்கும் இசையொலி, 'தாம்தரிகிட தீம்தரிகிட' என்னும் மத்தள லய ஒலி, வீணையின் மீட்டொலி, புல்லாங்குழலின் கான ஒலி, நாகசுர நல்லொலி என இசைமழையில் நனையும் அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.
வானவியல் அறிஞரின் பாராட்டு
தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கார்ல் சேகன் (Carl Sagan) என்ற வானவியல் அறிஞர் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
யுனெஸ்கோ அங்கீகாரம்
தஞ்சை அரண்மனைக்குச் சொந்தமானது இக்கோவில். அழகு வாய்ந்த இதன் பழமையை இப்போது மத்திய தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதனை மரபு அடையாளச் சின்னமாக யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு அறிவித்துள்ளது. ஒற்றைவரியில் இதனைக் 'கலைகளின் புகலிடம்' எனலாம்.
இரண்டு தோற்றங்கள் ஒரே சிற்பத்தில்
கல்லில் செதுக்கிய ஒரு சிற்பம் இடப்பக்கத்திலிருந்து பார்த்தால் காளையின் உருவம் தெரிகிறது; வலப்பக்கத்திலிருந்து பார்த்தால் யானையின் உருவம் தெரிகிறது. இது சிற்பிகளின் அற்புத கலைத்திறனை வெளிப்படுத்துகிறது.