எது பெரிய உண்மை?
இது ஒரு நாட்டுப்புறக் கதை. ஒரு சிற்றூரில் பஞ்சம் வந்தபோது நிகழ்ந்த நிகழ்வை விவரிக்கிறது. இக்கதையில் நீதி தேவதை உண்மையான திருடன் யார் என்பதை அறியும் நிகழ்ச்சி கூறப்படுகிறது.
கதைச் சுருக்கம்
அஃது ஒரு சிற்றூர். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. இன்று நிலைமை மாறிப்போய்க் கிடக்கிறது; பஞ்சத்தில் வறண்டு கிடக்கிறது. அந்தச் சிற்றூரின் கோடியில் ஒரு குடிசை இருந்தது. யாரோ வாழ்ந்துவிட்டுப் போன குடிசை அது. அந்தக் குடிசை இருவருக்கு அடைக்கலம் தந்திருந்தது — ஒருவர் பார்வை அற்றவர்; மற்றவர் கால் இல்லாதவர்.
மாலையில் கடைத்தெரு மூடும்போது அவர்கள் செல்வார்கள். மிஞ்சிய காய், கனி, உணவுப் பொருள்களை மக்கள் அவர்களுக்குத் தருவார்கள். அதனை உண்டு அவர்கள் வாழ்ந்தனர். ஆனால் பஞ்சம் வந்தபிறகு கடைத்தெரு பெரும்பாலும் மூடியே கிடக்கிறது. ஐந்து நாட்கள் தொடர்ந்து எதுவும் கிடைக்காமல் அவர்கள் பட்டினியில் இருந்தனர்.
இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். தொலைவில் இருந்தது ஊர்த்தலைவரின் தோட்டம். பஞ்சத்திலும் செழித்திருந்த அந்தத் தோட்டத்திற்குச் செல்வது என்று முடிவு செய்தனர்.
கால் இல்லாதவரை கண் இழந்தவர் சுமந்து செல்லுதல் வேண்டும்; கால் இல்லாதவர் வழிகாட்டவும் கண் இழந்தவர் நடத்தலும் வேண்டும் — இஃது அவர்களின் ஏற்பாடு. வழிகாட்டுவது எளியது; ஆனால், அதன்படி நடப்பது கடினம். கண் இழந்தவர் மூச்சு வாங்க நடந்தார். எப்படியோ ஊர்த்தலைவர் தோட்டத்துக்கு வந்துவிட்டனர்.
தோட்டத்தில் பழங்களும் காய்கறிகளும் குவிந்து கிடந்தன. கால் இல்லாதவரை இறக்கிவிட்டு, கண் இழந்தவர் தட்டுத்தடுமாறிப் போய்க் கையில் அகப்பட்டதனை எடுத்து வந்தார். எடுத்து வந்தவை இரண்டு மூன்று நாட்களுக்குப் போதும். நீண்ட நாளுக்குப் பிறகு வயிறார உண்டு உறங்கினார்கள்.
விசாரணை
காலையில் எழும்போதே பெருங்கூச்சல் கேட்டது. ஊர் முச்சந்தியில் நின்று தலைவர் கத்திக்கொண்டிருந்தார்: "யாருடா, என் தோட்டத்தில் இறங்கித் திருடினவன்?"
யாரும் திருட்டை ஒப்புக்கொள்ள முன் வராததனால், ஊர்த்தலைவர் 'நீதி தேவதை'யின் கோவிலுக்குப் போய் மண்டியிட்டு வேண்டி, 'நீதி தேவதை'யை ஊருக்குள் அழைத்து வந்தார். ஒவ்வொருவரும் 'நீதி தேவதை'யின்முன் வந்து உண்மையைச் சொல்லுதல் வேண்டும். திருடியவரைத் தேவதை கண்டுபிடித்துவிடும்; பொய் சொன்னாலும் கண்டுபிடித்துவிடும்; தவறு செய்தவரின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடும்.
ஊர் மக்கள் ஒவ்வொருவராக வந்து, 'தான் திருடவில்லை' என்று வாக்குமூலம் அளித்தனர். யாரையும் 'நீதி தேவதை' கொல்லவில்லை.
ஆச்சரியமான தீர்ப்பு
இனியிருப்போர் பார்வையற்றவரும் கால் இல்லாதவரும் மட்டும்தான். முதலில் கண் இழந்தவர் நின்று சொன்னார்: "தேவதையே! நான் பிறவிக்குருடன்; எதனையும் கண்கொண்டு பார்க்க முடியாதவன். தலைவர் தோட்டத்தையும் நான் பார்த்தது இல்லை." தேவதை அவரை எதுவும் செய்யவில்லை.
அடுத்துக் கால் இல்லாதவர் வந்தார். "அம்மா! நான் பிறவியிலேயே முடவன்; நடக்க மாட்டாதவன்; தலைவர் தோட்டத்தில் என் கால் படவே இல்லை." கால் இல்லாதவரையும் தேவதை எதுவும் செய்யவில்லை.
அப்படியானால், திருடியது யார்? ஊர் மக்களுக்கு வியப்பு! நீதி தேவதை, கோவிலைவிட்டு வெளியே வந்தபின், குற்றவாளியைத் தண்டிக்காமல் திரும்பிப் போகுமா?
அப்போது, எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்தது. கண்ணுக்குத் தெரியாத இரு கைகள் ஊர்த்தலைவரின் கழுத்தை நெரித்தன. ஊர்த்தலைவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
பெரிய உண்மை
ஊர் மக்கள் நீதி தேவதையை நெருங்கி, "ஊர்த்தலைவரைக் கொன்றது ஏன்?" என்று கேட்டனர். நீதி தேவதையின் குரல் உறுதியாய் எதிரொலித்தது:
"சிறிய உண்மையைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. உண்மைகளிலேயே பெரிய உண்மையைத்தான் நான் தேடுவேன். திருடர்களைவிடத் திருடத் தூண்டியவர்களையே நான் தண்டிப்பேன். ஊர் மக்கள் பட்டினி கிடக்கும்போது, மொத்த உணவுப் பொருள்களையும் குவித்து வைத்திருப்பவன்தானே பெரிய திருடன். ஆகவே குற்றவாளியைத் தண்டித்தேன்."
"ஆமாம். அதுவும் சரிதான்..." என்றது மக்கள் கூட்டம்.
இலக்கண விளக்கம் — சுட்டெழுத்துகள்
அவன், அவள், அவர், இவன், இவள், இவர், அது, இது, அவை — இவை என்னும் சொற்கள், குறிப்பிட்ட மனிதரையோ பொருளையோ சுட்டிக்காட்ட உதவுகின்றன. இப்படிச் சுட்டிச்சொல்ல உதவும் எழுத்துகள் இரண்டு: அ, இ. இவற்றைச் சுட்டெழுத்துகள் என்கிறோம்.
- பழங்காலத்தில் 'உ' என்பதும் சுட்டெழுத்துதான். 'உ' எழுத்து பல பணிகளைச் செய்தது.
- உதுக்காண் = சற்றுத் தொலைவில் பார் என்பது பொருள்.
- உப்பக்கம் = முதுகுப்பக்கம் என்பது பொருள்.
- இப்பொழுது, சுட்டிச்சொல்ல நாம் 'உ' எழுத்தைப் பயன்படுத்துவது இல்லை.
- அது, இது, அந்த, இந்த, அங்கு, இங்கு என்னும் சுட்டுச்சொற்களே இன்று பெருவழக்காகிவிட்டன.
வினா எழுத்துகள்
வினாக்கள் எழுப்புவதற்கு சில எழுத்துகள் உதவுகின்றன: எ, ஏ, யா, ஓ ஆகியவை.
- விடை என்ன?
- ஏன் வந்தாய்?
- யார் அங்கே?
- நீயோ செய்தாய்?
'ஏ' எழுத்து வினா கேட்க மட்டும் பயன்படுவது இல்லை. அழுத்தம் கொடுத்துச் சொல்லவும் பயன்படுகிறது. இப்பொழுது, 'ஏ'க்கு மாற்றாகத் 'தான்' பயன்படுத்தும் வழக்கமும் இருக்கிறது.