இளமையில் பெரியார் கேட்ட வினா
இராமசாமி – இளமைக் காலம்
இராமசாமி குறும்புக்காரச் சிறுவன். யார் எதனைச் சொன்னாலும் 'ஏன், எப்படி, எதற்கு' என்று வினா கேட்பான். அவனுக்கு புரியைவைப்பது எளிதான செயலாக இல்லை. அமைதிப்படுத்துவது பெற்றோரான வெங்கடப்பருக்கும் – சின்னத்தாயம்மாளுக்கும் பெரும்பாடாக இருந்தது.
இராமசாமிக்கு பன்னிரண்டு அகவை. ஈரோடு அவனது ஊர். அங்கு இராமநாதன் என்பவரின் கடையில் இராமசாமி உட்கார்ந்திருந்தான். அந்த இராமநாதன் நடக்கிற எந்த ஒரு செயலுக்கும் மனிதனின் தலைவிதிதான் காரணம் என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்.
இராமநாதனின் தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருந்த தராசுத்தட்டை, அவர் கவனிக்காத நேரம் பார்த்து மெல்லத் தட்டிவிட்டான் இராமசாமி. தட்டு 'மடாரென' வந்து விழுந்தது. "ஏன் தள்ளிவிட்டே?" என்று சினத்துடன் விரட்டினார் கடைக்காரர். "தலைவிதிப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? என்னை ஏன் விரட்டுகிறீர்கள்?" என்று சொல்லியபடியே இராமசாமி ஓடி மறைந்தான்.
சாதி வேறுபாடும் சிறுவன் இராமசாமியும்
பெற்றோர் பள்ளிக்கு அனுப்பும்போது அறிவுரை சொல்வார்கள்: "பள்ளிக்குச் செல்லும் வழியில் உனக்கு நா வறட்சி ஏற்படும். அப்போது மற்ற மாணவர்கள் வீடுகளில் நீ போய் நீர் கேட்காதே. அவர்கள் கீழ்ச்சாதி மக்கள். அவர்கள் தொட்ட எதனையும் நாம் உண்ணவோ குடிக்கவோ கூடாது."
இராமசாமிக்கு இது புரியவில்லை; பிடிக்கவும் இல்லை. ஒருநாள் தாகம் எடுக்க, வகுப்பு ஆசிரியர் வீட்டில் நீர் கேட்டான். அங்கிருந்த பெண் குவளையில் நீர் கொண்டுவந்து கொடுத்தாள். அவன் குடித்த குவளையின்மீது நீர் தெளித்த பிறகே அப்பெண் அதனை வீட்டுக்குள் கொண்டு சென்றாள்.
வீட்டிற்கு வந்தது அம்மாவைக் கேட்டான். "அவர்கள் மேல்சாதிக்காரர்கள். நாம் தொட்ட பொருள்களைத் தூய்மை செய்துவிட்டுத்தான் மீண்டும் பயன்படுத்துவார்கள்" என்றார் அம்மா. இராமசாமிக்கு அம்மா சொன்னது வியப்பை அளித்தது. "மனிதர்கள் ஏன் இப்படி ஒருவரையொருவர் தாழ்வாக நினைக்கின்றனர்?" என்று சிந்தித்தான்.
யார் யாரையெல்லாம் கீழ்ச்சாதிக்காரர்கள் என்று தன் வீட்டார் கருதுகிறார்களோ, அவர்கள் வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடுவது என்று இராமசாமி முடிவு செய்தான். எல்லாக் குழந்தைகளுடனும் விளையாடத் தொடங்கினான்; யாரும் யாரையும் தொடலாம்; யாரும் யார் வீட்டிலும் சாப்பிடலாம் என்பதனையும் உறுதி செய்து கொண்டான்.
பெரியார் ஆனது எப்படி?
சிறுவன் இராமசாமி, பெரியார் இராமசாமியாக வளர்ந்து உயர்ந்த கதை மிகச் சுவையானது. அவர் வளர்ந்து பெரியவரான பிறகும் வினாக்கள் கேட்பதனை நிறுத்தவே இல்லை. மற்றவர்களையும் வினாக்கள் கேட்கப் பழகவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.
பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கமானாலும் சரி; அதனைச் செய்தால் என்னவாகும்; செய்யாவிட்டால் என்னவாகும் என்று சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதுபோன்ற அறிவார்ந்த செயல்களால் பெரியார் பலரையும் ஈர்த்தார்; அடிக்கடி கூட்டங்களை நடத்தினார்; சாதி உயர்வுதாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்றார்; அதற்காக ஒரு சங்கமும் அமைத்தார்; அதற்குப் 'பகுத்தறிவாளர் சங்கம்' என்பது பெயர்.
காந்தியின் தொண்டர் – வைக்கம் வீரர்
இளமையிலே பெரியார், மகாத்மா காந்தியின் தொண்டரானார்; காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்; கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்; கள் இறக்குவதனைத் தடுப்பதற்காகத் தன்னுடைய தோப்பிலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தார். கதர் அணிய வேண்டும் என்று பரப்புரை செய்தார். தன் தோளில் கதர்த்துணிகளைச் சுமந்து விற்றார்.
கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள், கோவில் சுற்றுத்தெருவில் நடப்பதற்குத் தடை இருந்தது. அதனை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதனால், 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம்
"கீழ்ச்சாதி – மேல்சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல, எல்லாருக்கும் கல்வி தேவை; எல்லாரும் கல்வி பெறுதல் வேண்டும்" என்று பெரியார் கூறினார். இந்தக் கருத்துகள் இளைஞர்களை ஈர்த்தன. அதனால், சுயமரியாதை இயக்கம் வலுவடைந்தது.
பிறரை மதித்தல் வேண்டும், அது மரியாதை. தன்னைத்தானே மதிப்பதும், தன் மரியாதையைத் தக்கவைத்துக் கொள்வதும் சுயமரியாதை. சிறு குழந்தையையும் 'வாங்க, போங்க...' என்று மரியாதையுடன் அழைத்துப் பேசுவது பெரியாரின் பண்பு. பெரியார் மரியாதையையும் – சுயமரியாதையையும் தம்மிரு கண்களாகக் கருதினார்.
பெண் விடுதலை
தாய்மார்தாம் இராமசாமிக்குப் 'பெரியார்' எனப் பட்டம் வழங்கினார்கள். பெண்விடுதலைக்கு முதற்படியாகப் பெண்கள் எல்லாரும் கல்வி கற்கவேண்டும் என்பதனைப் பெரியார் வற்புறுத்தினார். பெண்கள் துணிவுடனும் நம்பிக்கையுடனும் விளங்குதல்வேண்டும் என்றார். மற்போர், குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளையும் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்றார்.
குணத்திலும் அறிவிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறுபாடு இல்லை; இருவரும் நிகரானவர்களே என்பதனை மீண்டும்மீண்டும் வற்புறுத்தினார். "மனிதர்களை மனிதர்களாக மதிக்கவேண்டும் என்பதனை ஏற்கிறீர்கள். அதுபோல மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும். ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்தல் வேண்டும்; அவர்களால் செய்யவும் இயலும். பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்."
சிறப்புக் குறிப்புகள்
- பெரியார் 17.09.1879இல் பிறந்து, 24.12.1973இல் மறைந்தார்.
- தம் வாழ்நாளில் 8600 நாள், 13,12,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்தார்.
- 10,700 கூட்டங்களில் 21,400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்.
- 1970ஆம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக இக்கிய நாடுகள் அவையின் 'யுனெஸ்கோ விருது' பெரியாருக்கு வழங்கப்பட்டது.
- நடுவண் அரசு 1978ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
- தமிழகத்தின் மிகப்பெரிய சிந்தனையாளர்; இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளரும்கூட. பெரியார் ஈ. வெ. ரா. என்று அழைப்பார்கள்.