சித்தர் பாடல் – கடுவெளிச் சித்தர்
பாடல்
வைதோரைக் கூட வையாதே – இந்த
வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே!
பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே!
வேம்பினை உலகில் ஊட்டாதே – உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே!
போற்றும் சடங்கை நண்ணாதே – உன்னைப்
புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே!
சாற்றும்முன் வாழ்வை எண்ணாதே – பிறர்
தாழும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே!
கள்ள வேடம் புனையாதே – பல
கங்கையிலே உன்கடம் நனையாதே!
கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள்முனையாதே!
– கடுவெளிச் சித்தர்
பாடல் பொருள்
- உன்னை வைதவரைக்கூட நீ வையாதே; இந்த உலகத்தில் எல்லாம் பொய்யாகப் போனாலும் நீ பொய் சொல்லாதே.
- பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதே; கல்லெறிந்து பறவைகளைத் துன்புறுத்தாதே!
- பாம்போடு விளையாடாதே! பெண்களைப் பழித்துப் பேசாதே! பிறரிடம் கசப்பான சொற்களைப் பேசாதே! உன் இறுமாப்பைப் பிறர்க்குக் காட்டாதே!
- பிறர் கொண்டாடிச் செய்யும் சடங்குகளை நீயும் செய்யாதே! உன்னைப் புகழ்ந்து பேச, பிறர் வீடுகளுக்குச் செல்லாதே; உன் வாழ்வைப் போற்றி நீ பெரிதாக எண்ணாதே!
- பிறருக்கு இழிவை உண்டாக்கும் தாழ்வான செயல்களைச் செய்யாதே!
- போலி வேடங்களைப் போடாதே! புண்ணிய ஆறுகளைத் தேடித்தேடிப் போய் முழுகாதே!
- யாருடைய பொருளையும் திருட நினைக்காதே! ஒருவனோடு நட்புக்கொண்டு பிறகு அவனைப் பிரிந்து, அவனைப் பற்றிப் பிறரிடம் கோள்மூட்டிப் பேசாதே!
சொல்பொருள்
| சொல் | பொருள் |
|---|---|
| வெய்யவினை | துன்பம் தரும் செயல் |
| வேம்பு | கசப்பான சொற்கள் |
| வீறாப்பு | இறுமாப்பு |
| பலரில் | பலர் + இல், பலருடைய வீடுகள் |
| புகலல் ஒண்ணாதே | செல்லாதே |
| சாற்றும் | புகழ்ச்சியாகப் பேசுவது |
| கடம் | உடம்பு |
பாடல் குறிப்பு
- ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.
- பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்.
- நம் பாடப்பகுதிப் பாடலின் ஆசிரியர் கடுவெளிச் சித்தர்.
- இவர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்; எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்.
நீதிக் கருத்துகள்
- உண்மை பேசு; பொய் சொல்லாதே.
- யாரையும் பழிக்காதே; கசப்பான சொற்கள் பேசாதே.
- உயிர்களுக்கு துன்பம் செய்யாதே.
- பிறர் பொருளை திருட நினைக்காதே.
- நட்பை காத்துக்கொள்; நண்பனை கோள் சொல்லி பிரிக்காதே.
- அகந்தை கொள்ளாதே; தன்னை பெரியவராக எண்ணாதே.
- போலி தோற்றத்தில் வாழாதே.