ஆராரோ ஆரிரோ – நாட்டுப்புறப் பாடல்
பாடல்
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ கண்ணே கண்மணியே
ஆரடிச்சு நீ அழுதே!
அடிச்சாரைச் சொல்லி அழு
ஆராரோ ஆரிரோ…
தாலாட்டுப் பாடல் என்றால் என்ன?
குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாய் பாடும் பாட்டு தாலாட்டுப் பாடல் எனப்படும். இந்தப் பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா என்று தோன்றுகிறது — பள்ளிக்கூடமே போகாத, எழுதப் படிக்கத் தெரியாத தாய்மார்களுக்கும் இந்தத் தாலாட்டுப் பாடல் தெரிகிறது!
நாட்டுப்புறப் பாடல் என்றால் என்ன?
யாரும் எழுதவில்லை; ஏட்டில் எழுதாத பாடல்தான் நாட்டுப்புறப் பாடல் எனப்படுகிறது. ஒருவர் பாடிக்கொண்டிருக்கும்போது கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனத்தில் வாங்கித் தானும் பாடிப்பாடிப் பழகிவிடுகிறார். வாய்வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு நாட்டுப்புறப்பாட்டு.
இதேபோல் எழுதப்படாத, எல்லாருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இவற்றை எல்லாம் "வாய்மொழி இலக்கியம்" என்று கூறுவார்கள்.
நாட்டுப்புறப் பாடல்களின் வகைகள்
- தாலாட்டுப் பாடல்கள் – பிறந்த குழந்தைக்குப் பாடுவது
- விளையாட்டுப் பாடல்கள் – கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது
- தொழில் பாடல்கள் – களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது
- சடங்குப் பாடல்கள் – திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது
- கொண்டாட்டப் பாடல்கள் – விழாக்களில் பாடுவது
- வழிபாட்டுப் பாடல்கள் – சாமி கும்பிடுவோர் பாடுவது
- ஒப்பாரிப் பாடல்கள் – இறந்தோருக்குப் பாடுவது
நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பு
முன்னர் இப்பாடல்களைக் கிராமியப் பாடல்கள் என்று கூறி வந்தார்கள். ஆனால் வாய்வழியாகப் பரவும் பாடல் சிற்றூர்களில் மட்டுந்தான் உண்டா? நகரங்களிலும் தாய்மார்கள் பாடுவது இல்லையா? சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள்பாடும் 'கானாப் பாடல்' கூட நாட்டுப்புறப் பாடல்தான். கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் நாட்டுப்புறப்பாடல்தான்.
தாலாட்டுப் பாடல் — ஓர் எடுத்துக்காட்டு
கொழும்புல கூடாரம் – உங்க மாமா
கொத்தமல்லி வியாபாரம் (ஆராரோ ஆரிரோ)
கொத்தமல்லி வித்தெடுத்து – உங்க மாமன்
கொலுசு பண்ணி வாராராம் (ஆராரோ ஆரிரோ)
இவ்வாறு தாலாட்டுகளில் தாய்மார்கள், தங்கள் அண்ணன் தம்பிகளின் பெருமைகளைப் பாடுவது வழக்கம்.
விளையாட்டுப் பாடல் — ஓர் எடுத்துக்காட்டு
சாஞ்சாடம்மா சாஞ்சாடு
சாயக்கிளியே சாஞ்சாடு
குத்துவிளக்கே சாஞ்சாடு
கோவில் புறாவே சாஞ்சாடு
மானே மயிலே சாஞ்சாடு
மாடப்புறாவே சாஞ்சாடு…
தொழில் பாடல் — ஓர் எடுத்துக்காட்டு
சோ… சோ…
அழுக்குத் துணியே
சோ… சோ…
அடிச்சுத் துவைச்சி…
சோ… சோ…
இறுக்கிப் பிழிஞ்சி
சோ… சோ…
காயப்போடு
விழிப்புணர்வுப் பாடல் — ஓர் எடுத்துக்காட்டு
ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளக்காரன்
இந்தப் பாடல் நமது நாட்டு விடுதலைப் போராட்டக் காலத்தில் உருவான நாட்டுப்பாடல்.
நாட்டுப்புறப் பாடல்களின் தனிச்சிறப்பு
ஒருவர் பாடியதுபோல, அப்படியே இன்னொருவர் பாடுவது இல்லை. இது நாட்டுப்புறப் பாடல்களின் தனிச்சிறப்பு. தமிழர் வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் இப்படிப் பாடல்கள் உண்டு.