நான்மணிக்கடிகை
பாடல்
மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்; – மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு.
பாடல் பொருள்
குடும்பத்தின் விளக்குப் பெண்ணாவாள். அப்பெண்ணுக்கு விளக்கினைப் போன்றவர்கள், அவள் பெற்ற பண்பில் சிறந்த பிள்ளைகள். மனத்திற்கினிய அன்புமிக்க அப்பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி. அக்கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால், அவர்களிடம் உள்ள நல்லெண்ணங்களே.
சொல் பொருள்
| சொல் | பொருள் |
|---|---|
| மடவார் | பெண்கள் |
| தகைசால் | பண்பில் சிறந்த |
| மனக்கினிய | மனத்துக்கு இனிய |
| காதல் புதல்வர் | அன்பு மக்கள் |
| ஓதின் | எதுவென்று சொல்லும்போது |
| புகழ்சால் | புகழைத் தரும் |
| உணர்வு | நல்லெண்ணம் |
ஆசிரியர் குறிப்பு
நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார். விளம்பி என்பது ஊர்ப்பெயர்; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
நூல் குறிப்பு
நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள். நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள். ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளை கூறுகின்றது.
நான்கு மணிகளாக அமைந்த கருத்துகள்
- மனைக்கு விளக்கம் – பெண்
- பெண்ணுக்கு விளக்கம் – தகைசால் புதல்வர் (பண்பில் சிறந்த பிள்ளைகள்)
- புதல்வர்க்கு விளக்கம் – கல்வி
- கல்விக்கு விளக்கம் – நல்லெண்ணம் (உணர்வு)
இலக்கிய வகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது அறநூல் வகையைச் சேர்ந்தது. ஒவ்வொரு பாட்டிலும் நான்கு நீதிக் கருத்துகள் இடம் பெறும்.