பாரத தேசம்
6ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாரத தேசம் என்னும் கவிதை, மகாகவி பாரதியாரால் இயற்றப்பட்டது. இந்தியாவை வளமான, வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்ற பாரதியாரின் கனவுகளை இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது.
கவிதை
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்பு முணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்.
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.
சொற்பொருள்
- தலை சாயுதல் – ஓய்ந்து படுத்தல்
- வண்மை – கொடை (தாராளமாகக் கொடுத்தல்)
- உழுபடை – வேளாண்மை செய்யப் பயன்படும் கருவிகள்
- கோணி – சாக்கு
- நடை – சாலையில் செல்லும் வண்டிகள்
- பறப்பு – பறக்கும் வாகூர்தி முதலியன
- ஞாலம் – உலகம்
- உவந்து செய்வோம் – விரும்பிச் செய்வோம்
- தமிழ்மகள் – ஔவையார்
- மேலவர் – மேலோர்
- கீழவர் – கீழோர்
- மற்றோர் – பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர்
- நெறியினின்று – அறநெறியில் நின்று
கவிஞர் குறிப்பு — மகாகவி பாரதியார்
- பாரதியார் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்.
- 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்று போற்றப்பட்டவர்.
- விடுதலைப் போராட்ட வீரர்.
- கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே.
- வாழ்ந்த காலம்: 11.12.1882 முதல் 11.09.1921 வரை.
- 'வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்' எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி நம் பாடத்தில் இடம்பெற்றுள்ளது.
கவிதையின் சாரம்
முதல் பாடல்: ஆயுதங்கள், காகிதம், ஆலைகள், கல்விச் சாலைகள் உருவாக்குவோம். ஓய்ந்திருக்கவோ, தலை சாய்க்கவோ மாட்டோம். உண்மை பேசி, தாராளமாகக் கொடுப்போம்.
இரண்டாம் பாடல்: குடைகள், வேளாண் கருவிகள், சாக்குகள், இரும்புப் பொருட்கள், நிலவண்டி, விமானம், உலகையே நடுங்கச் செய்யும் கப்பல்கள் செய்வோம்.
மூன்றாம் பாடல்: காவியங்கள், காடு, கலை, கொல்லர் தொழில், ஓவியங்கள், ஊசிகள் உருவாக்குவோம். உலகின் அனைத்துத் தொழில்களையும் விரும்பிச் செய்வோம்.
நான்காம் பாடல்: ஔவையார் கூறியபடி சாதி இரண்டே உள்ளன — நீதி நெறியில் நின்று பிறருக்கு உதவுவோர் மேலோர்; மற்றவர் கீழோர். இதுவே நேர்மையான வாழ்க்கை நெறி.
மாதிரி வினாக்கள்
புறவய வினாக்கள்
- வண்மை – கொடை
- ஞாலம் – உலகம்
- உழுபடை – வேளாண்மை கருவிகள்
- எதிர்ச்சொல்: உண்மை ↔ பொய்மை; நல்ல ↔ தீய; மேலவர் ↔ கீழவர்
குறு வினாக்கள்
- பாரதியார் கருத்துப்படி மேலோர் என்பவர் — நீதி நெறியில் நின்று பிறருக்கு உதவுவோர்.
- பாரதியாரின் கனவுகளில் இரண்டு — கல்விச் சாலைகள் கட்டுவது; உலகையே நடுங்கச் செய்யும் கப்பல்கள் உருவாக்குவது.