நாலடியார்
பாடல்
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
பாடல்பொருள்
நாயின் கால்விரல்கள் நெருங்கி இருக்கும். அதனைப்போலச் சிலர் நம்மோடு நெருக்கமாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் ஈயின் கால் அளவுக்குக்கூட நமக்கு உதவ மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் நட்பால் நமக்கு என்ன பயன்?
வாய்க்கால், தொலைவிலுள்ள நீரைக் கொண்டுவரும்; அந்நீரை வயலுக்குப் பாய்ச்சி விளைய உதவும். வாய்க்காலைப்போல உதவும் மனிதர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்கள் நட்பை நாம் தேடிக்கொள்ளுதல் வேண்டும்.
சொற்பொருள்
- நாய்க்கால் – நாயின் கால்
- ஈக்கால் – ஈயின் கால்
- நன்கணியர் – நன்கு + அணியர்; அணியர் – நெருங்கி இருப்பவர்
- என்னாம் – என்ன பயன்?
- சேய்(மை) – தொலைவு
- செய் – வயல்
- அனையார் – போன்றோர்
நூல்குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துகளைக் கூறுவது. 'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
பதினெண்கீழ்க்கணக்கு – விளக்கம்
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள். இவற்றை, 'மேல்கணக்கு நூல்கள்' எனக் கூறுவர்.
சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு, 'பதினெண்கீழ்க்கணக்கு' என வழங்கப்படுகிறது. இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.
நட்பின் சிறப்பு
நாலடியார் கூறும் நட்பின் இயல்பு: உண்மையான நண்பர்கள் தொலைவில் இருந்தாலும் நம்மை தேடி வந்து உதவுவார்கள். வெறும் நெருக்கம் மட்டுமே கொண்டு உதவாதவர்களின் நட்பு பயனற்றது. வாய்க்கால் தொலைவிலுள்ள நீரை வயலுக்கு கொண்டு வருவதுபோல், நல்ல நண்பர்களும் தொலைவிலிருந்து உதவுவார்கள்.