தமிழ்த்தாத்தா உ. வே. சா.
உ. வே. சா. – அறிமுகம்
உ. வே. சா. என்பது உத்தமதானபுரம் வேங்கடசுப்பு வின் மகனார் சாமிநாதன் என்பதன் சுருக்கம். அவரது இயற்பெயர் வேங்கடரத்தினம். அவரது ஆசிரியரின் பெயர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம். ஆசிரியர் அவருக்கு வைத்த பெயர் சாமிநாதன்.
பிறப்பு மற்றும் இறப்பு
- பிறந்த ஊர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
- பிறந்த நாள்: 19.02.1855
- இயற்கை எய்திய நாள்: 28.04.1942
ஓலைச்சுவடிகள் என்றால் என்ன?
அக்காலத்தில் தாளோ எழுதுகோலோ இல்லை. பனை ஓலையை பக்குவப்படுத்தி, அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர். அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு 'ஓலைச்சுவடி' என்று பெயர். அக்காலத்தில் இலக்கியங்களும் இலக்கணங்களும் ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டன.
ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது. எனவே முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
உ. வே. சா. வின் தமிழ்ப் பணி
உ. வே. சா., பழைய ஓலைச்சுவடிகளில் இருந்த அருந்தமிழ் இலக்கியங்களை தேடி எடுத்து, அவற்றில் இருந்த ஈரத்தை துடைத்து வாசித்தார். பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பதற்காக வெவ்வேறு சுவடிகளை வைத்துப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே, அவற்றை அச்சுக்கு அனுப்பினார்.
அவ்வாறு எழுதப்பட்ட சுவடிகளை வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி, அச்சிட்டுப் புத்தகமாக வழங்கினார் உ. வே. சாமிநாதர். நாம் அவ்விலக்கியங்களைப் படிப்பதற்காக அவர் ஓய்வின்றி உழைத்தார். அதனால், அவரைத் தமிழ்த்தாத்தா உ. வே. சா. என்று அன்போடும் உரிமையோடும் நாம் அழைக்கிறோம்.
குறிஞ்சிப்பாட்டு நூலை வெளியிட உ. வே. சா. மேற்கொண்ட முயற்சி
குறிஞ்சிப்பாட்டு என்னும் சுவடியை அச்சில் பதிப்பிப்பதற்காக எழுதிக்கொண்டிருந்தார். அச்சுவடியில் தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இருந்தன. அவற்றுள், தொண்ணூற்று ஆறு பூக்களுடைய பெயர்கள் மட்டுமே தெளிவாக இருந்தன; மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவாக இல்லை.
ஆனால், மூன்றே மூன்று பூக்கள் தானே தெரியவில்லை என அவர் விட்டுவிடவில்லை. அந்தப் பூக்களின் பெயர்கள் தெளிவாக உள்ள சுவடி யாரிடமாவது இருக்காதா என்று மறுபடியும் ஊரூராக, வீடுவீடாகத் தேடிச் சென்றார். பல மாதங்கள் கழித்து, அவர் தேடிய பூக்களின் பெயர்கள் உள்ள சுவடி ஒன்று கிடைத்தது. அதன் பிறகே அந்நூலை அச்சுக்குக் கொடுத்தார். இது அவரது சுறுசுறுப்பான ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் காட்டுகிறது.
ஓலைச்சுவடி காத்த சம்பவம்
ஒரு முதியவர் "தங்கள் வீட்டில் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய இருப்பதாகக் கேள்விப்பட்டு வந்தேன்" என்று ஒரு வீட்டுக்காரரிடம் கேட்டார். அந்த வீட்டுக்காரர் "நாளை ஆடிப்பெருக்கு, விடியற்காலையில் ஆற்றில் விடுவதற்காக வீட்டில் கொஞ்சம் ஓலைச்சுவடிகள் வைத்திருக்கிறேன்" என்று கூறி அவரை விரட்டினார்.
அந்த முதியவர் அன்றிரவு வேறொரு வீட்டுத்திண்ணையில் படுத்துக்கொண்டார். குளிரும் பனியும் அவரை வாட்டின. விடியற்காலையில் கோழி கூவியதும் அந்த வீட்டுக்காரர் ஓலைச்சுவடிகளுடன் ஆற்றுக்குச் செல்வதைப் பார்த்தார். அவரை பின்தொடர்ந்து சென்று, ஆற்றில் வீசிய ஓலைச்சுவடிகளை தேடி எடுத்தார். அவற்றில் இருந்த ஈரத்தை தன் வேட்டியால் துடைத்தார். அவர் தேடித்தேடி அலைந்த அருந்தமிழ் இலக்கியங்கள் சில அச்சுவடிகளில் இருந்தன. அந்தப் பெரியவரே உ. வே. சாமிநாதர். இந்த நிகழ்வு இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்னும் ஊரில் நடைபெற்றது.
உ. வே. சா. பதிப்பித்த நூல்கள்
- எட்டுத்தொகை – 8
- பத்துப்பாட்டு – 10
- சீவகசிந்தாமணி – 1
- சிலப்பதிகாரம் – 1
- மணிமேகலை – 1
- புராணங்கள் – 12
- உலா – 9
- கோவை – 6
- தூது – 6
- வெண்பா நூல்கள் – 13
- அந்தாதி – 3
- பரணி – 2
- மும்மணிக்கோவை – 2
- இரட்டைமணிமாலை – 2
- பிற பிரபந்தங்கள் – 4
ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்
- கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை
- அரசு ஆவணக் காப்பகம், சென்னை
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
- சரசுவதி நூலகம், தஞ்சாவூர்
சிறப்புக் குறிப்புகள்
- உ. வே. சா. அவர்களின் பெயரால் 1942இல் நிறுவப்பட்ட டாக்டர் உ. வே. சா. நூல்நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பேசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
- உ. வே. சா. அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு. போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
- நடுவண் அரசு, உ. வே. சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006 ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
- அவர் தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது 'என் சரிதம்' என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
- உ. வே. சா. நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.