திருக்குறள் – அன்புடைமை
ஆசிரியர் குறிப்பு
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர். இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவர் சென்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.
நூல்குறிப்பு
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுகிறது. திருக்குறளில் 'அன்புடைமை', 'இனியவை கூறல்' ஆகிய அதிகாரங்கள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044
அன்புடைமை – குறட்பாக்கள் மற்றும் பொருள்
குறள் 1: அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
பொருள்: அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை; அன்புக்கு உரியவரின் துன்பத்தைப் பார்த்தாலே அன்பு, கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.
ஆர்வலர் – அன்புடையவர்; புன்கணீர் – துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்; பூசல் தரும் – வெளிப்பட்டு நிற்கும்.
குறள் 2: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
பொருள்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது என்று எண்ணுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
என்பு – எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.
குறள் 3: அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.
பொருள்: உடம்போடு உயிர் இணைந்து இருப்பதனைப்போல, வாழ்க்கை நெறியோடு அன்பு இணைந்து இருக்கிறது.
வழக்கு – வாழ்க்கைநெறி; ஆருயிர் – அருமையான உயிர்; என்பு – எலும்பு.
குறள் 4: அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.
பொருள்: அன்பு விருப்பத்தைத் தரும். விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பெருஞ்சிறப்பைத் தரும்.
ஈனும் – தரும்; ஆர்வம் – விருப்பம்; நண்பு – நட்பு.
குறள் 5: அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.
பொருள்: அன்போடு பொருந்திய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்தவர் உலகத்தில் மகிழ்ச்சி உடையவர் ஆவர்.
வையகம் – உலகம்; என்ப – என்பார்கள்.
குறள் 6: அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
பொருள்: அன்பு அறத்தை மட்டும் சார்ந்தது என்று கூறுவோர் அறியாதவர்; வீரத்திற்கும் அன்புதான் துணை.
மறம் – வீரம்; கருணை, வீரம் இரண்டிற்குமே அன்புதான் அடிப்படை.
குறள் 7: என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
பொருள்: எலும்பு இல்லாத உயிர்களை வெயில் வருத்தி அழிப்பதுபோல, அன்பில்லாத உயிர்களை அறம் வருத்தி அழிக்கும்.
என்பிலது – எலும்பு இல்லாதது (புழு); அன்பிலது – அன்பில்லாத உயிர்கள்.
குறள் 8: அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று.
பொருள்: பாலை நிலத்தில் உள்ள வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோல, நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை தளிர்க்காது.
வன்பாற்கண் – பாலை நிலத்தில்; தளிர்த்தற்று – தளிர்த்ததுபோல; வற்றல்மரம் – வாடிய மரம்.
குறள் 9: புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
பொருள்: நெஞ்சில் அன்பு இல்லாதவர்க்குக் கை, கால் முதலிய உடல் உறுப்புகளால் என்ன பயன்?
புறத்துறுப்பு – உடல் உறுப்புகள்; எவன் செய்யும் – என்ன பயன்?; அகத்துறுப்பு – மனத்தின் உறுப்பு, அன்பு.
குறள் 10: அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
பொருள்: அன்பு செய்வதுதான் உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளம். அன்பில்லாதவர் உடம்பு வெறும் தோலால் மூடப்பட்ட எலும்புதான். அங்கு உயிர் இல்லை.
அஃதிலார் – அன்பு இல்லாதவர்; என்புதோல் போர்த்த உடம்பு – தோலால் மூடப்பட்ட எலும்பு.